எஜமானர்கள் 'மூட் அவுட்' ஆவதை மூச்சை வைத்தே உணரும் நாய்கள் - அறிவியல் ஆய்வில் அதிசய தகவல்

நாய்

பட மூலாதாரம், Victoria Gill

படக்குறிப்பு, நாயின் மூக்கு ஒரு சக்தி வாய்ந்த ரசாயன கண்டுபிடிப்பான்.
    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்

அறிவியல்பூர்வமாக நடத்தப்பட்ட மோப்ப சோதனையில், நாய்கள் எவ்வளவு நேர்த்தியாக மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துள்ளன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

நம்முடைய சுவாசம் மற்றும் வேர்வை வழியாக நாய்களால் மன அழுத்தத்தை உணர முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தங்கள் எஜமானர்களால் முன்வந்து கொடுக்கப்பட்ட நான்கு நாய்களுக்கு, மூன்று வாசனைக் குப்பிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் பிறகு 700 முறை நடந்த சோதனையில் 650 முறை மன அழுத்தத்திற்குள்ளான நபரிடமிருந்து எடுக்கப்பட்ட வியர்வை அல்லது சுவாச மாதிரி இருந்த குப்பியை நாய்கள் சரியாக அடையாளம் கண்டன.

மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு பயிற்சி அளிக்க தங்கள் ஆராய்ச்சி உதவும் என்று நம்புகிறார்கள் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, பிளாஸ் ஒன் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நாய்கள் வாசனைகள் மூலம் உலகைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்கின்றன. போதைப் பொருள்கள், வெடிபொருட்கள் மற்றும் சில புற்றுநோய்கள், நீரிழிவு, கொரோனா உள்ளிட்ட நோய்களைக் கண்டறிய நாய்களின் அதீத வாசனை கண்டறியும் திறன்கள் உதவியுள்ளன.

"சில நோய்கள், உடல் நிலைகளுடன் தொடர்புடைய மனித வாசனையை நாய்களால் பிரித்து உணர முடியும் என்பதற்கு நம்மிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன . ஆனால், நமது உளவியல் நிலையில் உள்ள வேறுபாடுகளை அவற்றால் உணர முடியும் என்பதற்கு நம்மிடம் நிறைய ஆதாரங்கள் இல்லை" என்கிறார் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரான கிளாரா வில்சன்.

எப்படி நடத்தப்பட்டது இந்த சோதனை?

pet animal

பட மூலாதாரம், Getty Images

36 தன்னார்வலர்கள் கடினமான கணிதத்திற்கு விடையளிப்பதற்கு முன்னரும் பின்னருமான தங்கள் மன அழுத்த அளவைப் பதிவு செய்தனர்.

அவர்கள் அனைவரிடமிருந்தும் ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பு வேகமும் அதிகரிப்பதற்கு முந்தைய அல்லது பிந்தைய நிலையில் சுவாசம் அல்லது வியர்வை மாதிரிகள் பெறப்பட்டன.

மன அழுத்தத்திற்குள்ளான மாதிரியின் முன்பு ட்ரியோ, ஃபிங்கல், சூட் மற்றும் வின்னி ஆகிய நாய்கள் அசையாமல் நின்றாலோ அல்லது அமர்ந்தாலோ, அவற்றுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, நாய் வளர்ப்பவரா நீங்கள்? - சென்னையில் லைசென்ஸ் கட்டாயம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: