You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு
- எழுதியவர், பல்லவ் கோஷ்
- பதவி, அறிவியல் நிருபர்
38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர்.
இது 'கோகோ' (Gogo) என்ற மீனுக்கு சொந்தமான இதயம். தற்போது, இந்த மீன் இனம் அழிந்து போய்விட்டது.
பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த கண்டுபிடிப்பு, ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இது 'சயின்ஸ்' சஞ்சிகையில் வெளியானது.
தங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பை, தாமும் தமது சக ஊழியர்களும் நிகழ்த்திய தருணம் பற்றி பிபிசி நியூஸிடம் கர்டின் பல்கலைக்கழக பேராசிரியரும் முதன்மை ஆய்வாளருமான கேட் டிரினாஜ்ஸ்டிக் தெரிவித்தார்.
"நாங்கள் கணினி முன் இருந்தோம். நாங்கள் ஒரு இதயத்தை கண்டறிந்தோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இது எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது," என்றார்.
பொதுவாக, மென்மையான திசுக்களை விட எலும்புகள்தான் புதைபடிவங்களாக மாறுகின்றன. ஆனால் கிம்பர்லியில் உள்ள இந்த பகுதியில், கல்லீரல், வயிறு, குடல் மற்றும் இதயம் உட்பட மீனின் உள் உறுப்புகளில் பலவற்றைப் தாதுக்கள் பாதுகாத்துள்ளன. இதனை 'கோகோ பாறை உருவாக்கம்' என்று அழைக்கப்படுகிறது.
"இது நமது சொந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம்," இது என்று பேராசிரியர் டிரினாஜ்ஸ்டிக் கூறினார்.
"இது நாம் மிக தொடக்கத்தில் உருவாகியிருக்கும் உடல் அமைப்பை காட்டுகிறது. இந்த புதைபடிவங்களில் இதை முதன்முறையாகப் பார்க்கிறோம்."
அவருடன் இணைந்து பணியாற்றிய, அடிலெய்டில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் லாங், இந்த கண்டுபிடிப்பை "மனதைக் கவரும், ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பு" என்று விவரித்தார்.
"இவ்வளவு வயதான விலங்குகளின் மென்மையான உறுப்புகளைப் பற்றி இதுவரை எங்களுக்கு எதுவும் தெரியாது," என்று அவர் கூறினார்.
கோகோ மீன் என்பது பிளாகோடெர்ம்ஸ் (placoderms) எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய மீன் வகைகளில் முதன்மையானது. இவை தாடைகள் மற்றும் பற்கள் கொண்ட முதல் மீன்கள். அவற்றிற்கு முன், மீன்கள் 30 செ.மீ.க்கு மேல் பெரிதாக இல்லை. ஆனால் பிளாக்கோடெர்ம்கள் 29.5 அடி (9மீ) நீளம் வரை வளரக்கூடியவை.
பிளாகோடெர்ம்கள் என்பது 6 கோடி ஆண்டுகளாக நமது புவியில் ஆதிக்கம் செலுத்தும் உயிரினங்களின் வடிவமாக இருந்தன. நமது பூமியில் முதல் டைனோசர்கள் நடமாடுவதற்கு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவை இருந்தன.
கோகோ மீன் புதைபடிவத்தின் ஸ்கேன் இந்த பழமையான மீன்களின் இதயம் எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானது என்பதைக் காட்டுகிறது.
இது மனித இதயத்தைப் போன்ற அமைப்பில், ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு இதய அறைகளைக் கொண்டிருந்தன. இந்த இதயம் மிகவும் திறம்பட இயங்கக்கூடியதாகவும், மெதுவாக நகரும் மீனில் இருந்து வேகமாக நகரும் வேட்டையாடும் உயிரினமாக மாற்றும் முக்கியமான படியாகவும் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதான் அவற்றை முன்னோக்கி சென்று, வேட்டையாடும் உயிரினமாக மாற்றியது என்று பேராசிரியர் லாங் கூறுகிறார்.
இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவற்றின் உடலில் இதயம் ஆரம்பநிலை மீன்களைவிட மிகவும் முன்னேறி இருந்தது.
அவற்றின் உடலில் இதயம் அமைந்துள்ள இடம் கோகோ மீனின் கழுத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. மேலும், பரிணாம வளர்ச்சியில் பிற்காலத்தில் நுரையீரல் வளர்வதற்கான இடத்தை உருவாக்குவதாகவும் இருந்துள்ளது.
பிளாகோடெர்ம்கள் பற்றிய ஆராய்ச்சியில் உலகில் முன்னணியில் உள்ள லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் டாக்டர் ஜெரினா ஜோஹன்சன், இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்றும், மனித உடல் இப்போது உள்ளபடி ஏன் இருக்கிறது என்பதை விளக்க உதவுவதாகவும் உள்ளது என்று கூறினார்.
பேராசிரியர் டிரினாஜ்ஸ்டிக் குழுவை சேராதவர் இவர்.
"நீங்கள் பார்க்கும் பல விஷயங்கள் இன்னும் நம் உடலில் உள்ளன. உதாரணமாக, தாடைகள் மற்றும் பற்கள். மீனுக்கு பக்கவாட்டிலும், பின்புறத்திலும் இருக்கும் துடுப்பு போன்ற உறுப்பு (fin), நமது கைகளாவும் கால்களாகவும் உருவாயின.
."இந்த ப்ளாகோடெர்ம்களில் இன்று கழுத்து, இதயத்தின் வடிவம், அமைப்பு மற்றும் உடலில் அதன் நிலை போன்ற பல உறுப்புகள் பரிணமிப்பதை நாம் காண்கிறோம். "
ஆஸ்திரேலிய ஆராய்ச்சிக் குழுவிலிருந்து சுயாதீனமான லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பிளாகோடெர்ம் நிபுணரான டாக்டர் மார்ட்டின் பிரேஸோவின் கூற்றுப்படி, இந்த கண்டுபிடிப்பு பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியை விளக்குகிறது
"இந்த முடிவைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார்.
"நானும் எனது ஊழியர்களும் ஆய்வு செய்யும் மீன்கள் நமது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். இது மனிதர்கள், நிலத்தில் வாழும் பிற விலங்குகள் மற்றும் இன்று கடலில் வாழும் மீன்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்," என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்