புற்றுநோய், காற்று மாசு இடையே தொடர்பு என்ன? - உடல்நலம் குறித்த புதிய அறிவியல் ஆய்வு

    • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்
    • பதவி, சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர்

காற்று மாசு, புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புற்றுநோய் கட்டிகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என இந்த ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டன் பிரான்சிஸ் க்ரிக் மையம் நடத்திய ஆய்வில், காற்று மாசால் நம் உடலில் சேதமடைந்த பழைய உயிரணுக்கள் உயிர்பிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் சார்லஸ் ஸ்வாண்டன் கூறுகையில், இந்த ஆய்வு நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

எனினும், இதுபோன்ற காரணிகளால் உருவாகக்கூடிய புற்றுநோய்களை, அதற்குரிய மருந்துகள் மூலம் தடுக்க வாய்ப்புள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த ஆய்வில், மனித உடலில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய நூற்றுக்கணக்கான காரணிகள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் உயிரணுக்களில் இருந்தே புற்றுநோய் பரவும் என வல்லுநர்களால் கருதப்படுகிறது. அந்த உயிரணுக்கள் உச்சபட்ச நிலையை அடையும் வரை, அவற்றின் மரபணுக் குறியீடுகளில், அல்லது டி.என்.ஏ-வில், தொடர்ந்து மரபணு பிறழ்வுகள் நிகழும். பின்னர் இது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து புற்றுநோயாகிறது.

எனினும், இதுவரையிலான இந்தப் பார்வைக்கு இப்போது சிக்கல் உண்டாகியுள்ளது. ஏனெனில், ஆரோக்கியமான திசுக்களிலும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் மரபணு பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய, காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் டி.என்.ஏ-வை சேதப்படுத்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது?

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாறுபட்ட பார்வையை முன்வைத்துள்ளனர். ஏற்கனவே அணுக்களின் டி.என்.ஏ-வில் உள்ள சேதாரங்கள், நாம் வளரும்போதும், மூப்படையும்போதும் தீவிரமாகின்றன. அதை புற்றுநோய் காரணியாக மாற்ற ஓர் உந்துவிசை தேவைப்படுகிறது.

புகை பிடிக்காதவர்களுக்கும் ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதை ஆராய்ந்ததன் மூலம் அது கண்டறியப்பட்டது. பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமே உண்டாகிறது. எனினும், பிரிட்டனில் 10ல் ஒருவர் காற்று மாசால் நுரையீரல் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர்.

மனித ரோமத்தைவிட குறைவான விட்டத்தை உடைய PM2.5 எனப்படும் துகள்மப் பொருளால் உண்டாகும் காற்று மாசில் க்ரிக் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர்.

தொடர்ந்து மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கீழ்வருவனவற்றை அவர்கள் கண்டறிந்தனர்.

  • புகை பிடிக்காமலேயே நுரையீரல் புற்றுநோய் உண்டாவது காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் வெகுவாக உள்ளது.
  • பி.எம் 2.5 துகள்களை சுவாசிப்பது இன்டெர்ளுகின் - 1 - பீட்டா (Interleukin 1 beta) எனும் எச்சரிக்கை வேதிப்பொருள் நுரையீரலில் சுரக்க வைக்கிறது.
  • இது நுரையீரலில் அழற்சியை உண்டாக்குவதுடன், அதில் உள்ள அணுக்கள் சேதாரங்களை சரிய செய்யத் தூண்டுகிறது.
  • 50 வயதான ஒருவரின் நுரையீரலில் ஆறு லட்சம் அணுக்களுக்கு ஓர் அணு எனும் விகிதத்தில் புற்றுநோயை உண்டாக்கும் வல்லமை உடைய மரபணுப் பிறழ்வு உள்ளது.
  • இந்தத் தன்மைகள் வயது மூப்படையும்போது உண்டாகின்றன. ஆனால், எச்சரிக்கை வேதிப்பொருள் சுரந்து, புற்றுநோய் உண்டாக்குபவையாக மாறும் வரை அவை நலம் மிக்க அணுக்களாகவே தெரிகின்றன.

காற்று மாசால் உண்டாகும் புற்றுநோய் பாதிப்புகளை மருந்துகள் மூலம் தடுக்க, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், தற்போதைய இந்த ஆய்வுகள், காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் மூலம் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிய உதவியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் வாழும் மக்களில் 99 சதவீதம் பேர் காற்று மாசால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், புகை பிடிக்காதவர்களுக்கும் எதனால் புற்றுநோய் வரும் என்ற உண்மை நிலையை இந்த ஆய்வு முடிவுகள், வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும் க்ரிக் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் எமிலியா லிம் குறிப்பிடுகிறார்.

மரபணு பிறழ்வுகளால் புற்றுநோய் சாத்தியமா?

மரபணு பிறழ்வுகள் மட்டுமே புற்றுநோயை உண்டாக்கப் போதாது என்றும் இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. அவை புற்றுநோயை உண்டாக்க கூடுதல் காரணிகள் தேவை.

புற்றுநோய் கட்டிகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த புரிதலை மறு சிந்தனைக்கு உள்ளாக்கியதே, தமது ஆய்வகத்தில் கண்டறியப்பட்டதில் மிகவும் வியப்பளிக்கும் வகையில் இருப்பது என்று பேராசிரியர் ஸ்வாண்டன் கூறுகிறார்.

நீங்கள் அதிகம் காற்று மாசு உள்ள பகுதியில் வசிக்கும்போது புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மருந்து எடுத்துக்கொள்வது முற்றிலும் பலனளிக்காது என்பது தெரியவந்துள்ளது.

இந்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் மருத்துவப் புற்றுநோயியலுக்கான ஐரோப்பிய சங்கத்தின் மாநாடு ஒன்றில் அறியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: