டைனோசர் வரலாற்றை மாற்றும் கண்டுபிடிப்பு: 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'சூப்பர் கண்ட' டைனோசர்

    • எழுதியவர், ஷிங்கை நியோகா & ஆலிவர் ஸ்லோ
    • பதவி, பிபிசி நியூஸ், ஹராரே & லண்டன்

230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்ரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எம்பிரேசரஸ் ராத்தியின் (Mbiresaurus raathi) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்டர் உயரம் கொண்டதாகவும், இரண்டு கால்களில் ஓடியதாகவும், நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான ஒழுங்கற்ற பற்கள் கொண்டதாகவும் இருந்தன.

நான்கு கால்களில் நடக்கும் சௌரோபோட் (sauropod) என்ற இனத்துடன் சம்பந்தப்பட்ட சௌரோபோடோமார்ப் (sauropodomorph) வகையைச் சேர்ந்தது இது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜாம்பேசி (Zambezi) பள்ளத்தாக்குக்கு இரண்டு முறை ஆய்வுப்பயணம் மேற்கொண்டப்போது, விஞ்ஞானிகள் இதன் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தனர்.

"ஆரம்பகால டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்போது, ட்ரயாசிக் (Triassic) காலத்தின் படிமங்கள் அரிதானவை," என்று ஜிம்பாப்வேயின் தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களின் துணை இயக்குநரும், இந்த ஆய்வுப்பயணத்தில் இருந்த ஒருவருமான டார்லிங்டன் முனிக்வா பிபிசியிடம் கூறினார்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த அந்த சகாப்தத்தின் புதைபடிவங்கள், தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் இப்போது ஜிம்பாப்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

உலகம் ஒரு பெரிய கண்டமாக இருந்தபோதும், இந்த நாடுகளைப் போல் ஜிம்பாப்வே ஒரே நில நேர்கோட்டில் இருந்தபோதும், ஆரம்பகால டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி மற்றும் இடம்பெயர்வு குறித்து புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று கருதுவதாக அவர் கூறினார்.

பல தசாப்தங்களாக இப்பகுதியில் உள்ள மற்ற புதைபடிவங்களைப் பற்றி ஜிம்பாப்வே அரசு அறிந்திருக்கிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வு தேவைப்படும் தளங்கள் இருப்பதாக முனிக்வா கூறினார். இதற்கான நிதி கிடைப்பதைப் பொருத்து ஆய்வு செய்யலாம் என்றும் அவர் கூறுகிறார்.

"டைனோசர்கள் உலகம் முழுவதும் வாழவில்லை என்று காட்டுகிறது. ஆரம்பத்திலிருந்தே உலகை ஆளவில்லை என்பதை இது காட்டுகிறது," என்று இந்த பயணத்தில் ஈடுபட்ட மற்றொரு விஞ்ஞானி கிறிஸ்டோபர் கிரிஃபின் பிபிசியிடம் கூறினார்.

"டைனோசர்கள் மற்றும் அவைகளுடன் வாழ்ந்த விலங்குகளும் தெற்கில் உள்ள ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்ந்ததாக தெரிகிறது. அது இன்று தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பகுதிகளாக அறியப்படுகிறது,".

"ஆப்பிரிக்காவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழமையான டைனோசர்," என்று அவர் கூறினார்.

கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் பழங்காலவியல் நிபுணரான பேராசிரியர் அனுசுயா சின்சாமி-டுரான் பிபிசியிடம் பேசுகையில், டிப்ளோடோகஸ் (diplodocus) மற்றும் ப்ரோன்டோசொரஸ் ( brontosaurus) ஆகியவற்றை உள்ளடக்கிய சாரோபாட் டைனோசர்களை தோற்றுவித்த பரம்பரையின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது," என்று கூறினார்.

"டைனோசர்கள் உருவாகும் போது, ​​அவை வெவ்வேறு கண்டங்களில் வாழ்ந்தன. ஆனால் அவை வறண்ட இடத்திற்கு பதிலாக வெப்பமான ஈரப்பதமான சூழலைப் பின்பற்றி வாழ்ந்ததாகத் தெரிகிறது. அந்தப் பகுதியிலிருந்து இன்னும் அதிகமாக கண்டுபிடிக்கப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு நடந்த பகுதியில், சமீபத்திய எரிவாயு சுரங்க ஆய்வுகள் நடந்ததாக அவர் கூறினார்.

"அவர்கள் புதைபடிவங்களை எதிர்கொண்டால், அவர்கள் அவற்றை அருங்காட்சியகங்களில் ஒப்படைப்பதை உறுதிசெய்ய ஒரு கடுமையான வழிமுறை உள்ளது என்று நான் கருதுகிறேன். ஆகவே, நாங்கள் அந்த படிமங்களை இழக்க மாட்டோம்," என்று அவர் கூறினார்.

எம்பிரேசரஸ் ராத்தியின் (Mbiresaurus raathi) முழுமையான எலும்புக்கூடு ஜிம்பாப்வேயின் தெற்கு நகரமான புலவாயோவில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் ஓர் அறையில் பாதுகாக்கப்பட்டது. இது ட்ரயாசிக் காலத்தின் கார்னியன் கட்டத்தில் இருந்த காலம் என்று கருதப்படுகிறது. அப்போது, ஜிம்பாப்வே மிகப்பெரிய சூப்பர் கண்டமான பாங்கேயாவின் ஒரு பகுதியாக இருந்தது.

இன்றைய ஜிம்பாப்வே அமைந்துள்ள உயரமான நில நேரக்கோடு ஈரப்பதமானவை மற்றும் ஏராளமான தாவரங்களைக் கொண்டிருந்தன. இந்த சூழலில் டைனோசர்கள் எளிதாக வாழ்ந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: