You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்வெளியில் 'உயிர்' இருக்கிறதா? ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் கார்பன் டை ஆக்சைடு கண்டுபிடித்ததால் என்ன பயன்?
சூரியக்குடும்பத்துக்கு வெளியே உள்ள கோளில் கார்பன்-டை-ஆக்சைடுக்கான முதல் தெளிவான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி. 700 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும், வாயுக்களால் நிறைந்த ராட்சத கிரகத்தின் மூலம் கவனிக்கப்பட்ட தகவல்கள் மூலம் இந்த கிரகத்தின் உருவாக்கம் பற்றிய முக்கியமான நுணுக்கங்களை அறிந்துகொள்ள முடியும்.
இதற்கு முன், 4.6 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த உடுத்திரள் கூட்டத்தையும், அதன் பின்னணியில் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பேரண்டத்தின் காட்சியையும் காட்டிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்தமுறை கார்பன் டை ஆக்சைடுக்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவிக்கிறது.
'நேச்சர்' ஆய்விதழில் வெளியிட ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, இனிவரும் காலங்களில், சிறிய பாறைக் கோள்களின் மெல்லிய வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடைக் கண்டறிந்து அளவிட முடியும் என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது.வாஸ்ப் 39 பி (WASP-39 b) என்று பெயரிடப்பட்டுள்ளது அந்த வெளிக்கோள் (சூரியக்குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்). இது வியாழனின் நிறையில் ஒரு கால்பகுதியும் (சுமார் சனியைப் போன்றது) வியாழனை விட 1.3 மடங்கு பெரிய விட்டமும் கொண்ட ஒரு சூடான ராட்சத வாயுக்கோளாகும்.
அதன் மிருதுவான பெரிய வடிவம் (உப்பலான) அதன் உயர் வெப்பநிலையுடன் (சுமார் 1,600 டிகிரி பாரன்ஹீட் அல்லது 900 டிகிரி செல்சியஸ்) தொடர்புடையது . நமது சூரியக் குடும்பத்தில் உள்ள குளிர்ச்சியான, மிகவும் கச்சிதமான வாயுக்கோள்களைப் போலல்லாமல், WASP-39 b அதன் நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றுகிறது. அதாவது சூரியனுக்கும் புதனுக்கும் இடையிலான தூரத்தில் இது எட்டில் ஒரு பங்கு மட்டுமே.
பூமியின் நாட்கணக்குப்படி, இந்தக்கோளின் ஒரு சுற்று 4 நாட்களில் முடிவடைகிறது. இந்த கோள், பயணிக்கும் போது அல்லது நட்சத்திரங்களின் முன் கடந்து செல்லும் போது அதன் முதன்மை நட்சத்திரம் தவிர மற்றவற்றின் ஒளி, அவ்வப்போது மங்குவதன் அடிப்படையில், 2011 ஆம் ஆண்டு இல் முதல்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
நாசாவின் ஹப்பிள் மற்றும் ஸ்பிட்சர் ஆகிய விண்வெளி தொலைநோக்கிகள் உட்பட பிற தொலைநோக்கிகளின் முந்தைய அவதானிப்புகள், இந்தக் கோளின் வளிமண்டலத்தில் நீராவி, சோடியம், பொட்டாசியம் ஆகியவை இருப்பதை வெளிப்படுத்தின. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு உணர்திறன் மூலமாக இப்போது இந்த கோளில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது நாசா.
இதுதான் முதல்முறை
ஆராய்ச்சி குழு அதன் WASP-39b இன் அவதானிப்புகளுக்கு ஜேம்ஸ்வெப்பின் NIRSpec ஐப் (Webb's Near-Infrared Spectrograph) பயன்படுத்தியது. அப்போது, இந்தக்கோளின் வளிமண்டலத்தை அலை வரைபடமாக வரைந்தபோது, அதில் 4.1 முதல் 4.6 மைக்ரான்களுக்கு இடையில் (மலை இருக்கும் பகுதி) கார்பன் டை ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தது. சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடுக்கான தெளிவான, விரிவான ஆதாரம் கிடைப்பது இதுதான் முதல்முறை.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மாணவரும், இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவான, "பயணிக்கும் வெளிக்கோள்களின் முதிர்ச்சியடையாத வெளிப்பாட்டு அறிவியல்" (JWST Transiting Exoplanet Community Early Release Science) குழுவின் உறுப்பினருமான ஜாபர் ருஸ்தம்குலோவ், "என் திரையில் அந்த தரவைப் பார்த்தவுடன், அந்த மிகப்பெரிய, கார்பன் டை ஆக்சைடு அம்சம் என்னை இழுத்தது. இது ஒரு சிறப்பு தருணம். அதாவது வெளிக்கோள் அறிவியலில் ஒரு முக்கியமானநிலை அது" என்கிறார். இவ்வளவு நுட்பமான வேறுபாடுகளை இதற்கு முன் எந்த ஆய்வகமும் அளவிடவில்லை.
இப்படி, கார்பன் டை ஆக்சைடின் தெளிவான சமிக்ஞையைக் கண்டறிவது சிறிய மற்றும் நிலப்பரப்பு-அளவிலான கிரகங்களின் வளிமண்டலங்களைக் கண்டறிவதற்கு உதவும் என்று குழுவை வழிநடத்தும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நடாலி படால்ஹா கூறினார்.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் உள்ள கலவையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால் அது கிரகத்தின் தோற்றம் மற்றும் அது எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகள் அந்தக் கோள் உருவாக்கத்தின் கதையின் உணர்திறன் ட்ரேசர்கள்" என்று இந்த ஆராய்ச்சி குழுவின் மற்றொரு உறுப்பினரான அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் மைக் லைன் கூறினார்.
"இந்த கார்பன் டை ஆக்சைடு அம்சத்தை அளவிடுவதன் மூலம், எவ்வளவு திடமான மற்றும் எவ்வளவு வாயு பொருட்கள் இந்தக் கோள் உருவாக பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் தீர்மானிக்க முடியும். இனி வரவிருக்கும் தசாப்தத்தில், JWST பல்வேறு கோள்களுக்கு இந்த அளவீட்டைச் செய்யும், அத்துடன், இது கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதுடன் நமது சொந்த சூரிய குடும்பத்தின் தனித்தன்மை பற்றிய நுண்ணறிவையும் வழங்கும்" என்கிறார் மைக்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்