குடலில் உள்ள நுண்ணுயிரிகள் நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

நம் உடலின் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு தீங்கானவை என நீங்கள் நினைத்திருந்தால் அது உண்மையல்ல.

நமது உடலின் குடல் நாளத்தில் பல லட்சம் கோடி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஆர்க்கியா மற்றும் புரோட்டோசோவா உள்ளிட்ட ஒற்றை செல் உயிரினங்கள் அடங்கியுள்ளன. நமது உணவிலிருந்து நார்ச்சத்தை நொதிக்க உதவுதல், வைட்டமின்களை ஒருங்கிணைத்தல், வளர்சிதை மாற்றத்தை ஒருங்கமைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளை இவை செய்கின்றன.

ஆனால், உடல்பருமன், இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் இந்த பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மை குறைந்து காணப்படுகிறது. குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்களின் சில இனங்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பது சில நோய்களுக்கான காரணியாக இருக்கிறது. ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினரிடையே தண்டு வடிவிலான ஃபேகலிபாக்டீரியம் பிரவுஸ்னிட்ஸி (Faecalibacterium prausnitzii) எனப்படும் பாக்டீரியா, இயல்பு அளவைவிட குறைவாக இருப்பது, அழற்சி நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

நம்முடைய ஜீன்கள், நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மனச்சோர்வு, புகைப்பழக்கம், உணவுப்பழக்கம் உள்ளிட்டவை குடல் நாளத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை மாற்றுவதாக உள்ளது.

ஆனால், சில எளிமையான வாழ்வியல் பழக்கங்கள் மூலம் குடல் நுண்ணுயிரிகளை இயல்பான அளவில் வைத்திருக்க முடியும். அவை என்னென்ன? உடற்பயிற்சி எப்படி உதவுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்:

உடற்பயிற்சியின் மூலம் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்களை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்க முடியும். குறிப்பாக, தினசரி வேலைக்குப் பிந்தைய சீரான ஓட்டப்பயிற்சி (ஜாகிங்) சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சிக்கும் குடல் நாளத்தில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் இடையேயான இந்த வலுவான தொடர்பை கடந்த பத்து ஆண்டுகளாக விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. இதன் சிறப்பு என்னவென்றால், உடற்பயிற்சி எப்படி நமக்கு பயன்களை விளைவிக்கிறது என்பதில் இந்த ஆய்வு வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.

என்ன சொல்கின்றன ஆய்வுகள்?

  • வாரத்திற்கு மூன்று நாட்கள் என மொத்தம் எட்டு வாரங்களுக்கு 18-32 நிமிடங்கள் வரை ஏரோபிக் பயிற்சி மேற்கொள்வது குடல்நலத்தை மேம்படுத்தும்
  • 30-60 நிமிடங்கள் ஒட்டப்பயிற்சி மேற்கொள்வது அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லில் ஓடுவதும் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கும்
  • எப்போதும் உட்கார்ந்து இருப்பவர்களைவிட விளையாட்டு வீரர்களிடையே குடல் நாளத்தில் நுண்ணுயிரிகள் அதிகம் இருக்கிறது.

இல்லினாய் பல்கலைக்கழகத்தின் (University of Illinois Urbana) மனித உடல் இயக்கவியல் மற்றும் பொதுச் சுகாதாரம் பேராசிரியர் ஜெஃப்ரி வூட்ஸ் மற்றும் அதே பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி உடலியல் பேராசிரியராக உள்ள ஜேக்கப் ஆலன் இருவரும் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

எலிகளிடத்தில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இவர்கள், டுரிசிபேக்டர் (Turicibacter) என்ற பாக்டீரியா குறைவாக உள்ள எலிகளை ஒரு சக்கரத்தில் ஓடும்படி செய்துள்ளனர். இதன்மூலம் இவ்வகை பாக்டீரியாக்கள் அதிகமானது ஆய்வின்வழி தெரியவந்துள்ளது.

மேலும் உடற்பயிற்சியின் மூலம் ப்யூடிரேட் (butyrate) எனப்படும் குறிப்பிட்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ப்யூடிரேட் நார்ச்சத்தை நொதிக்க வைத்தல் மூலம் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த கொழுப்பு அமிலங்கள் எண்ணற்ற உடல்நல பலன்களுடன் தொடர்புடையதாக உள்ளது. நமது குடலில் உள்ள அழற்சி மற்றும் நோயெதிர்ப்பு செல்களை ஒருங்குபடுத்துவது உள்ளிட்ட பல வேலைகளை இந்த ப்யூடிரேட் செய்கிறது.

குடல் நாளத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் நலனை மேம்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது என்பதை மனிதர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. மிதமானது முதல் சில வீரியமான ஓட்டப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, எதிர்ப்புப் பயிற்கள் (resistance training) உள்ளிட்டவை குடல்நாளத்தில் உள்ள பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது உடல் மற்றும் மனநலத்துடனும் தொடர்புடையதாக உள்ளது. வாரத்திற்கு வெறும் மூன்று நாட்கள் என மொத்தம் எட்டு வாரங்களுக்கு 18-32 நிமிடங்கள் வரை ஏரோபிக் பயிற்சிகளுடன் எதிர்ப்புப் பயிற்சி மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

எப்போதும் உட்கார்ந்து இருப்பவர்களைவிட விளையாட்டு வீரர்களிடையே குடல் நாளத்தில் நுண்ணுயிரிகள் அதிகம் இருக்கிறது. உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுப்பழக்கத்தைக் கொண்டிருப்பது எப்போதும் சுறுசுறுப்பாக உள்ள பெண்களின் ஃபேகலிபாக்டீரியம் பிரவுஸ்னிட்ஸி மற்றும் ப்யூடிரேட் அளவு அதிகமாக உள்ளது.

பேராசிரியர்கள் ஜெஃப்ரி வூட்ஸ் மற்றும் ஜேக்கப் ஆலன் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் வழி 30-60 நிமிடங்கள் ஒட்டப்பயிற்சி மேற்கொள்வது அல்லது உடற்பயிற்சிக் கூடத்தில் டிரெட்மில்லில் ஓடுவது குடலில் உள்ள ஃபேகலிபாக்டீரியம் போன்ற ப்யூடிரேட் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பின்லாந்தில் உள்ள டுர்கு பல்கலைக்கழகத்தில் (University of Turku) கிளீனிக்கல் மெடிசின் துறை பேராசிரியர் ஜர்னா ஹன்னுகேய்னென் (Jarna Hannukainen) தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் , உடல்பருமனுடன் தொடர்புடைய குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாவின் அளவை குறைப்பதிலும் உடற்பயிற்சி பங்குவகிப்பதாக தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் குடல் நாளத்தில் ரத்த ஓட்டத்திலும் உடற்பயிற்சி மாற்றத்தை விளைவிக்கிறது. உடற்பயிற்சியால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களிலும் மாற்றங்களை விளைவிப்பதாக உள்ளது. இதற்கு உதாரணமாக, விளையாட்டு வீரர்கள் மேற்கொள்ளும் தீவிரமான உடற்பயிற்சிகளால் மன அழுத்தம் ஏற்படுவதைக் குறிப்பிடலாம்.

உடற்பயிற்சியால் குடல் பாக்டீரியாக்களில் ஏற்படும் மாற்றங்கள் தனிநபர் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உணவுப்பழக்கம், மன அழுத்தம், உறக்கம் உள்ளிட்ட வாழ்வியலை பொறுத்து வேறுபடும்.

('பிபிசி ஃப்யூச்சர்' பகுதியில் ராபர்ட்டா ஆஞ்சலினா (Roberta Angheleanu) எழுதியது)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: