உலக தேங்காய் தினம்: தேங்காய் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்குமா?

தேங்காய்

பட மூலாதாரம், AshaSathees Photography / Getty Images

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.

தென்னை பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் உலக அளவில் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் 34 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்தது. பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் தேங்காய் எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம்.

இளநீர், தேங்காய், கொப்பரை என அதன் அனைத்து வடிவங்களும் நம் உணவில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்தியர்களின் கலாசாரம், தினசரி சமையல், பழக்கவழக்கங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ள தேங்காயின் மருத்துவப் பலன்கள் குறித்து எழும் சில கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே:

இளநீரில் அடங்கியுள்ள முதன்மையான சத்துக்கள் என்ன? உடலில் நீரிழப்பைத் தடுக்க இளநீர் உதவுமா?

உடலில் நீரிழப்பைத் தடுப்பதற்கு தேவையான இரு முதன்மை சத்துக்களான பொட்டாசியம், சோடியம் இரண்டையும் இளநீர் வழங்குகிறது. இளநீரில் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு தாதுக்கள் அடங்கியுள்ளன.

தேங்காய் நீரில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நீரிழப்பைத் தடுத்து சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

இளநீர்

பட மூலாதாரம், Mayur Kakade / Getty Images

தேங்காய் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்குமா?

தேங்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கிறது மற்றும் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டை (மாவுச் சத்து) குறைத்துக்கொண்டு பேலியோ, கீட்டோ உள்ளிட்ட உணவுமுறைகளைக் கடைபிடிப்பவர்களுக்கு நல்ல கொழுப்புகளை வழங்கும் உணவு ஆதாரமாக தேங்காய் விளங்குகிறது.

தேங்காய் சாப்பிடுவது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா?

தேங்காயில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் அமினோ அமிலங்கள் அதிகமாகவும் இருக்கின்றன. மேலும், தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவி, சர்க்கரை அளவை இயல்பு அளவில் வைத்திருக்கவும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தென்னை மரம்

பட மூலாதாரம், Abdurahman Pilakkal / Getty Images

உடலில் தடவ தேங்காய் எண்ணெய் நல்லதா? அது சிறந்த ஈரமூட்டியா?

தேங்காயைப் போன்று அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் ஆரோக்கியமான கொழுப்பு ஆதாரமாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலம் (medium-chain fatty acid) மிகுந்து காணப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு குணம் தேங்காய் எண்ணெய்யில் இருக்கிறது. இதனால், பற்பசைக்கு பதிலாக பற்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். சொத்தைப்பல் பிரச்னைக்கும் சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் அமைகிறது. இது உதடுகள், தோல் மற்றும் தலைமுடிக்கு ஒரு சிறந்த ஈரமூட்டியாக (மாய்ஸ்ச்சரசைர்) விளங்குகிறது.

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிராவில் பிரபலமான சோலாப்பூர் நிலக்கடலை சட்னிப்பொடி - எப்படி தயாரிக்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: