தென்னை விவசாயிகள் விரக்தி: கொள்முதல் விலை சரிவு மற்றும் செலவு அதிகரிப்பால் மரங்களை வெட்டும் நிலை

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"என் பிள்ளையைப் போல 40 ஆண்டுகளாக இந்த தென்னை மரங்களை வளர்த்தேன். ஆனால் இன்று உரிய விலை கிடைக்காததால் அனைத்து மரங்களையும் வெட்டிவிட்டேன்" என்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமலிங்கம்.
தென்னை விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான 143 தென்னை மரங்களை தானே வெட்டி சாய்த்துள்ளார் ராமலிங்கம். ஆனால் இது ராமலிங்கத்தின் பிரச்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தென்னை சார்பு பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகின்றது. கடந்த ஜூலை 13-ம் தேதி பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருப்பந்தூர்த்தியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் இளநீர், தேங்காய், மற்றும் கொப்பரை ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளார்.
என் பிள்ளை போன்ற மரங்களை வெட்டிவிட்டேன்:
இதுகுறித்து விவசாயி ராமலிங்கம் பிபிசி தமிழிடம் கூறுகையில், `25 ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் அப்போது வெட்டுக்கூலியும் குறைவாக இருந்ததால் போதிய லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் ரூ.5.50 காசுக்கு விற்கப்படுவதால் போதிய லாபம் இல்லை. உர விலை, வெட்டுக் கூலி என அனைத்தும் உயர்ந்துள்ளது.
சந்தையில் ஒரு இளநீர் 50 ரூபாய்க்கும், தேங்காய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் அதை விளைவிக்கக்கூடிய விவசாயிகளான எங்களுக்கு ஒரு தேங்காயின் விலை ஐந்து ரூபாய் அளவுக்குதான் கிடைக்கிறது. இதனால் தென்னைக்கு செலவு செய்யக்கூடிய தொகை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. என் பிள்ளையை போல் 40 ஆண்டு காலம் வளர்த்த தென்னையை மனமில்லாமல் வெட்டிவிட்டேன்` என்றார்.
தேங்காய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலை நேர்மாறாக குறைந்து வருவதாக தெரிவிக்கிறார் நாம் அமைப்பின் மாநில தலைவர் பிரபு ராஜா. பிபிசி தமிழிடம் பேசியவர், `கடந்த ஆண்டு இதே நேரம் ஒரு டன் தேங்காய் 47,000 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு ஒரு டன் 19,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 23 ரூபாய்க்கு கொள்முதல் ஆன தேங்காய் இன்று 10 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
தேங்காய் கொள்முதல் செய்பவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகக் குறைவான விலைக்கு வாங்கி வருகிறார்கள். அதே சமயம் தென்னை உரம் 900 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் தற்போது 1,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பட மூலாதாரம், PRABHU
ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்
உற்பத்தி செலவு இரட்டிப்பாகியுள்ள நிலையில் தேங்காய் கொள்முதல் விலை பாதியாகக் குறைந்துள்ளது. தென்னை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் அரசு ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளோம். மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.130 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிற நிலையில் தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகள் மூலம் வழங்குவது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் சாதகமாக அமையும். உக்ரைன் - ரஷ்யா போரால் சூரிய காந்தி உற்பத்தி தடைபட்டுள்ளது. இதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் நடைபெற்றதைப் போல தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். அரசு உடனடியாக தலையிட்டு தென்னை விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்` என்றார்.
தென்னை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த வருடம் கடந்த வருடங்களை காட்டிலும் மிக குறைவான அளவிலே இலாபம் கிடைப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேசிய குழு உறுப்பினர் மு.மாதவன் தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசியவர், `உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்த எவ்வித வாய்ப்பையும் மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகபடுத்தினால் தேங்காய் விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான லாபம் கிடைக்க வழிவகுக்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கஜா புயலால் தென்னை சாகுபடி மிகப் பெரிய பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக இங்கு 50 சதவிகிதம் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.
தென்னை மரத்திற்கு அளிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் வேளாண் துறை மூலம் மானிய விலையில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
தென்னை சார்பு துறைகளும் பாதிப்பு
தென்னையைப் பொருத்த வரை விவசாயிகள் மட்டுமல்லாமல் தேங்காய் பறிப்போர், தேங்காய் உரிப்போர், தேங்காய் நார் உற்பத்தி செய்வோர், ஓட்டுநர்கள், கோகோ பீட் உற்பத்தி, கயிறு உற்பத்தி என தேங்காயைச் சார்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட தொழில்கள் உள்ளன. இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தேங்காய் விவசாயத்தை நம்பி உள்ளது.
எனவே டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் தேங்காய் காய்க்க தொடங்கிய நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்` என்றார்.

அரசுத்தரப்பு சொல்வது என்ன?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, `அரசு ஆண்டு ஒன்றுக்கு 50,000 மெட்ரிக் டன் தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு உள்ளது. ஆனால் 7,000 மெட்ரிக் டன் கூட கொள்முதல் செய்யப்படுவதில்லை. தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டுமென்றால் ஒன்றிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
தேங்காய்க்கு விலை அதிகமாக கிடைக்கிறபோது வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை சரிந்தால் அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்க முடியும். தேங்காய் எண்ணெய் பயன்பாடு தமிழ்நாட்டில் எந்த அளவில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். கேரளாவில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை, சொற்பமான அளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மக்களிடம் பயன்பாடு அதிகம் இல்லாத பொருளை அரசு கொள்முதல் செய்வது சாத்தியம் குறைவு.
மாறாக தென்னை விவசாயிகள் தென்னை பொருட்களை மதிப்பு கூட்ட வேண்டும். நீரா போன்ற தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு வைத்துள்ளது. இத்தகைய திட்டங்களை விரிவுபடுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் அதில் ஈடுபட்டு பயனடைய வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட தென்னை பொருட்களின் சந்தை அதிகரிக்கும்போது தென்னை விவசாயிகளின் இன்னல்கள் குறையும்` என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













