மக்கள் அறிவியல் திட்டம் மூலம் நீங்களும் காட்டுயிர் ஆய்வுகளில் ஈடுபடலாம் – எப்படி?

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

காட்டுயிர் பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி செயல்பாடுகளில் பொதுமக்கள் பங்கெடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக முடியும் என்கிறார்கள் பறவை ஆர்வலர் செல்வகணேஷ் மற்றும் அவரது குழுவினர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த பறவை ஆர்வலர் செல்வகணேஷ் மற்றும் அவரது குழுவினர், கோயம்புத்தூர் நகருக்குள் வாழக்கூடிய மற்றும் அங்கு வலசை வரக்கூடிய பறவைகள் குறித்த கோயம்புத்தூர் பறவைகள் அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

பொதுமக்களை ஈடுபடுத்தி கோயம்புத்தூர் நகருக்குள் காணப்படும் பறவைகளைக் கணக்கெடுத்து இந்த பறவைகள் அட்லஸை உருவாக்கியுள்ளனர். கேரளாவில் மாநிலம் முழுவதுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்ட கேரள மாநில பறவைகள் வரைபடத் தொகுப்பின் உருவாக்கத்தில் பங்கெடுத்தபோது அவருக்கு இந்த யோசனை வந்துள்ளது.

"மக்களுக்கு அறிவியலை அறிமுகப்படுத்துவதே மக்கள் அறிவியல். நாங்கள் பறவைகள் குறித்த மக்கள் அறிவியல் செயல்பாடுகளைச் செய்து வருகிறோம். அதாவது, ஒருவர் பறவைகளைப் பார்க்கச் செல்வார். அவர்கள் செல்வது, நீர்நிலைகள், புல்வெளிக்காடு, வீட்டின் முற்றம், நகர்ப்புறத்திலுள்ள மரங்கள் என்று எந்தப் பகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படிச் சென்று அவர்கள் பார்க்கக்கூடிய பறவைகள் என்ன வகை, எவ்வளவு இருக்கின்றன, எந்த நேரத்தில் பார்க்கிறார்கள், எங்கு பார்க்கிறார்கள் போன்ற தகவல்களைப் பதிவு செய்வார்கள். அப்படிப் பதிவு செய்யும் தகவல்களை இபேர்ட் (eBird) என்ற தளத்தில் பதிவேற்றுவார்கள்.

இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் என்னென்ன வகையான பறவைகள் வாழ்கின்றன. ஓராண்டில் எந்தெந்த காலங்களில் அவை அந்தக் குறிப்பிட்ட பகுதியில் காணப்படுகின்றன என்ற தகவல் கிடைக்கும்," என்றார்.

ஆய்வாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை

இபேர்ட் (eBird) என்ற இணையதளம் உலகளவில் பறவை ஆய்வுகளுக்கான மக்கள் அறிவியல் தளமாகச் செயல்பட்டு வருகிறது. பறவை நோக்கலில் ஈடுபடுபவர்கள், அவர்கள் பார்க்கும் பறவைகளின் பெயர், பார்க்கப்பட்ட இடம், நேரம், அவற்றின் எண்ணிக்கை ஆகியவை குறித்த தகவல்களை இபேர்ட் தளத்தில் பதிவு செய்யலாம். அதன்மூலம், இந்தத் தளத்தில் உலகளவில் வாழக்கூடிய பல்வேறு பறவைகளின் வாழ்விடங்கள் குறித்த தகவல்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன.

இதன் செயலியில் பறவைகளைப் பார்க்கும் ஒருவர் ஆய்வாளராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை - அவர் பொறியாளராகவோ, பள்ளி மாணவராகவோ, பணியிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த குடிமகனாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் - அவற்றின் விவரங்களைப் பதிவேற்றலாம். அந்தத் தரவுகளை உலகளவில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, கோயம்புத்தூர் நகர்ப் பகுதிக்குள் செல்வகணேஷ் மற்றும் அவருடைய குழுவினர், பொதுமக்களை ஈடுபடுத்தி சேகரித்த பறவைகள் குறித்த தகவல்களை இபேர்டில் பதிவேற்றியுள்ளனர். பிறகு, அவற்றைப் பயன்படுத்தி நகருக்கான பறவைகள் அட்லஸையும் உருவாக்கியுள்ளார்கள். இப்போது, இந்தத் தரவுகளை உலகளவில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

ஒரு நகரத்திற்கான பறவைகள் அட்லஸ் உருவாக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை. இந்தியளவில் இதற்கு முன்பாக மைசூரில் செய்தார்கள்.

இவர்களைப் போலவே, பலரும் வண்ணத்துப்பூச்சிகள், மரங்கள், பூச்சிகள் என்று ஒவ்வொரு பிரிவிலும் மக்கள் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இபேர்ட் தளத்தைப் போலவே, ஐநேச்சுரலிஸ்ட் (iNaturalist), இந்தியா பயோடைவர்சிடி போர்டல் (India Biodiversity Portal) போன்ற பல்வேறு மக்கள் அறிவியல் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் பறவைகள் மட்டுமின்றி ஆமை, தவளை, மரம், செடி போன்ற பல்வேறு உயிரினங்கள் குறித்த தரவுகளை பொதுமக்கள் பதிவேற்ற முடியும். அவற்றை பொதுமக்கள் உட்பட யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

பறவைகள் குறித்த மக்கள் அறிவியல் தரவுகளைப் பொறுத்தவரை, சரணாலயங்கள், காட்டுப் பகுதிகள், நீர்நிலைகள் ஆகியவற்றைத் தேடிப் போக வேண்டும் என்பதாகவே பெரும்பாலும் இருக்கின்றன. நகர்ப்பகுதிகளில் வாழும், அங்கு வலசை வந்து போகும் பறவைகள் குறித்த விவரங்கள் மிகச் சொற்பமாகவே இருக்கின்றன.

ஆகையால் தான், கோயம்புத்தூர் நகரப் பகுதிகளுக்குள் காணப்படும் பறவைகளைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து அந்த நகருக்கான பறவைகள் அட்லஸை உருவாக்க முடிவு செய்தோம்," என்கிறார் செல்வகணேஷ்.

நம் ஊரில் நம்மைச் சுற்றியே பல பறவைகள் வாழ்கின்றன. ஆனால் அவற்றைப் பெரியளவில் நாம் கருத்தில் கொள்வதில்லை. பதிவுகளும் அவை குறித்துப் பெரிதாக இல்லை. ஆகவே அத்தகைய பதிவு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் செல்வகணேஷ், அருள்வேலன் மற்றும் அவர்களுடைய குழுவினர் இறங்கினர்.

தொழில்நுட்ப தடங்கல்கள்

ஒரு நகரம் முழுவதும் காணக்கூடிய பறவை வகைகள் எங்கெல்லாம் காணப்படுகின்றன, எங்கு, எப்போது கூடு கட்டுகின்றன, எப்போது இனப்பெருக்கம் செய்கின்றன, எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளன போன்ற தகவல்களை ஒரு சிறு குழுவால் திரட்டிவிட முடியாது. ஆகவே அதைச் சாத்தியப்படுத்த அவர்கள் கையில் எடுத்த கருவி தான் மக்கள் அறிவியல்.

"கோயம்புத்தூர் பெரிய நகரம். ஒரு சிறு ஆய்வாளர்கள் குழுவோ அல்லது பறவையாளர்களோ அந்த நகரம் முழுவதிலும் கணக்கெடுக்க முடியாது. ஆகையால் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து, வடவெள்ளி, தொண்டாமுத்தூர், பீளமேடு என்று ஒவ்வொரு பகுதியிலும் பறவைகள் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைத்து, அந்தந்தப் பகுதிகளில் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளச் செய்தோம்," என்கிறார் பறவை ஆர்வலர் முனைவர்.அருள்வேலன்.

2020ஆம் ஆண்டு தொடங்கி, மூன்றாவது ஆண்டாக, கோயம்புத்தூர் பறவைகள் அட்லஸுக்காக தரவுகளைத் தொகுக்கும் பணியைச் செய்து வருகிறார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்து வருகின்றனர்.

இந்த முயற்சியில் தடங்கல்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, இந்த முயற்சியைத் தொடங்கிய காலகட்டம் கொரோனா ஊரடங்கு நிலவியதால் போக்குவரத்து மிகப்பெரிய சிரமமாக இருந்தது. அதோடு, ஒரு சிலரிடம் பைனாகுலர் இருக்காது, இதில் பங்கெடுத்த மாணவர்களில் பலரிடம் ஸ்மார்ட்ஃபோன் இருக்காது. ஆனால், இவை எதுவுமே அவர்கள் இந்த மக்கள் அறிவியல் திட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாகச் செயல்பட்டுள்ளார்கள்.

"போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், வாகனம் இல்லாதவர்களை இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களைக் கொண்டு அழைத்து வர வைத்தோம். பைனாகுலர் இல்லை என்பதால் பறவைகளைப் பார்க்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்ள வைத்தோம். மாணவர்கள் சிலரின் கையில் ஸ்மார்ட்ஃபோன் இருக்கவில்லை.

ஆனால், அவர்களுக்கு பறவைகளைப் பற்றிய விவரங்கள் நன்கு தெரிந்திருந்தது. ஆகையால், அவர்களைப் பறவைகளைக் கணக்கெடுத்து கையேட்டில் குறிப்பெடுக்க வைத்து, பிறகு அவர்களின் பெயரிலேயே இபேர்ட் தளத்தில் பதிவு செய்தோம். பிறகு அந்தத் தரவுகளை எடுத்து பகுப்பாய்வு செய்து கோவை பறவைகள் அட்லஸை உருவாக்குவோம்," என்கிறார் அருள்வேலன்.

இபேர்ட் தளத்தில் பறவைகளைப் பற்றிய தகவல்களைப் பதிவேற்றுவதை ஊக்குவிக்கும் காட்டுயிர் ஆய்வாளர் ப.ஜெகநாதன், கேமராவோ, பைனாகுலரோ, ஏன் கைபேசி இல்லாதது கூட ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

"பறவைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடும்போது அதற்காக, பைனாகுலர், கேமரா போன்றவை கையில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இத்தகைய பொருட்கள் கையில் இல்லாதது ஒரு தடையாக இருக்கக்கூடாது.

அவ்வளவு ஏன், வயது முதிர்ந்தவர்களில் சிலரிடம் கைபேசி இல்லாமல் இருக்கலாம். ஒருவருக்கு, பறவைகளைக் கவனிக்க வேண்டும், அவை குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். அப்போது கையில் கைபேசி இருந்திருந்தால், பறவைகளைப் பார்த்து இபேர்ட் செயலியில் நாமும் பதிவு செய்திருக்கலாமே என்ற ஏக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது.

ஆகவே, பறவைகளை நோக்குவதற்கு வருவோரில் கைபேசி இல்லையென்றாலும் கையேடு ஒன்றை வைத்துக்கொண்டு, பார்க்கும் பறவைகள் பற்றிய தகவல்களை எழுதி வைக்குமாறு ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான், தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரியாதது, தொழில்நுட்பங்கள் இல்லாதது என்று எதுவுமே மக்கள் அறிவியல் செயல்பாட்டில் ஒரு குறையாக இருக்காது.

பிறகு, கையேட்டில் அவர்கள் எழுதி வைத்திருக்கும் தகவல்களை அவர்களின் பெயரிலேயே நாம் குறிப்பிட்ட தளத்தில் பதிவேற்ற வேண்டும்," என்கிறார்.

அதேவேளையில், இந்தச் செயல்பாட்டின் மூலம் ஆய்வாளர்களுக்குத் தேவைப்படும் தரவுகளை மக்கள் மூலமாகச் சேகரித்துக் கொள்கிறார்கள். அதேவேளையில், அந்தத் தகவல்களைச் சேகரிப்பவர்கள், துறைசார் அறிவைப் பெறுவது, அவர்களை இதில் ஈடுபடுத்தும் ஆய்வாளர்களின் பொறுப்பு என்கிறார் காட்டுயிர் ஆய்வாளர் ப.ஜெகநாதன். மேலும், "காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வேடந்தாங்கல் வரைக்கும் சென்று தான் பறவைகள் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றில்லை.

நம் வீட்டிற்குப் பின்புறமுள்ள சிறு புல்வெளியிலோ, நம் வீட்டு மாடியில் நின்று பார்க்கையிலோ கண்ணில் படும் பறவைகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்தாலும் அது மக்கள் அறிவியல் தான். நாம் எங்கிருந்து செய்கிறோம் என்பதைவிட, இதைச் செய்வதன் மூலம் அறிவியல்ரீதியிலான கற்றல் நடக்கிறதா என்பதே முக்கியம்," என்று கூறுகிறார்.

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird count), வீட்டின் பின்புற பறவைகள் கணக்கெடுப்பு (Backyard bird count) என்று பல்வேறு வழிகளில் முனைவர்.ப.ஜெகநாதன் பயணம், தொழில்நுட்பம் போன்ற தடைகளைத் தவிர்க்கும் வகையிலும் அனைவரும் ஈடுபடும் வகையிலுமான பறவைகள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

மக்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான பாலம்

மக்கள் அறிவியல் மூலம் கிடைக்கும் தரவுகள் துல்லியமாக இருக்காது. அதேநேரத்தில் அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிட முடியாது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் பறவை வகைகளின் எண்ணிக்கை வேண்டுமானால் தோராயமானதாக இருக்கலாம். ஆனால், அந்தப் பகுதியில் அந்தப் பறவைகள் வாழ்கின்றன என்பதற்கான ஆதாரமாக இந்தத் தரவு செயல்படும்.

அத்தகைய தரவு, சதுப்பு நிலம், நீர்நிலை என்று ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பங்கு வகிக்கிறது. இப்படியாக, திருவண்ணாமலையைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் அருண் மற்றும் அவரது குழுவினர் இந்தியா பயோடைவர்சிடி போர்டல் என்ற தளத்தில் மக்கள் அறிவியல் முயற்சியின் மூலம் பதிவேற்றிய பல்லுயிரிய வளம் குறித்த தரவுகள், கிரிவலப் பாதையின் விரிவாக்கம் குறித்த வழக்கில் ஆதாரமாகப் பயன்பட்டுள்ளது.

அதுகுறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "திருவண்ணாமலை கிரிவலப் பாதையை விரிவாக்குவதை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் போடப்பட்ட வழக்கில், இந்தியா பயோடைவர்சிடி போர்டல் என்ற மக்கள் அறிவியல் தளத்தில், மக்கள் அறிவியல் மூலமாகச் சேகரிக்கப்பட்ட, அந்தப் பகுதியின் பல்லுயிரிய வளம் குறித்த தரவுகளை, தீர்ப்பாயம் முதன்மை ஆதாரமாகக் கருத்தில் கொண்டது.

பொதுமக்களின் உதவியோடு, சம்பந்தப்பட்ட பகுதி முழுவதும் பதிவு செய்யப்பட்ட பல்லுயிரிய வளத் தரவுகளின் தொகுப்பை இந்தியா பயோடைவர்சிடி போர்டல் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. அதை அந்த வழக்கின் முக்கியமான ஆதாரமாக தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. மக்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாப்பதிலும் மக்கள் அறிவியல் திட்டங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன," என்று கூறினார்.

தமிழ்நாட்டில் இதுகுறித்து இன்னும் மேம்படுத்த வேண்டியவை குறித்துப் பேசியபோது, "மக்கள் அறிவியல் திட்டங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களை மையப்படுத்தியதாகவே உள்ளன. அதிலும் மேட்டுக்குடியினரால் தான் அது அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளிலும் இதைப் பரவலாக்க வேண்டும். தமிழ் மொழியில் மக்கள் அறிவியல் செயலிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது," என்கிறார் அருண்.

அமெரிக்காவின் ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தில் லெய்த்ஸ் மெல்லிய ஓடு ஆமை குறித்து தனது முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இந்திய நன்னீர் ஆமைகள் மற்றும் நிலவாழ் ஆமைகள் அமைப்பின் இணை நிறுவனரான ஸ்னேஹா தர்வாத்கர், ஆமைகள் பாதுகாப்பில் மக்கள் அறிவியல் மூலமாகப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

காட்டுயிர் பாதுகாப்பில் மக்கள் அறிவியலின் பங்கு குறித்து அவரிடம் பேசியபோது, "மக்கள் அறிவியல் என்பது ஆய்வுத்துறைப் பேருதவியாக இருக்கக்கூடிய திட்டம். ஆய்வாளர்களால் அனைத்து இடங்களுக்கும் சென்று நேரடியாக ஆய்வு செய்ய முடியாது. அதற்கான ஆள் பலம் ஆய்வாளர்களிடையே கிடையாது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பார்த்தால், ஆய்வாளர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், மக்களோடு சேர்ந்து இதுபோன்ற திட்டங்களின் வழியாகச் செயல்படும்போது, ஆய்வுத்துறைக்கு அதிகளவிலான தரவுகள் கிடைக்கின்றன.

நன்னீர் வாழ் ஆமைகள் மற்றும் நிலவாழ் ஆமைகள் அமைப்பிற்கும் கூட, ஆமைகள் குறித்த பல தரவுகளை மக்கள் அளித்துள்ளார்கள். நான் ஆய்வு செய்துவரும் நீர்வாழ் ஆமையான லெய்த்ஸ் மெல்லிய ஓடு ஆமையும் கூட முதலில் பருவ காலங்களில் தான் அதிகளவில் காணப்படுவதாக இருந்தது. ஆனால், அவை டிசம்பர் மாதங்களில் கூடக் காணப்பட்டிருப்பது மக்கள் அறிவியல் திட்டத்தின் வழியே கிடைத்த தரவுகளின் மூலம் தெரிய வந்தது. அதோடு அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியிலும் அதிகளவில் வாழ்வதும் அதன்மூலம் எங்களுக்குத் தெரியவந்தது.

மக்கள் அறிவியல் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. உயிரினங்களின் மீது அக்கறையும் அன்பும் கொண்ட மக்கள் அதிகமாக இருப்பதும் எந்தவொரு பிரதிபலனும் பாராமல் அவர்கள் இதில் ஈடுபடுவதும் தான் மக்கள் அறிவியலை உயிர்ப்போடு வைத்து வருகிறது," என்று கூறினார்.

மக்கள் சமூகத்தின் வளர்ச்சி அறிவியலின்றி சாத்தியப்பட்டிருக்காது. ஆனால், அதனிடமிருந்து பெரும்பாலும் சராசரி மக்கள் தள்ளியே வைக்கப்படுகிறார்கள். அந்த இடைவெளியை உடைப்பதையே மக்கள் அறிவியல் செய்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: