World Photography Day புகைப்படம்: 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம், சென்னையின் நீராதாரம் கொற்றலை ஆறு

    • எழுதியவர், லட்சுமி காந்த் பாரதி
    • பதவி, பிபிசி தமிழ்

கொசஸ்தலை எனப்படும் கொற்றலை ஆறு சென்னையின் முக்கிய நீராதாரம். ஆனால் சென்னையில் இருக்கும் பலருக்கு இது தெரியாது.

இந்த ஆற்றை சூழ்ந்த வாழ்வியலை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார் பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி. ஆகஸ்ட் - 19 உலகப் புகைப்பட நாளை ஒட்டி அந்தப் படங்களை குறிப்புகளோடு வழங்குகிறோம்:

பிறப்பு:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், சோளிங்கர் மலை அடிவாரமான கிருஷ்ணாபுரம், நகிரி பகுதிகள் வழியாக சோளிங்கர் மலையில் இருந்து மழைக் காலங்களில் வெள்ளம் வெளியேறும். காவேரிப்பாக்கம் ஏரி வழியாக பாலாற்றின் உபரி நீரும் வெளியேறும்.

இந்த இரண்டும் சேர்ந்ததுதான் கொற்றலை ஆறு. 3757 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள கொற்றலை ஆறு தென் சென்னையில் ஓடும் அடையாறு மற்றும் மத்திய சென்னையில் ஓடும் கூவம் ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியை விட இரண்டு மடங்கு அதிக நீர் பிடிப்பை கொண்டுள்ளது.

மீன்கள், நண்டுகள்:கொற்றலை ஆற்றினை மட்டும் நம்பி சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. கொற்றலை ஆற்றில் உள்ள கோல மடங்கு, களஞ்சி, காட்டு பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மீன் வளங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சாலா, துண்டு மீன், அலாத்தி, சீடை மீன், மது கெண்ட, கெளுத்தி, இரு கெளுத்தி போன்ற வகை மீன்கள் கிடைக்கின்றன என அந்தப் பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். இதேபோல நண்டு வகைகளில் கொறவால் நண்டு, சிவால் நண்டு போன்ற வகைகளும். இறால் மீன் வகைகளில் வலும் இறா, கோட்றா, வெல்றா, கருப்பு இறா, சமைக்கிற உள்ளிட்ட வகைகள் கிடைக்கின்றன.

கொற்றலை ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் கல்வான், உப்பாத்தி, கண்ணான், ஊடான் உள்ளிட்ட மீன் வகைகள் குறைந்து உள்ளன.

பெண்களுக்கு வாழ்வாதாரம்:மீனவ பொருளாதாரத்தில் பெண்களுக்கு மிக முக்கிய பங்கினை கொற்றலை ஆறு கொடுத்து வருகிறது. குறிப்பாக ஆற்றில் சேற்றை கலைத்து அதில் இறால் பிடிக்கும் பணியில் இருளர் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேடயம்:சென்னையில் 2015 இல் ஏற்பட்ட வெள்ளம், மழைக் காலங்களில் ஏற்படும் புயல் மற்றும் கடல்நீர் உட்புகுதல் ஆகிய இயற்கை விளைவுகளை எதிர்கொள்ள கொற்றலை ஆறு கேடயமாக நின்று பயன்தருகிறது.

சீர்கேடு:சாம்பல் கழிவுகள், சுடுநீர் மாசு, ராட்சத மின்சாரம் கோபுர கட்டமைப்புகள் கொற்றலை ஆற்றின் வளங்களுக்கும், மீனவர்களுக்கும் பல சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அனுமதியின்றி பல்வேறு கட்டுமான வேலைகள் ஆற்று நீர்பரப்பு பகுதியில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: