அறிவியல்: செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங்: உங்களது எதிர்காலத்தை மாற்றப்போகும் 4 தொழில்நுட்பங்கள்

3டி பிரிண்டிங்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நீச்சல்காரன்
    • பதவி, கணினித் தமிழ் ஆர்வலர்

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினேழாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

நாளொரு மேனியாகப் பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் உலகின் நான்கு திசைகளிலும் அதிகம் உச்சரிக்கும் நான்கு தொழில்நுட்பங்கள் உள்ளன. அந்த நுட்பங்கள் எப்படி இயங்குகின்றன அதனை எளிய முறையில் அறிந்து கொள்ளலாம்.

கீழுள்ள தொழில்நுட்பங்கள் பலவும் ஏற்கெனவே நமது இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கை ஏற்படுத்த தொடங்கிவிட்டாலும், அவற்றின் உச்சபட்ச பயன்பாட்டை உலகம் இனிதான் காணப்போகிறது.

பொருட்களின் இணையம் (IoT)

பரந்து விரிந்த இந்தப் பூமியின் எல்லைகள் மனிதர்களுக்கு மட்டும் சுருங்கி, சிறிய கிராமமாகியதென்றால் அதற்கு இணையம் முக்கியக் காரணமாகும். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் இணையத்தால் மூன்றே நொடியில் தொடர்பு கொள்ளமுடிகிறது.

பொருட்களின் இணையம்

பட மூலாதாரம், Getty Images

மனிதர்களிடம் தொடர்பு கொள்வது போல பொருட்களிடம் தொடர்பு கொண்டால் எப்படியிருக்கும்? அதாவது பேருந்துப் பயணத்தில் இருக்கும் போதே வீட்டிலிருக்கும் விளக்கை அணைப்பது, திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டே தோட்டத்திலுள்ள பம்புசெட்டை இயக்குவது. இப்படி நேரடியாக அந்த மின்னணுப் பொருட்களிடம் இணையத்தின் வழியாகக் கட்டளைகளை பிறப்பிக்க முடியும். தோட்டத்தில் இத்தனை அளவிற்கு மழை பெய்கிறது என்று ஒரு மழைமானி கணித்தால் அத்தகவலை இணையம் வழியாகக் கடத்தில் நீர் பாய்ச்சும் அளவைக் குறைத்துக் கொள்ள நீர் இறைக்கும் பொறிக்குக் கட்டளையிடும்.

இன்னும் ஒருபடி மேலே "அண்ணாச்சி ஏதோ சத்தம் கேட்கிறது ஒரு அலர்ட்டை போடு" என்று ஒலிஉணரி கேமிராவிடம் சொல்லி, உடனே கேமிரா படமெடுத்து முதலாளிக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? இதுபோல இரு மின்னணு பொருட்களே பேசிக் கொண்டு செயல்படுவதையே பொருட்களின் இணையம் என்கிறோம்.

முன்பு, இரு முனைகளுக்கு நடுவே மின்னழுத்தத்தை ஏற்படுத்தி மின்சார விளக்கை எரிய வைத்தோம்; பின்பு மின்சக்தியைச் சிக்கனமாகி மின்னணு விளக்கை எரிய வைத்தோம்; இன்று சூழலுக்கு ஏற்ப தானாக எரிந்து அணையும் திறன் விளக்கை வைக்கிறோம். திறன்பேசி என்பது இயல்பாகவே இணையத்துடன் பிறந்த குழந்தை என்பதால் அதனைத் தவிர்த்து, பார்த்தால் எண்ணற்ற திறன் பொருட்கள் சந்தையில் குவிந்து வருகின்றன.

கூகிள் ஹோம் குரல் இயக்கி, அமேசான் எக்கோ குரல் இயக்கி, திறன் காபி தயாரிப்பி, திறன் அழைப்பு மணி, காற்று தரக் கண்காணிப்பி போன்று பல பொருள்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.

இது வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன. பொதுவாக உணரிகள், ஒளிப்படங்கள், ஒலிவாங்கி போன்ற உபகருவிகளால் பொருட்களைச் சுற்றுயுள்ள சூழலை அறிந்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்கும் அல்லது நமது கட்டளைகளைச் செயல்படுத்தும்.

முப்பரிமாண அச்சாக்கம் (3D Printing)

3டி தொழில்நுட்பத்தில் அதிகளவில் செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் திட்டத்தை சென்னை ஐஐடி சமீபத்தில் அறிவித்தது. 3டி நுட்பத்தில் கட்டிய வீடு என்று பரவலாக ஒரு காணொளியைப் பார்த்திருப்போம். அந்த 3டி பிரிண்டிங் என்றால் என்ன? பெயரைப் பார்த்தவுடன் காகிதத்தில் அச்சடிக்கும் புதிய நுட்பம் என்ற குழப்பம் முதலில் பலருக்கு இருந்திருக்கக் கூடும். ஆனால் பொதுவான அச்சுப் பொறிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

மூன்று பரிமாணத்தில் உள்ள எந்தப் பொருளையும் அப்படியே வடித்துக் கொடுக்கும் நுட்பம் தான் முப்பரிமாண அச்சாக்கம். எந்த மூலப்பொருளைக் கொடுக்கிறோமோ அதை வைத்து, நாம் கற்பனை செய்த பொருளை அப்படியே சிலை வடித்துக் கொடுக்கும்.

பொதுவாக வார்ப்புக்களை உருவாக்கி அதில் மூலப் பொருளை ஊற்றி ஒரு பொருளைத் தயாரிப்போம். மாறாக இங்கே உருவாக்க வேண்டிய பொருளின் முப்பரிமாண வடிவத்தின்படி (STL format) மூலப் பொருளை ஊற்றிப் பொருளை உருவாக்குகிறோம்.

இதன் மூலம் வார்ப்புகளைக் கொண்டு உருவாக்கும் நெகிழி வகைப் பொருட்கள் முதல் பெரிய கட்டிடங்கள் வரை உருவாக்க முடியும். வாகன உதிரிப் பாகங்கள், விமான உதிரிப் பாகங்கள், தானியங்கிக்கான பாகங்கள் உட்பட பிரமாண்ட உற்பத்தித் துறைகளில் இந்நுட்பம் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சிற்பக் கலை, கட்டடக் கலை, மண் பாண்டக் கலை, நுண்கலை என மரபு சார்ந்த பல கலைகளின் கூட்டு வடிவமாக உள்ளது.

ஒரு நேரத்தில் பல பொருட்களை உருவாக்க முடியும் என்பதாலும் இந்த முப்பரிமாண அச்சுப்பொறியின் விலையும் கணிசமாகக் குறைந்தாலும் இந்தப் பணியாளர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கிறது. உண்மையில் வளர்ந்து வரும் தேவையை ஈடு செய்ய சந்தையில் அதிக பொருட்கள் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே மனித ஆற்றலை அதற்கேற்ப பயன்படுத்தி புதிய துறைகளில் மனிதவளத்தைப் பயன்படுத்தலாம்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

இயற்கை என்ற சொல்லானது மனிதத் தலையீடு இல்லாதவற்றிற்கே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். மனிதனோடு தொடர்பில் வந்தாலே அது செயற்கை என்ற வகைப்பாட்டில் கொண்டுவந்துவிடுகிறோம். அது போல மனித நுண் அறிவைக் கணினியில் ஒப்புருவாக்கம் செய்து செயல்படுத்தும் நுட்பத்திற்குச் செயற்கை நுண்ணறிவு என்கிறோம்.

நாம் எப்படி ஒரு முடிவை எடுக்கிறோம்? முதலில் ஐம்புலன்களின் மூலம் சிக்கலைப் புரிந்து கொள்கிறோம்; நமது ஏட்டறிவையும் அனுபவத்தையும் கொண்டு தீர்வுகளைத் தீர்மானிக்கிறோம். அது போல கணினியானது எழுத்துணரி, ஒலியுணரி, தொடு உணரி போன்ற பல நுட்பத்தால் சிக்கலைப் புரிந்து கொண்டு, பயிற்றுவிக்கப்பட்ட தரவுகளையும் அதன் சாயலையும் கொண்டு முடிவுகளை எடுக்கிறது.

செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம், Getty Images

உதாரணமாக கடந்த நூற்றாண்டின் தட்பவெப்ப நிலைகளையும் இயற்கை நிகழ்வுகளையும் பட்டியலிட்டால் எப்போதெல்லாம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மழை பொழியும் என்று மனித சிந்தனையோட்டத்தில் கணினி புரிந்து கொள்ளும். வரலாற்றுத் தரவுகளைக் கணினிக்குச் சரியாக வகைப்படுத்தி, பயிற்றுவித்து அதன் மூலம் கணினிக்கு ஒரு செயற்கையான அறிவை உருவாக்குகிறோம்.

செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் நான்கு வகையான பிரிவுகளைக் கொண்டுள்ளது. எரித அஞ்சல் கணிப்பு, சதுரங்க விளையாட்டின் வியூகம், கூகிள் விளம்பரங்களின் பரிந்துரைப் பொறிகள் போன்ற சூழலை அறிந்து உடனடி முடிவு எடுப்பவை, எதிர்வினை எந்திரங்கள் (Reactive machines) என்ற பிரிவைச் சேர்ந்தது.

ஓட்டுநரில்லாத் தானியங்கி வாகனங்கள் போன்றவை கடந்த கால முடிவுகளையும் தவறுகளையும் வைத்து கற்றுக் கொண்டு முடிவுகளை எடுக்கும், இவற்றை வரையறுக்கப்பட்ட நினைவக எந்திரங்கள் (Limited memory machines) என்கிறோம்.

மனித குணங்கள், எண்ணங்கள், உணர்வுகளை ஊகிப்பதுடன், நடத்தையைக் கண்காணிக்கவும் செய்யும் பிரிவினை மனதின் தேற்றம் (Theory of mind) என்கிறோம். இறுதியாக சுய விழிப்புணர்வு (Self-aware AI) வகை என்பது மனித அறிவுடன் சுய விழிப்புணர்வுடன் இருக்கும் எந்திரம். அத்தகைய எந்திரங்களை இன்னும் உருவாக்கவில்லை ஆனால் ஆய்வு நிலையில் உள்ளன.

தொடரேடு (Blockchain)

நீங்கள் ஒரு டொயோட்டா லேண்ட் க்ரூஸர் வாகனத்தை வாங்கப் போகிறீர்கள் என்றால் உங்களது அடையாள மற்றும் நிதி ஆவணங்களை உங்கள் வாகன விற்பனையாளரிடம் கொடுப்பீர்கள். அதை அவர் வங்கி, காப்பீடு, அரசு எனப் பல அமைப்புகளிடம் பகிர்ந்து சரிபார்த்து உங்களுக்கு வாகனத்தை வழங்குவார். இந்தப் பரிவர்த்தனையை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாகச் சேமிப்பதென்பது பெரிய சவாலான காரியம்.

தொடரேடு

பட மூலாதாரம், Getty Images

யாரேனும் ஊடுபாவினாலோ (Hacking) வேறு காரணத்தினால் கசிந்தாலோ தகவல் பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. உங்கள் பரிவர்த்தனை விவரம் பாதுகாப்பாகத் தான் உள்ளதா என்பதை உங்கள் விற்பனையாளர் மட்டுமே உறுதி செய்யமுடியும். இதைப் பாதுகாப்பதே நேர விரயம், மையக்குவிப்பு, செலவீனமாகும். மாறாக இந்தப் பரிவர்த்தனை எட்டை மட்டும் ரகசிய வடிவில் மாற்றில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வருவது போல நான்கு பேரிடம் கொடுத்தால் எப்படி பாதுகாப்பாக இருக்குமோ அது போன்றவொரு தொழில்நுட்பம் தான் பிளாக்செயின்.

பிளாக்செயின் அல்லது தொடரேடு என்ற பெயருக்கு ஏற்றார்போல பெட்டி பெட்டியாகத் தொடர்ச்சியாக, தரவுகளைக் குறிமாற்றி, பரவலாக்கி சேமிக்கும் ஒரு நுட்பமாகும். மரபு சார்ந்த அமைப்புகளில் உள்ளது போல ஒரே இடத்தில் ஏடுகளைச் சேமிக்கமால் பரவாலாக்கப்பட்ட இடங்களில் சேமிப்பதால் யாரும் முறையான திறவுகோல் இல்லாமல் நுழைய முடியாது.

தொடக்கத்தில் பிட்காயின் போன்ற மறை நாணயங்கள் பரிவர்த்தனைக்குப் பயன்பட்டாலும் இன்று பல துறைகளில் இந்தத் தொடரேடு நுட்பம் பயன்படுகிறது. அரசுத் துறைகளைப் பொறுத்தவரை நிதி மற்றும் சட்ட ஆவணங்களைப் பாதுகாத்தல், சொத்து பரிமாற்றம், வரி முறைகேடுகளைக் களைதல், வங்கிச் சேவையை ஒழுங்குமுறைப் படுத்தல் போன்ற பல இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மருத்துவம், காப்பீடு, தொலைத்தொடர்பு, ஊடகம், உற்பத்தித் துறை என்று பல துறைகளில் பயன்பட்டாலும் இன்றுவரை நிதித் துறையில் கோலோச்சுகிறது.

(பொதுவெளியில் நீச்சல்காரன் என்று அறியப்படும் கணினித் தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் இராஜாராமன், சென்னையில் உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டக் கணிமை விருதை இவர் பெற்றிருக்கிறார்)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: