உணவும் உடல்நலமும்: உணவு வேட்கைக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எப்படி தடுக்கலாம்?

ஒரு உணவின் மீதான வேட்கை (கிரேவிங்) (உடனே சாப்பிடத்தோன்றும் எண்ணம்) எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு பிஸ்கெட் சாப்பிட காலை 11 மணிக்குக்கூட ஆசை தோன்றும்? மாலை 6 மணிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்? எப்போது உணவு வேட்கை தோன்றும் என சொல்ல முடியாது.

உங்களுக்கு ஏற்படும் உணவு வேட்கை உங்களின் உணவுப்பழக்கம் குறித்தோ அல்லது உடல்நலம் குறித்தோ ஏதேனும் சொல்ல வருகிறதா? அவற்றை அறிந்துகொள்ள உணவியல் நிபுணர் செஜல் ஜேக்கப் உடன் பேசினோம்.

மன அழுத்தம், சோர்வுடன் தொடர்புடையது உணவு வேட்கை

"சாக்லேட்டுகளாக இருக்கட்டும் அல்லது நொறுக்குத்தீனிகளாக இருக்கட்டும், ஒரு உணவின் மீது உங்களுக்கு வேட்கை இருக்கிறதென்றால், அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என கேள்வி கேட்பது முக்கியமானது" என்கிறார் செஜல். "பல காரணங்களுக்காக உணவு வேட்கை ஏற்படும். சமநிலையற்ற ரத்த சர்க்கரை அளவு, மன அழுத்தம், போதிய உறக்கம் இல்லாமை, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்" என்கிறார் செஜல்.

"நன்றாக தூங்காதது, அதிகமாக கிரேவிங் ஏற்படுவதைத் தூண்டுகிறது. தூக்கமின்மை, பசி ஹார்மோன்களை மாற்றி உங்கள் உடலை பாதிக்கச் செய்கிறது" என அவர் விளக்குகிறார்.

"நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லையென்றால் பசியைத் தூண்டும் கிரெளின் என்கிற ஹார்மோன் அதிகளவில் சுரக்கும். நிறைவான உணர்வை ஏற்படுத்தும் லெப்டின் என்ற ஹார்மோனை இது குறைத்துவிடும். இந்த சமநிலையற்ற தன்மையால் பசி ஏற்படுகிறது. இதனால் உடனேயே ஏதாவது சாப்பிட வேண்டும் என்கிற உணவு வேட்கை தோன்றுகிறது. அப்போது பெரும்பாலும் கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் இனிப்புகளை எடுத்துக்கொள்கிறோம்" என்கிறார் அவர்.

பதற்றமாக இருக்கும்போதும் இத்தகைய உணவுகளுக்கான வேட்கை ஏற்படும் என்பதை விளக்கிய செஜல், "உணவு வேட்கையை அதிகப்படுத்தும் காரணியாக மன அழுத்தம் இருக்கிறது. பதற்றம், பீதியுடன் இருக்கும்போதும் அவ்வாறே ஏற்படுகிறது. பெரும்பாலும் அச்சமயங்களில் பலரும் இனிப்புகளை சாப்பிடுவார்கள். ஏனெனில், உணவு வேட்கையை சரிப்படுத்துவதற்கான உடனடி தீர்வாக இனிப்புகள் இருக்கின்றன என அவர்கள் நினைக்கின்றனர். செரோட்டோனின் மற்றும் டோப்பமைன் அளவுகளை அதிகப்படுத்தும் உணவுகளை நாம் அப்போது தேடுகிறோம்" என்கிறார் அவர்.

(பெண்களுக்கு அண்டவிடுப்பு நாள் (ஓவுலேஷன்) மற்றும் மாதவிடாய் தொடங்கும் நாளுக்கு இடையிலான) ல்யூடீல் (luteal) தருணத்தில் சுரக்கும் ஸ்டீராய்டு ஹார்மோன்களால் கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் இனிப்புகளுக்கான வேட்கை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

குறிப்பிட்ட சமயத்தில் ஏற்படும் இத்தகைய வேட்கையின்போது நாம் அவற்றை அனுபவித்தாலும், நம்முடைய உணவுப்பழக்கம் சரிவிகிதத்துடன் இருந்தால் பிரச்னை அல்ல என செஜல் கூறுகிறார்.

"இது சரியானது அல்ல என எனக்குத் தெரியும். ஆனால், உங்களுக்கு உணவு வேட்கை ஏற்படும்போது குற்ற உணர்வு இல்லாமல் அதனை சாப்பிடுவதற்கு உங்களை அனுமதிப்பது சிறந்தது. உங்களுக்கு வேட்கை ஏற்படும் உணவுகளை உண்பதன்மூலம், நீங்கள் அதிகமாக உண்பதற்கான வாய்ப்பு குறைகிறது.

"எனினும் அவற்றை கவனத்துடன் சாப்பிட வேண்டும். சாப்பிட வேண்டும் எனத்தோன்றும் உணவுகளை நீங்கள் சாப்பிடாவிட்டால், அதற்கான ஆசை இன்னும் அதிகரித்து, அவற்றை இன்னும் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். உணவு வேட்கைகளை மூடிமறைக்காதீர்கள். ஒரு பிஸ்கெட் மீது உங்களுக்கு ஆசை வந்தால் அதனை சாப்பிடுங்கள். அதன் ஒவ்வொரு பைட்டையும் ருசித்து சாப்பிடுங்கள்" என்கிறார் செஜல்.

எனினும், உணவு வேட்கைககள் அடிக்கடி வந்தால் பிரச்னைகள் ஏற்படும்..

உங்களுடைய உணவுப்பழக்கம் காரணமாக இருக்கலாம்

"நீண்ட காலத்திற்கு அடிக்கடி உணவு வேட்கை ஏற்படுவது, அவை ஏற்படுவதற்கு நம்மை முன்னுரிமை அளிக்கச் செய்யும், அவை இனிப்புகள், கேக்குகள் அல்லது சாக்கலேட்டுகள் என எதுவாக இருந்தாலும் சரி" என்கிறார், பிரிட்டிஷ் டயட்டிட்டிக் அசோசியேஷன் செய்தித்தொடர்பாளரான செஜல் ஜேக்கப். "மூளையில் மகிழ்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் மையம், இனிப்பான உணவுகள் உங்களுக்கு இன்பத்தை கொடுக்கும் வகையில் தூண்டும். அதனால் நீங்கள் அவற்றை அதிகம் நாடுவீர்கள். இதனால், ஆரோக்கியமான உணவுகளை குறைவாக உண்பீர்கள்" என்கிறார். ஆரோக்கியம் அல்லாத உணவுப் பழக்கத்தை நீங்கள் கடைபிடித்தால், அதிகளவில் உணவு வேட்கை ஏற்படும். "நீங்கள் உணவுவேளைகளை தவிர்த்தாலோ, தினமும் சாப்பிடாவிட்டாலோ அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொண்டாலோ உங்களுக்கு அதிகமாக உணவு வேட்கை ஏற்படும் என்கிறார், அவர்.

இதற்கு காரணம் என்ன? "இது உங்களின் ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை உருவாக்கும். திடீரென சர்க்கரை அளவை அதிகரிக்கும் அல்லது குறைத்துவிடும். இதனால் உங்கள் உடல் இனிப்புகளை கேட்கும். ஏனெனில், இதன்மூலம் ரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய உடல் நினைக்கும்" என்றார்.

கர்ப்ப கால உணவு வேட்கை குறித்த குழப்பங்கள்

50 முதல் 90 சதவீத கர்ப்பிணிகள் கிரேவிங்கை உணர்வதாக கணக்கிடப்பட்டுள்ளது, ஆனால் ஏன்? "உண்மை என்னவெனில் கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட உணவு வேட்கை ஏன் ஏற்படுகின்றது என்பது குறித்து எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட உடலியல் மாற்றங்களால் இது நிகழலாம். ஆனால், சில ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் குறிப்பிட்ட உணவுகளுக்கான வேட்கைகளை ஏற்படுத்தலாம்," என்கிறார் செஜல்.

"கர்ப்பகாலத்தின் முதல் மற்றும் இரண்டாம் மூன்றுமாத காலங்களில் உணவு வேட்கைகள் அதிகம் ஏற்படும், மூன்றாவது மூன்றுமாத காலங்களில் அவை மறைந்துவிடும்.

"சில உச்சபட்ச நிகழ்வுகளில் சில பெண்களுக்கு பிகா (Pica) ஏற்படும். அதாவது உணவுகள் அல்லாத பொருட்களை (சாம்பல், சாக்பீஸ் உள்ளிட்டவை) உண்பதற்கான வேட்கைகள் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. ஆனால், சரியான காரணம் தெரியவில்லை. இத்தகைய உணவு வேட்கை ஏற்பட்டால் தங்களுடைய மகப்பேறு மருத்துவர்களை அணுக வேண்டும்" என்கிறார் செஜல்.

அடிக்கடி உணவு வேட்கை தோன்றினால் என்ன செய்ய வேண்டும்?

"ஒருவருக்கு சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று உணவு வேட்கை தோன்றினால், அதனை சாப்பிடாமல் பழங்களை உண்ணுங்கள் என்பேன்," என்கிறார் செஜல்.

"உணவு வேட்கைகளை சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும். மில்க் சாக்லேட்டுகளை சாப்பிட கிரேவிங் ஏற்பட்டால் அவற்றில் சர்க்கரை அளவு அதிகம், எந்த ஊட்டச்சத்து பலன்களும் இல்லை. அதற்கு பதிலாக 85 சதவீதம் அல்லது 70 சதவீத டார்க் சாக்லேட்டுகளை உண்ணலாம். அந்த சாக்லேட்டை முழுவதும் சாப்பிடாமல் பாதி சாப்பிடலாம்".

"நல்ல கொழுப்புகள், புரதம், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து) உள்ளிட்ட சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவில் தண்ணீர் அருந்த வேண்டும்." இதன்மூலம் கிரேவிங் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

"உடனடியாக இனிப்புகளை சாப்பிட தோன்றும் போது, இனிப்புகளுக்கு மாற்றாக முழுதானியங்கள் அடங்கிய பிரெட் டோஸ்ட் உடன் பீநட் பட்டர் சேர்த்து சாப்பிடலாம். சுத்திகரிக்கப்படாத, ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய உணவுகள், ரத்த சர்க்கரை அளவை ஒருங்குப்படுத்தும்," என்கிறார் செஜல்.

பிரச்னையின் வேரை கண்டுபிடிப்பது முக்கியம். "இதை சாப்பிடுங்கள், அல்லது இதை சாப்பிடாதீர்கள் என்பதைவிட முக்கியமான பிரச்னை இது."

"போதுமான உறக்கம் இல்லையெனில், நன்றாக தூங்குவதற்கான வழியை கண்டுபிடியுங்கள்" என்கிறார் செஜல்.

மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? அதிலிருந்து மீண்டு உங்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள். "யோகா அல்லது தியானம் செய்யுங்கள். உணவுப்பழக்கம் மட்டும் இதற்கு காரணம் அல்ல, வாழ்வியல் முறைகளும் அதே அளவு முக்கியமானது."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: