You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அறிவியல்: விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது.
உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.
உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நொறுக்குத்தீனிகளை (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது.
உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களின் விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கிறது. மீன் மற்றும் காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது.
இந்த ஆய்வின்படி, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிக தரமுள்ளதாக இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது.
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்காவிட்டால், எதிர்காலத்தில் அதன் விளைவு அச்சமூட்டுவதாக இருக்கும்.
ஒரு ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருந்தால் மட்டுமே அவை வெளிப்பட்ட உடனே பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன. இது அவ்வளவு சுலபமான நடைமுறை அல்ல. பல நேரங்களில் ஒற்றை விந்தணு மட்டுமே பெண்ணின் கருப்பையை சென்றடையும். தன்னுடைய இலக்கை எட்டும்.
விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இன்று முதல் இவற்றை கடைப்பிடித்தால் போதும்:
- மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம். மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.
- பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.
- மது அருந்துவதை நிறுத்துங்கள். மது அருந்துவதால் பாலியல் திறனுடன் நேரடியாக தொடர்புடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.
- உடலை ஆரோக்கியமாக, வைத்துக் கொள்ளுங்கள்.
- உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அதிகமாக செய்ய வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு என்ற பழமொழி உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.
- எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதற்கும், கருவூட்டும், கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.
- ஒரு ஆய்வின்படி, தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனபெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திற்குமட்டுமல்ல, இனப்பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: