உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

பட மூலாதாரம், Neil Juggins/Alamy
சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதா? உங்களின் ஆரோக்கியம் குறித்து இந்த சுருக்கங்கள் சொல்வது என்ன?
இந்த சுருக்கங்கள் குழப்பமான ஒன்று. தண்ணீரில் நனையும்போதும் நம் விரல்களில் மட்டுமே சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கால்கள், கைகள், முகம் என மற்ற உடல் பாகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை.
வெந்நீரில் 40 டிகிரி செல்சியஸ் சூட்டில் (104 ஃபேரன்ஹீட்) கை, கால் விரல்கள் சுருங்குவதற்கு சுமார் 3.5 நிமிடங்கள் போதும். குளிர்ந்த நீரில் சுமார் 20 டிகிரி செல்சியஸ் (68 ஃபேரன்ஹீட்) சூட்டில், இதே மாற்றம் நிகழ்வதற்கு 10 நிமிடங்களாகும். கை, கால் விரல்கள் அதிகபட்ச சுருக்கத்தை அடைவதற்கு சுமார் 30 நிமிடங்களாகும் என்கிறது பல ஆய்வுகள்.
சவ்வூடுபரவல் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் செல்களுக்குள் நீர் பாய்வதால், தோலின் மேல் அடுக்குகள் வீங்கி, இருபுறமும் உள்ள கரைசல்களின் செறிவை சமப்படுத்த ஒரு சவ்வு முழுவதும் நீர் மூலக்கூறுகள் நகரும் போது, விரல் நுனியில் சுருக்கம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், 1935 வரையிலான நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த மாற்றத்திற்கு அதிக செயல்முறைகள் நிகழ்ந்திருக்கும் என, விஞ்ஞானிகள் சந்தேகித்தனர்.
"நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது"
மேற்கையிலிருந்து செல்லும் முக்கிய நரம்புகளில் ஒன்றான இடைநிலை நரம்பில் பலத்த காயம் ஏற்பட்டவர்களின் விரல்களில் இத்தகைய சுருக்கங்கள் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வியர்த்தல், ரத்தக் குழாய்களில் சுருக்கங்கள் ஏற்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் இந்த இடைநிலை நரம்பு உதவுகிறது. இதன்மூலம், தண்ணீரில் நனைவதால் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Andrii Biletskyi/Alamy
சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் நரம்பியல் நிபுணர்கள் ஈனர் வைல்டர் ஸ்மித் மற்றும் அடெலின் சொவ் இருவரும் 2003ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விரல்களில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும்போது, விரல்களில் ரத்த ஓட்டம் பெருமளவு குறைவதை கண்டறிந்துள்ளனர்.
"விரல்கள் சுருங்கும்போது அதன் நிறம் வெளிரிப்போகும். இது அப்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது," என, மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரும் உளவியலாளருமான நிக் டேவிஸ் கூறுகிறார்.
"விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுவது நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், அதுவொரு காரணத்திற்காக நடைபெறுகிறது என்று அர்த்தம். அதாவது, இந்த சுருக்கங்கள் சில பலன்களை அளிக்கின்றன" என டேவிஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Alamy
பொருளை இறுகப்பிடிப்பதில் உதவுகிறதா?
2020ஆம் ஆண்டில் லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் 500 பேர் பங்கேற்ற ஆய்வு ஒன்றில், ஒரு பிளாஸ்டிக் பொருளை இறுகப்பிடிக்க எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை டேவிஸ் கணக்கிட்டார். அப்போது, விரல்கள் ஈரமாக இல்லாமல் இருந்தவர்களுக்கு விரல்களில் இத்தகைய சுருக்கங்களுடன் இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான ஆற்றலே தேவையாக இருந்தது. ஆனால், இதுவே ஈரமான பொருட்களை இத்தகைய சுருக்கங்களை கொண்ட விரல்கள் கையாளும்போது எளிதாக இருப்பது தெரியவந்தது.
"நீங்கள் எதையாவது இறுகப்பிடிக்க கடினமாக அழுத்த வேண்டிய அவசியமில்லை என்றால், உங்கள் கைகளில் உள்ள தசைகள் சோர்வடையும், எனவே, நீங்கள் அந்த கடினமான வேலையை நீண்ட நேரம் செய்யலாம்," என்று அவர் கூறுகிறார்.
அவருடைய இந்த முடிவுகள், மற்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளுடன் ஒத்துப்போனது. அதாவது, ஈரமான பொருட்களை கையாள்வதை, நம் கைகளில் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் எளிதாக்குவது தெரியவந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
அதில், ஒரு கொள்கலனில் உள்ள வெவ்வேறு வடிவிலான கண்ணாடி மார்பிள்களையும் தூண்டில் வெயிட்டுகளையும் மற்றொரு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும். இதில், ஒரு கொள்கலனில் உள்ள பொருட்கள் ஈரமானவை அல்ல. ஆனால், மற்றொரு கொள்கலனில் உள்ள பொருட்கள் தண்ணீருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தன. விரல்களில் சுருக்கம் இல்லாமல் செய்தபோது அப்பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்ற 17 சதவீதம் அதிகமாக நேரம் எடுத்தது. ஆனால், விரல்களில் சுருக்கத்துடன் செய்தபோது 12 சதவீதம் விரைவாக அவற்றை வேறுகொள்கலனுக்கு மாற்றினர். ஆனால், ஈரமில்லாத பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்றுவதில் விரல்களில் சுருக்கத்துடன் செய்ததற்கும் அவை இல்லாமல் செய்ததற்குமான கால அவகாசத்தில் மாற்றம் இல்லை.
பரிணாம மாற்றதால் ஏற்பட்டதா?
ஈரமான பொருட்களையும் அதன் மேற்பரப்பையும் இறுகப்பிடிக்க உதவுவதற்காக மனிதர்கள் கடந்த காலத்தில் சில சமயங்களில் விரல் சுருக்கங்களை பரிணாம மாற்றத்தின் வழியாக அடைந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வுகளின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன.
நம் முன்னோர்கள் ஈரமான பாறைகளில் நடப்பதற்கோ, மரங்களின் கிளைகளை இறுகப்பிடிப்பதற்கோ, அல்லது ஷெல் மீன்கள் உள்ளிட்ட இரையை பிடிப்பதற்கோ இது உதவியிருக்கலாம்.
மனிதக்குரங்குகளிடத்தில் இப்படி தண்ணீரில் நனையும்போது விரல்கள் சுருங்குகிறதா என்பது குறித்து இனிதான் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், வெந்நீரில் அதிக நேரத்திற்கு குளிக்கும் ஜப்பானின் மகாக்வே குரங்குகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மற்ற விலங்குகளிடத்திலும் இது நடக்கிறதா என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனால், இதன் அர்த்தம் மற்ற விலங்குகளிடத்தில் இது நடக்காது என்பது அல்ல.
விரல்கள் சுருக்கமடைவது நன்னீரைவிட உவர் நீரில் குறைவாகவே ஏற்படுகிறது. இதன்காரணமாக, முன்னோர்கள் கடற்கரைகளை ஒட்டி வாழ்வதை விட நன்னீரை ஒட்டிய சூழல்களில் வாழ உதவிய ஒரு தழுவலாக இவை இருக்கலாம்.
ஆனால், இவை எதற்கும் உறுதியான பதில்கள் இல்லை. இது தற்செயலான உடலியல் விளைவாகவும் இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Benjamin Torode/Getty Images
உடல்நலனுக்கும் சுருக்கங்களுக்கும் என்ன தொடர்பு?
இத்தகைய சுருக்கங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்த ஆச்சர்யமான தகவல்களையும் வழங்குகிறது. சொரியாசிஸ், வெண்படலம் உள்ளிட்ட தோல் நோய்கள் உள்ளவர்களுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் உள்ளவர்களுக்கு உள்ளங்கைகள் மற்றும் விரல்களில் அதிக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும், இந்த நோயை மரபு ரீதியாக கடத்துபவர்களிடத்திலும் இது ஏற்படுகிறது.
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சில சமயங்களில் குறைவான சுருக்கங்களே ஏற்படுகின்றன. இதயம் செயலிழந்தவர்களிடத்திலும் சுருக்கம் குறைவாகவே காணப்படுகிறது. இதய செயல்பாடுகளில் ஏற்படும் சில தடைகளால் இவ்வாறு ஏற்படுகிறது.
ஒரு கையில் ஏற்படும் சுருக்கம், இன்னொரு கையில் ஏற்படுவதை விட குறைவாக ஏற்படுவது, பார்கின்சன் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. அதாவது, உடலின் ஒரு பாகத்தில் அனுதாப நரம்பு மண்டலம் சரியாக செயல்படாததால் இது ஏற்படுகிறது.
(பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் ரிச்சர்ட் க்ரே என்பவர் எழுதியது)
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












