You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? - அறிவியல் கூறும் காரணங்கள்
மனிதர்கள் சிரிப்பது என்பது ஒரு சமூக உணர்வு. நாம் தனியாக இருப்பதை விட மற்றவர்களுடன் இருக்கும் போது முப்பது மடங்கு அதிகமாக சிரிப்பதாக நரம்பியல் நிபுணரான சோஃபி ஸ்காட் கூறுகிறார். நாம் நமக்கு பிடித்த மனிதர்களுடன் இருக்கும் போது அதிகமாக சிரிக்கிறோம்.
மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்? - மேலும் விளக்கமாக பார்க்கலாம்.
இதுகுறித்து, நரம்பியல் நிபுணரும் ஸ்டாண்ட்-ஆப் காமெடியனுமான சோஃபி ஸ்காட், பல்வேறு காரணங்களை விவரிக்கிறார்.
"நாம் மற்றவர்கள் கூறுவதை ஆமோதிக்கும் போது, நாம் சிரிப்போம். இதற்கு காரணம், அவர்கள் கூறும் விஷயத்தை நாமும் நினைவுப்படுத்தி கொள்வோம். மனிதர்கள் மற்ற உணர்வுகளை மறைப்பதற்கும் சிரிப்பைப் பயன்படுத்துவார்கள். மனிதர்கள் தங்களின் கவலையையோ, வலியையோ மறைப்பதற்கு சிரிப்பை பயன்படுத்துவார்கள். ஒருவரை தாங்கள் நினைத்த வேலைகளை செய்யவைக்கவும், மனிதர்கள் அவர்களை முதலில் சிரிக்க வைக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் ஒருவரை சிரிக்க வைத்தால், அவர்கள் தங்களின் ரகசியங்களை உங்களிடம் கூற அதிக வாய்ப்புண்டு.
சிரிப்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தன்னிச்சையாக வரும் சிரிப்பு. இந்த சிரிப்பை உங்களால் கட்டுப்படுத்தமுடியாது. மற்றொரு வகை, இருவர் பேசிக்கொண்டிருக்கையில் ஏற்படும் சிரிப்பு. உதாரணமாக, இருவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் சிரிப்பு. இது சிறிது நேரமே இருக்கும்" என்கிறார் சோஃபி.
சிரிப்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவ கூடிய ஓர் உணர்வு - ஏன்?
சில சமயம் ஒருவர் சிரிக்கும்போது, அவர்கள் அருகில் இருப்பவர்களும் சிரிக்க வாய்ப்புண்டு. இதனை நம் இயல்புடன் தொடர்புடைய பரவும் தன்மை (behaviourally contagious phenomena) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் ஒரு செயலை செய்வதனாலே, மற்றவர்கள் அதை செய்வார்கள். இதை நமக்கு கொட்டாவி ஏற்படும் போது, நாம் கவனித்திருக்கலாம். ஆனால், சிரிப்பும் அப்படிதான்.
முதலில், ஒரு குழந்தை தன் பெற்றோரைப் பார்க்கும்போது சிரிக்காது. ஆனால், பெற்றோர்கள் குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சி செய்வார்கள். இப்படிதான் குழந்தைகள் சிரிக்க தெரிந்துக்கொள்ளும். மேலும், நாம் ஒன்றாக சிரிக்கும் இயல்பையும் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்கிறோம்.பொதுவாக சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு உணர்வு என்று நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், அது மனிதர்களுக்கு மட்டும் உள்ள உணர்வு அல்ல என்கிறார் சோஃபி ஸ்காட். குரங்குகளின் இனம் அனைத்தும் சிரிப்பு உணர்வை வெளிப்படுத்துகின்றன.
கொரில்லா சிரிக்கும்; சிம்பான்சி சிரிக்கும்; ஒராங்குட்டான் சிரிக்கும் - இவையனைத்தும் மனிதர்களைப் போலவே சிரிக்கும். அவையும் விளையாட்டுத்தனமாக சிரித்து மகிழும். இத்தகைய சிரிப்பை எலிகளிடத்தும், கிளிகளிடத்தும் நாம் காணலாம்.
சிரிப்பின் மறுபக்கம் நம் உடலுக்கு சிரிப்பு சில தீங்கையும் ஏற்படுத்தலாம் என்கிறார் சோஃபி ஸ்காட்.
"நீங்கள் தொடர்ந்து மிகவும் அதிகமாக சிரிக்கும்போது, அதாவது உங்கள் விலா எலும்பு வரை இழுத்து சிரிக்கும்போது, அது உங்களின் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் அழுத்ததை ஏற்படுத்தும். உங்களுக்கு இதயம், நுரையீரல், ரத்த நாளங்களில் ஏதேனும் நோய் இருந்தால், இதுபோன்ற தருணங்களில் மேலும் அழுத்தம் ஏற்படும்.
வரலாற்று பக்கங்களை பார்க்கும்போது, சிரிப்பால் இறந்தவர்கள் பட்டியலும் உள்ளது. ஆனால், சிரிப்பதானால் ஏற்படும் பல நன்மைகள் உண்டு. நீங்கள் சிரிக்கும் போது, மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள். நீங்கள் சிரிக்க தொடங்கும்போது, அட்ரினலின் ஹார்மோன் குறையும். இயற்கையாகவே, எண்டோர்பின் ஹார்மோன் உடல் முழுவதும் சீராக பயணிப்பது அதிகரிக்கும். நீங்கள் சிரிப்பதைப் போல் நடித்தாலும், இத்தகைய நன்மைகள் உங்கள் உடலுக்கு ஏற்படும். அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சத்தம் போட்டு நன்றாக சிரிப்பதை மறந்து விடாதீர்கள்.
பிற செய்திகள்:
- கல்வியில் பின் தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள்: தமிழக பட்ஜெட்டின் 15 சிறப்பம்சங்கள்
- திருவள்ளூர் மாவட்டத்தில் தீண்டாமை சுவர்களா? - பிபிசி தமிழ் கள ஆய்வு
- "பெகாசஸ் உளவு மென்பொருளை விற்க ரூ. 25 கோடி கேட்டனர்" - மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
- சிந்து மாகாண வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்? இந்திய எதிர்ப்பை கடுமையாக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்
- பெட்ரோல், மண்ணெண்ணெய்க்கு காத்திருக்கும் கணவன் மனைவி – இலங்கை கள நிலவரம்
- யுக்ரேன் போர்: போர்தந்திர அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்