அறிவியல் அதிசயம்: ஆண், பெண் பாலுறுப்புகளைக் கொண்ட பூச்சி கண்டுபிடிப்பு - கொலை செய்யக் கோரும் விஞ்ஞானி

பட மூலாதாரம், PAUL BROCK/NHM
பாதி ஆண், பாதி பெண் உடலைக் கொண்ட குச்சிப் பூச்சி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இதை உறுதி செய்துள்ளது.
இந்த வகையில் இருபால் உறுப்புகளைக் கொண்ட குச்சிப் பூச்சி அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறை என்றும் அருங்காட்சியகம் கூறியுள்ளது.
அதன் உரிமையாளரான லாரன் கார்ஃபீல்ட், சார்லி என்ற தனது "செல்லப்பிராணியை" அறிவியல் ஆராய்ச்சிக்காக லண்டனில் உள்ள அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார்.
இருபால் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களை கைனன்ட்ரோமார்ப் என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

பட மூலாதாரம், LAUREN GARFIELD
சார்லி அதன் தோலை உதிர்த்தபோதுதான் எல்லோரும் அதன் அசாதாரண தோற்றத்தைக் கவனிக்கத் தொடங்கினர்.
அதன் பாதி பிரகாசமான பச்சை நிற பெண் உடலுடன், ஆணைப் போன்ற பழுப்பு நிற இறக்கைகளையும் கொண்டிருந்தது. இதையடுத்து தனது குச்சி பூச்சியைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கார்ஃபீல்ட் பதிவிட்டார்.
"நான் பொதுவாக குச்சி பூச்சிகளை விரும்புவதில்லை, ஆனால் சார்லி வித்தியாசமானது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், LAUREN GARFIELD
தன் மகன் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், மற்ற குழந்தைகளுக்கு காட்டுவதற்காக குச்சிப் பூச்சியை பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள பூச்சி நிபுணரான பால் ப்ரோக்கைத் தொடர்பு கொண்டு, புகைப்படங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு, சார்லியை கவனமாகப் பரிசோதிப்பதற்காக அவர்களுக்கு அனுப்ப கார்ஃபீல்ட் ஒப்புக்கொண்டார்.
"இவ்வகைப் பூச்சியில் கைனாண்ட்ரோமார்ஃப் (இருபால் உறுப்பு) இருப்பது இதுவே முதல் முறை. ஆனால் அவை வேறு சில இனங்களில் இருக்கின்றன" என்று ப்ரோக் கூறுகிறார்.
கார்பீல்டின் குச்சி பூச்சியை "குறிப்பிடத்தக்கது" என்று அவர் கூறுகிறார்.
"1901 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள கராசியஸ் மொரோசஸ் என்ற ஆய்வக குச்சி பூச்சிகளில் இருபால் உறுப்புகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறு 0.05% என்று 1958-இல் ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்" என்றார் அவர்.
"லாரன் கார்ஃபீல்டின் குச்சி பூச்சியானது நீளமான பின் இறக்கைகளைக் கொண்டுள்ளது. வலது புறத்தில் பெரும்பாலும் பழுப்பு நிற (ஆண்) உடல் வடிவத்தைக் கொண்டுள்ளது."
"இதில் பிறப்புறுப்பு சரியாக உருவாகவில்லை, எனவே ஆண் போன்றது என்றாலும், பெண் பூச்சியுடன் இனச்சேர்க்கை செய்ய முடியாது." என்று அவர் விவரித்தார்.
அருங்காட்சியகத்தின் உயிர் அறிவியல் துறையைச் சேர்ந்த ஜூடித் மார்ஷல் "இது ஆச்சர்யப்படுத்தும் ஒன்று" என்று குறிப்பிடுகிறார்.
"இதல் கால் மற்றும் உடல் அளவில் மிகவும் சராசரி பெண் பாலாக தோன்றினாலும், அதன் வலது பக்கத்தில் வளர்ந்த ஆணின் நீண்ட இறக்கைகள் உள்ளன" என்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக, எதிர்காலத்தில் பூச்சிகளைப் பற்றி சரியாகப் படிக்க, சார்லி கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என்று லாரன் கார்ஃபீல்ட் கூறுகிறார்.
ஏனெனில், அவை இயல்பாக இறந்தவுடன், அவை "சுருங்கி அவற்றின் நிறத்தை இழந்துவிடும்".

பட மூலாதாரம், LAUREN GARFIELD
"ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில்" அருங்காட்சியகத்தில் இந்தப் பூச்சி சேர்க்கப்படும்", என்று ப்ரோக் கூறுகிறார்.
பச்சை பீன் குச்சிப் பூச்சி (Green bean stick insect)
- டயாபெரோட்ஸ் ஜிகாண்டியா (Diapherodes gigantea), பொதுவாக பெரும் எலுமிச்சை பச்சை நிற குச்சிப் பூச்சி அல்லது பச்சை நிற குச்சிப் பூச்சி என்று அழைக்கப்படுகிறது.
- இந்த இனம் செயின்ட் வின்சென்ட், கிரெனடா மற்றும் செயின்ட் லூசியா என்ற மூன்று கரீபியன் தீவுகளை பூர்வீகமாக கொண்டுள்ளது.
- அவை காடுகளில் தாவரங்களில் உள்ள இலைகளை உண்கின்றன; மழைக்காடுகளில் மரங்களில் உள்ள இலைகளை உண்கின்றன.
- தீவுகளின் அதிக பயிரிடப்படும் பகுதிகளில், கொய்யாப்பழம், இலவங்கப்பட்டை மரங்கள், முந்திரி மரங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மூலிகைகளை உண்கின்றன.
- வீட்டில் வளர்க்கப்படும் போது, முட்புதர்கள், யூகலிப்டஸ் அல்லது கருவாலி மர இலைகளை உண்ணும், ஒப்பீட்டளவில் எளிதாக வளர்க்க கூடிய செல்லப்பிராணிகளாகக் கருதப்படுகின்றன.
- ஆண் உடலின் நீளம் பொதுவாக 9 செ.மீ (3.5 இன்ச்) மற்றும் 13செ.மீ (5 இன்ச்) வரை இருக்கும். அதே போல், பெண் உடலின் நீளம் 14செ.மீ (5.5இன்ச்) மற்றும் 18செ.மீ (7இன்ச்) வரை வளரும்.
- வீட்டில் வளர்க்கப்படும்போது, இதன் ஆயுட்காலம் ஒரு வருடம் வரை இருக்கும்.
தகவல் ஆதாரம்: பால் ப்ரோக் - லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், உயிர் அறிவியல் துறையில் பூச்சிகள் குறித்து நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானி.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













