ஒமிக்ரான் திரிபுகளுக்கும் எச்ஐவிக்கும் தொடர்பு உண்டா? ஆராயும் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்

Omicron

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆண்ட்ரூ ஹார்டிங்
    • பதவி, ஆப்பிரிக்கா நிருபர், பிபிசி நியூஸ்

புதிய கோவிட்-19 திரிபுகளுடைய தோற்றத்துக்கு தொடர்புடைய "மிகவும் நம்பத்தக்க கோட்பாட்டை" ஒமிக்ரான் திரிபை கண்டுபிடித்ததற்காக பாராட்டப்பட்ட தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்படாத எச்.ஐ.வி உள்ளிட்ட பிற பலவீனமான காரணிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிறழ்வுகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், இதற்கு காரணம் எச்.ஐ.வி மட்டுமே என அவர்கள் சுருக்கிக் கொள்ளவில்லை.

எச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள நோயாளிகள், பல்வேறு காரணங்களால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை தரும் மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு, கோவிட்-19 தொற்று பல மாதங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"பொதுவாக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக வேலை செய்தால், வைரஸை எளிதாக வென்றுவிட முடியும்", என்று கேப் டவுனின் டெஸ்மண்ட் டுட்டு எச்ஐவி அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் லிண்டா-கேய்லே பெக்கர் (Linda-Gayle Bekker) கூறுகிறார்.

"நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள ஒருவரிடம், இந்த வைரஸ் தொடர்ந்து இருப்பதை காணலாம். அது அப்படியே இருக்காது; மேலும் அது தன்னை தானே பிரதியெடுக்கும். அது பிரதியெடுத்துக்கொண்டே செல்லும்போது, அதற்கு சாத்தியமான பிறழ்வுகளுக்கு உட்படுகிறது. எதிர்ப்பு சக்தி ஒருவரிடம் ஒடுங்கும்போது, இந்த வைரஸ் பல மாதங்கள் இருக்கும் - அது தொடர்ந்து பிறழ்வுகளுக்கு இட்டுச்செல்லும்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அவர்களுடைய ஆராய்ச்சியை மேலும் முன்னெடுத்து செல்லும்போது, எச்.ஐ.வியுடன் வாழ்பவர்களை மேலும் இழிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை கொள்கின்றனர். உலகின் எச்.ஐ.வி நோயின் மிகப்பெரிய தாயகமான தென்னாப்பிரிக்காவிலும் சரி, உலகம் முழுவதிலும் சரி, இது பொருந்தும்.

ஆன்டி- ரெட்ரோவைரல் மருத்துகளை உட்கொள்பவர்களுக்கு, அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கிறது என்று வலியுறுத்துவது அவசியம்," என்று பேராசிரியர் பெக்கர் கூறுகிறார்.

Social worker Asiphe Ntshongontshi says some stigma against HIV patients continues
படக்குறிப்பு, எச்.ஐ.வி பற்றிய தவறான பிம்பம் தொடர்கிறது என்று சமூகத் தொடர்பு பணியாளர் ஆசிபே ட்ஷோங்கோன்ட்ஷி கூறுகிறார்

இது தொடர்பாக, தற்போது தென்னாப்பிரிக்கா மருத்துவமனைகளில் குறிப்பிட்ட இரண்டு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில், பெண் ஒருவருக்கு கிட்டத்தட்ட தொடர்ந்து எட்டு மாதங்கள் கோவிட்-19 பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அப்போது, அந்த வைரஸ் 30 விதமான மரபணு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல், பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இப்படி 10 முதல் 15 வரையிலான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, ஒமிக்ரான் கண்டுப்பிடிப்பை உறுதிசெய்த குழுவை தலைமை தாங்கும் பேராசிரியர் துலியோ டி ஒலிவைரா (Tulio de Oliveira) குறிப்பிடுகிறார்.

"இது மிகவும் அரிதான நிகழ்வு. ஆனால், வைரஸின் பரிணாம வளர்ச்சியின் மூல ஆதாரம், அடிப்படையில், நோய் எதிர்ப்பு சக்தி ஒடுங்கிப்போய் இருப்பவர்களிடமிருந்து தொடங்கி இருக்கக்கூடும் என்பது நம்பத்தக்க விளக்கமாக உள்ளது", என்று அவர் கூறுகிறார்.

மேற்கத்திய நாடுகளிடமிருந்து விரைவாக, சர்ச்சைக்குரிய, பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் பயண தடைகளை ஒமிக்ரான் திரிப்பின் கண்டுபிடிப்பு ஏற்படுத்தியது. இதனால், தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் விமர்சனங்களை சந்தித்தனர்; சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல்கள்கூட அவர்கள் வந்தன.

புதிய திரிபுகளை உருவாக்கியதற்கு அவர்களின் நாடு அல்லது கண்டம் தனித்து நிற்பதை தடுக்கும் எந்த ஆலோசனையையும் அவர்கள் கருத்தில் கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி ஒடுங்கியுள்ள நோயாளிகளுக்கும், புதிய கோவிட் திரிபுகளுக்கும் தொடர்பு உள்ளன என்பது மிகுதியாக நம்பத்தக்க கோட்பாடு என்று மூத்த எச்.ஐ.வி நிபுணரான பேராசிரியர் சலிம் கரீம் கூறுகிறார். இவர் தென்னாப்பிரிக்க அரசின் கோவிட்-19 ஆலோசனை கமிட்டியின் முன்னாள் தலைவரும் ஆவார்.

"ஆனால், இது நிரூபிக்கப்படவில்லை. நான்கு வெவ்வேறு கண்டங்களிலிருந்தும் ஐந்து திரிபுகள் வருவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆதனால், ஆப்பிரிக்காவை பலியாடாக்கும்வது கொடூரமான செயல்".

"உலகில் உள்ள பிற பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; அவர்கள் கறுப்பினராகவோ, ஆப்பிரிக்காவில் இருப்பவர்களாகவோ இருந்தால் மட்டுமே நாங்கள் கவலை கொள்வோம் என்று கூறுவது போல் உள்ளது", என்று பேராசிரியர் கரிம் கூறுகிறார்.

South Africa condemned travel restrictions imposed by Western governments

பட மூலாதாரம், AFP

உலக அளவில், ஏன் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி சமரசம் செய்யப்படுகிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

உதாரணமாக, ஆல்பா திரிப்பின் கண்டுப்பிடிப்பு, பிரிட்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் ஒரு நோயாளியுடன் தொடர்புபடுத்தப்பட்டது.

"நீரிழிவு நோய், புற்றுநோய், பசி, தன்னுடல் தாக்கு நோய், நாள்பட்ட காசநோய் -- இவற்றைப் போல் பல்வேறு காரணங்களால் பெருவாரியான மக்களுக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது", என்று கேப்டவுனிலுள்ள க்ரோடி ஷூர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் பேராசிரியர் மார்க் மெண்டெல்சன் ( Professor Marc Mendelson) கூறுகிறார்.

தென்னாப்பிரிக்காவில், கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் எச்.ஐ.வி நோயுடன் வாழ்கின்றனர். ஆனால், அவர்களுள் மூன்றில் ஒரு பகுதி தற்போது எந்த மருந்துகளும் எடுத்துக்கொள்வதில்லை.

கேப் டவுனின் தெற்கு பகுதியில், பாறைகள் நிறைந்த மலைச்சரிவுகளுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையே உள்ள நெரிசலான நகரம் மாசிபுமெலேலே (Masiphumelele).

இந்த நகரத்தில் உள்ள வயது வந்தவர்களின் மக்கள் தொகையில் கால் பகுதி, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

"இங்கு பல பிரச்னைகள் உள்ளன. சிலர் [மக்கள்] பரிசோதனை செய்து கொள்ள விரும்பவில்லை. சிலர் அதை தெரிந்து கொள்ள விரும்பவில்லை. எச்.ஐ.வியைச் சுற்றி தவறான பிம்பம் சஉள்ளது", என்று 25 வயதான சமூகத் தொடர்பு பணியாளர் ஆசிபே ட்ஷோங்கோன்ட்ஷி (Asiphe Ntshongontshi), ஏன் இங்கும், நாடு முழுவதும் சுகாதாரத் திட்டம் இருக்கும் போது, பெரும்பாலான மக்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று விளக்குகிறார்.

A quarter of residents in Masiphumelele township, south of Cape Town, have HIV

ஆப்பிரிக்காவில் தற்போதைய கோவிட் திரிபுகள் எதுவும் உருவாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இருப்பினும், ஒமிக்ரானைப் போல பரவக்கூடிய ஒரு திரிபு தென்னாப்பிரிக்காவில் திடீரென வந்ததையடுத்து, அது ஒடுங்கிய நோயெதிர்ப்பு சக்தி உள்ள ஒருவருடன் தொடர்புப்படுத்தபடலாம் என்ற ஊகத்தை தூண்டியுள்ளது.

தொற்றுநோய் காரணமாக, சில பகுதிகளில், எச்.ஐ.விக்கு எதிரான நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இச்சமயத்தில், எச்.ஐ.வி உடனான சாத்தியமான தொடர்பு பற்றிய கவலை, உலக அளவில் அதற்கான நடவடிக்கைகளைத் தூண்டும் என்று வைரஸை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

"இது ஒரு உலகளாவிய பிரச்னை - நமது உலகளாவிய சமூகத்தில் வைரஸ் தொற்றுகள் எவ்வாறு வளர்கின்றன என்பதை இந்த பிரச்னை புரிந்து கொள்ள வைக்கும். மேலும், தற்போது நம்மிடம் உள்ள சிறந்த பாதுகாப்பு தடுப்பூசி ஆகும். இந்த செய்தி பரவலாகவும் தெளிவாகவும் சென்றைடைய வேண்டும்", என்று பேராசிரியர் பெக்கர் கூறினார்.

கோவிட் தடுப்பூசிகளில், உலகின் பிற பகுதிகளை விட ஆப்பிரிக்கா இன்னும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், அந்நாடு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மீது குறிப்பாக கவனம் செலுத்துவது முக்கியம் என்று தென்னாப்பிரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த நான்கு அல்லது ஐந்து பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவைப்படலாம்.

."புதிய திரிபுகள் உருவாக்கும் அபாயத்தை நாம் குறைக்க விரும்பினால், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இந்த சவாலை நாம் ஏற்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்வதையும், தடுப்பூசிகளுக்கு அவர்கள் கண்டறியக்கூடிய நோய் எதிர்ப்பு திறனை உறுதிப்படுத்த முயற்சிக்க வேண்டும்."

"இல்லையெனில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வரை கூடுதல் டோஸ் கொடுக்கப்பட வேண்டும். இதுவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் திரிபுகள் உருவாக்கும் சாத்தியங்களுக்கான சிறந்த பாதுகாப்பாக இருக்கும்", என்று பேராசிரியர் கரீம் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: