You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெர்சவரென்ஸ் ரோவர்: செவ்வாயில் இரு பாறை மாதிரிகள் சேகரிப்பு - விஞ்ஞானிகள் கூறுவதென்ன?
- எழுதியவர், ஜோனாதன் அமோஸ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் தன் முதல் பாறை மாதிரிகளைச் சேகரித்தது. அடுத்த சில நாட்களில் மீண்டும் இரண்டாவது முறையாக பாறை மாதிரிகளைச் சேகரித்தது.
இலக்கு வைக்கப்பட்டிருக்கும் பாறை மாதிரிகள் எரிமலை குழம்புகளால் தோன்றியதாக இருக்கலாம் என்றும், எனவே அதை துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பாறை மாதிரிகளில் உப்பு இருக்கலாம் என்றும், உப்பு இருந்தால் அங்கு நீர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும், உயிரினங்களும் வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற குறிப்பிட்ட பகுதிக்கு பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பப்பட்டது. காரணம் அங்கு 100 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த 45 கிலோமீட்டர் அகண்ட குழி போன்ற அமைப்பில் ஏரி இருந்திருக்கலாம் என செயற்கைக் கோள் படங்கள் கூறுகின்றன. ஜெசரோ க்ரேடருக்கு மேற்குப் பக்கம் ஆறுகளும் டெல்டா படிமங்களும் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ரோவர் சேகரித்திருக்கும் பாறை மாதிரிகளை வைத்து நீர் நிலை சூழல்கள் எப்போது இருந்தன என குறிப்பிட்டு ஒரு காலத்தை வரையறுக்க முடியும்.
ராஷெட் என்கிற திட்டிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகள், ஜெசெரோ க்ரேட்டிலேயே மிகவும் பழைய பாறைப் படிமங்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த பாறைகளில் கால்சியம் சல்ஃபேட் அல்லது கால்சியம் பாஸ்பேட் போன்றவை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பூமியில் உப்பு போன்ற தாதுப் பொருட்கள் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்களை பாதுகாப்பவை. அது செவ்வாய் கிரகத்துக்கும் பொருந்தும் என எதிர்பார்ப்பதாக பெர்சவரன்ஸ் திட்டத்தின் துணை விஞ்ஞானி முனைவர் கேடி ஸ்டேக் மார்கன் கூறியுள்ளார்.
ஆனால் இந்த விசாரணைகள் அனைத்தும், செவ்வாயில் இருந்து பாறை மாதிரிகள் பூமிக்கு வந்த பிறகு தான் மேற்கொள்ள முடியும்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், மொத்தம் 24 பாறை மாதிரிகளைச் சேகரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த மாதிரிகள் இந்த தசாப்த காலத்துக்குள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் பூமிக்கு கொண்டு வரப்படும்.
ரோவர் தரையிறக்கப்பட்டதில் இருந்து இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சற்றே உயரத்தில் இருக்கும் சிடாடெல் (Citadelle) என்கிற மேட்டுப் பகுதி நோக்கி இயக்கப்பட்டது. ராஷெட் (Rochette) என குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் துளையிட்டு பாறை மாதிரிகளைச் சேகரிக்க பெர்சவரன்ஸ் ரோவர் குழுவினர் தேர்வு செய்தனர் என்பதும் இக்கு நினைவுகூரத்தக்கது.
ஒரு கட்டத்தில், ரோவரை, வடக்கில் நதி மற்றும் டெல்டா படிமங்கள் இருந்ததாக கருதப்படும் பகுதிக்குக் கொண்டு செல்ல விரும்புகிறார்கள் விஞ்ஞானிகள்.
தற்போது செவ்வாயில் ரோவரால் சேகரிக்கப்பட்டு இருக்கும் இரு மாதிரிகளுக்கு மான்ட்டெனைர் (Montdenier - செப் 6 சேகரிக்கப்பட்டது) மற்றும் மான்டக்னக் (Montagnac செப் 8 சேகரிக்கப்பட்டது) என பெயரிடப்பட்டிருக்கிறது என நாசாவின் செவ்வாய் பாறை மாதிரிகள் பிரிவின் விஞ்ஞானி மீனாட்சி வாதவா கூறியுள்ளார்.
"பெர்சவரன்ஸ் ரோவர் சேகரித்திருக்கும் பாறை மாதிரிகளைக் குறித்து மிகைப்படுத்தத் தேவை இல்லை. வேற்று கிரகத்தில் சேகரிக்கப்பட்ட முதல் பாறை மாதிரிகள் அவை. அது உண்மையிலேயே வரலாற்றின் மிக முக்கிய சாதனை." என கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்: 'மாணவர்கள் மடிந்தபோது மரண அமைதி காத்தது அ.தி.மு.க'
- நீட் தேர்வு விலக்கு: மாணவர்களை குழப்புகிறதா தி.மு.க அரசு? சட்டப்படி சாத்தியமா?
- ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
- ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க தாலிபன்கள் புதிய உத்தரவு
- பட்டேதார் சாதியை சேர்ந்த பூபேந்திர பட்டேல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்