பட்டேதார் சாதியை சேர்ந்த பூபேந்திர பட்டேல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட காரணம் என்ன?

குஜராத் மாநில முதல்வர் பதவிக்கு பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலத் தலைநகர் காந்திநகரில் இன்று நடந்த பாஜக சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் அவரை பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர்.

பாஜக மத்திய பார்வையாளராக வந்திருந்த ஒன்றிய அமைச்சர் நரேந்திர தோமர் இந்த தகவலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை நேற்று சனிக்கிழமை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வர் தேர்வு நடைபெற்றது.

பூபேந்திர பட்டேல், முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இவர் முன்பு அகமதாபாத் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார்.

பூபேந்திர பட்டேல் குஜராத்தின் புதிய முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்பார் என்று தெரிகிறது.

தாம் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தெரிவிக்கும் கடிதத்துடன் பூபேந்திர பட்டேல் இன்று ஆளுநரை சந்திக்கிறார்.

ஆனால், பதவி விலகிய முதல்வர் விஜய் ரூபானிக்கு என்ன பொறுப்பு வழங்கப்படவுள்ளது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில், பூபேந்திர பட்டேல் ஏன் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்வி எழுகிறது.

அகமதாபாத் நகரில் 1962 ஜூலை 15ம் தேதி பிறந்த பூபேந்திர பட்டேல் இளங்கலை படித்தவர். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுவந்த இவர் இதுவரை அமைச்சர் பொறுப்புகூட வகித்ததில்லை.

கட்லோடியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல் முறையாக 2017ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் பட்டேலை அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பட்டேதார் சாதியில் செல்வாக்கு பெற்ற சர்தார்தாம் என்ற அமைப்பின் பொருளாளராக இவர் இருந்துள்ளார். உலக உமியா ஃபௌன்டேஷன் என்ற அமைப்பின் நிலைக்குழுத் தலைவராகவும் இவர் இருக்கிறார்.

மேம்நகர் நகரமன்ற அரசியலில் செல்வாக்கு செலுத்திவந்த இவர், அகமதாபாத் பள்ளி வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார். அகமதாபாத் நகராட்சி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட், பேட்மிண்டன் பிரியர் இவர் என்கிறது குஜராத் சட்டப்பேரவை இணைய தளம்.

விஜய் ரூபானி பதவி விலகிய பிறகு, நிதின் பட்டேல், சி.ஆர்.பட்டேல், மன்சுக் மாண்டவியா போன்ற பிரபல பாஜக தலைவர்களில் யாராவது முதல்வராகக்கூடும் என்று பேச்சு நிலவியது.

ஆனால், காட்சியிலேயே இல்லாதவர்களை தேர்வு செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்குப் பெயர் போன பாஜக முதல் முறை எம்.எல்.ஏ.வான பூபேந்திர பட்டேலை முதல்வராக தேர்வு செய்து முதல்வர் கனவில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

சிறிது காலமாகவே, பட்டேதார் சாதியை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்தது. ஆனால், பாஜக செல்வாக்கு மிக்க பட்டேதார்களை விடுத்து அரசியலில் ஒப்பீட்டளவில் அனுபவம் இல்லாத பட்டேதாரான பூபேந்திர பட்டேலை தேர்வு செய்தது.

"விஜய் ரூபானி பதவி விலகியபோதே, அடுத்து வரப்போகிறவர் ஒரு பட்டேதார் சாதியை சேர்ந்த முதல்வர்தான் என்பது தெளிவாகிப் போனது," என்கிறார் பிபிசி குஜராத்தி சேவை ஆசிரியர் அங்கூர் ஜெயின்.

"அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு பட்டேதார்களின் ஆதரவு தேவை. கடந்த கால் நூற்றாண்டாக பாஜகவை ஆதரித்துவரும் சாதி அது," என்கிறார் அவர்.

பாஜகவுக்கு பட்டேல் அதாவது பட்டேதார் தலைவர் ஒருவர் வேண்டும். ஆனால், அவர் பட்டேதார் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தாதவராக இருக்கவேண்டும். இந்த அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பாஜக முதல்வர் பதவிக்கு ஆட்களைத் தேடியது.

"இவரை முதல்வராக தேர்ந்தெடுக்க இரண்டாவது ஒரு காரணம் இருந்தது. முதல்வராக தேர்வு செய்யப்படுகிறவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கக்கூடாது. பட்டேதார் சாதியை சேர்ந்த பெரிய தலைவர்களான நிதின் பட்டேல் போன்றவர்களுக்கு கட்சிக்குள் நிறைய எதிர்ப்பு இருந்தது," என்கிறார் அங்கூர் ஜெயின்.

எம்.எல்.ஏ.வாக பூபேந்திர பட்டேலுக்கு அனுபவம் குறைவாக இருக்கலாம், ஆனால், அவர் அகமதாபாத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.

"நரேந்திர மோதி பிரதமராக ஆனபிறகு, ஆனந்திபென் பட்டேல், அமித் ஷா ஆதரவாளர்கள் கட்சிக்குள் இரண்டு குழுக்களாக இருந்தனர்" என்கிறார் அவர்.

"பூபேந்திர பட்டேல் வெகுஜனத் தலைவர் அல்ல. ஆனால் அடுத்த தேர்தல்வரை ஆட்சியை நடத்துவதற்கு தாங்கள் எதிர்பார்த்த மேற்குறிப்பிட்ட தகுதிகளோடு இருந்த பூபேந்திர பட்டேலை நரேந்திர மோதி, அமித்ஷா ஆகியோர் தேர்வு செய்திருக்கிறார்கள்," என்கிறார் அங்கூர் ஜெயின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :