You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி, அமித் ஷா வலதுகரமான விஜய் ரூபானி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகியது ஏன்?
வெகுஜனத் தலைவராக இல்லாதபோதும், நரேந்திர மோதி, அமித்ஷாவின் நம்பிக்கையைப் பெற்றவரான குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் குளத்தில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளார்.
தம்மைப் போன்ற ஓர் எளிய தொண்டர் குஜராத் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்காக அவர் தனது கட்சியான பாஜகவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தனது பதவிக் காலத்தில் குஜராத்தின் வளர்ச்சிப் பாதையில் மேலும் சிறிது வளர்ச்சியைக் கூட்ட பாடுபட்டதாகவும், பிரதமர் நரேந்திர மோதியின் வழிகாட்டுதலில் இந்த வளர்ச்சிப் பயணம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சனிக்கிழமை மாலை ஆளுநரை சந்தித்து தனது விலகல் கடிதத்தை அவர் அளித்தார்.
அவரது விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பாஜக-வில் பொறுப்புகள் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் அதுதான் அந்த கட்சியின் சிறப்பு என்றும் அவர் கூறினார்.
புதிய முதல்வரின் கீழ் ஆட்சி புதிய உற்சாகத்துடன் நடக்கும் என்றும் அவர் கூறினார். யாருடைய தலைமையில் சட்ட மன்றத் தேர்தலை கட்சி எதிர்கொள்ளும் என்று கேட்டபோது, "பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில்" என்று அவர் பதில் அளித்தார்.
புதிய உத்வேகத்தோடு கட்சியில் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாஜக முதல்வரை மாற்றும் 4வது மாநிலம்
கடந்த ஐந்து மாதங்களில் பாஜக தான் ஆட்சியில் இருக்கும் 4 மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியுள்ளது.
கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா மாற்றப்பட்டு அவருக்கு பதில் பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார்.
அசாம் முதல்வராக இருந்த சரபானந்த சோனோவால், சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மாற்றப்பட்டு அவருக்குப் பதில் மூத்த அமைச்சராக இருந்த ஹிமாந்த பிஸ்வா சர்மா முதல்வராக்கப்பட்டார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் இரண்டு முறை முதல்வர்களை மாற்றியது பாஜக. தீரத்சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகிய இருவர் அடுத்தடுத்து மாற்றப்பட்டு புஷ்கர் சிங் தாமி முதல்வராக்கப்பட்டார்.
விஜய் ரூபானி எப்படி முதல்வரானார்?
2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தபோது குஜராத் மாநிலத்தில் பட்டேதார் சாதிக்கு இட ஒதுக்கீடு கோரி பெரிய போராட்டம் நடந்துகொண்டிருந்தது.
அப்போது முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல் பதவி விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவரும் மோதி, அமித் ஷாவின் நம்பிக்கைக்கு உரியவர்தான்.
அது போன்ற ஒரு சூழ்நிலையில், பெரும்பான்மை சாதி எதையும் சேராதவரும், குறிப்பாக பட்டேல் அல்லாதவரும், ஜெயின் பனியா சாதியை சேர்ந்தவருமான விஜய் ரூபானி முதல்வர் பொறுப்புக்கு பொருத்தமானவர் என்று கருதி பாஜக தலைமையால் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அனைவரையும் திருப்திப்படுத்த முனைந்தது பாஜக.
ஆனால், தமது ஆட்சிக் காலம் முழுவதுமே நரேந்திர மோதி, அமித் ஷா ஆகியோரின் நிழலிலேயே அவர் ஓட்டினார். முதல்வர் முகம் விஜய் ரூபானியுடையதாக இருந்தாலும், குஜராத் தொடர்புடைய எல்லா முடிவுகளையும் டெல்லியில் இருந்து அந்த இரண்டு மூத்த தலைவர்களும்தான் எடுத்தார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் உறுதியான கருத்து.
அரசு அதிகாரிகளுக்கும், கட்சித் தலைவர்களுக்கும்கூட குஜராத்தில் ஆட்சியை யார் நடத்துவது என்று தெரியும்.
முதல்வரின் தனி உதவியாளர் ஷைலேஷ் மண்டாலியா கூட யாருடைய தேர்வு என்பதில் எல்லோருக்கும் ஐயம் இருந்தது.
காரணம், தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில அரசியலில் இருந்து டெல்லி செல்லும்வரை அவரது உதவியாளராக இருந்தவர் ஷைலேஷ் மண்டாலியா.
அரசியல் தலைவர்கள் அரிதாகவே தங்கள் உதவியாளர்களை மாற்றிக்கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.
விஜய் ரூபானி விலகலுக்கு காரணம் என்ன?
இப்போது ஓராண்டில் மாநில சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், விஜய் ரூபானி மாற்றப்பட்டுள்ளார். சிறிது காலமாகவே இது தொடர்பான பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது, விஜய் ரூபானி அவருக்கு முந்தைய முதல்வர்களைப் போல ஒரு வெகுஜனத் தலைவர் அல்ல. அவருக்கும் மக்களுக்குமான தொடர்பு என்பது எப்போதும் பலவீனமானது. இத்தகைய ஒரு முதல்வரை தேர்தல் ஆண்டில் வைத்துக்கொள்வது சரியாக இருக்காது என்று பாஜக தலைமை கருதியிருக்கும் என்று தெரிகிறது.
கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது விஜய் ரூபானி முதல்வராக இருந்தார். அவர் முதல்வராக எதிர்கொண்ட ஒரே சட்டமன்றத் தேர்தல் அது. அந்த தேர்தலில் பாஜகவின் பலம் 182 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் 99 ஆக குறைந்தது.
முந்தைய 2012 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது வரையில் வருகிற எல்லா தேர்தல்களுமே மோதி - அமித் ஷா இரட்டையர்களுக்கு அக்கினி பரிட்சைதான் என்றபோதும் அடுத்த ஆண்டு வரப்போகும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் சுமார் கால் நூற்றாண்டாக ஆட்சியை கையில் வைத்திருக்கும் சொந்த மாநிலத்தில் தோற்பது அவர்கள் அரசியலுக்கு மிகவும் ஆபத்தானது.
அதனால்தான், தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே சரி செய்யவேண்டியவற்றை அவர்கள் சரிசெய்ய முனைகிறார்கள்.
விஜய் ரூபானி விலகியுள்ள நிலையில், குஜராத் ஆட்சியை டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்த முயல்கிறது பாஜக தலைமை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹர்திக் பட்டேல் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவிட் 19 சிக்கலை மோசமாக கையாண்டதற்காக விஜய் ரூபானி பதவி விலகியிருந்தால் அவரை மக்கள் பாராட்டியிருப்பார்கள் என்று குஜராத்தை சேர்ந்த பிரபல தலித் தலைவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.
இதெல்லாம், இந்த பதவி மாற்றம் தொடர்பாக பாஜக சந்திக்க உள்ள விமர்சனங்களுக்கான முன்னோட்டம். கடந்த தேர்தலில் பாஜகவை 100க்குள் சுருக்குவதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பாஜக-வை தாக்கத் தொடங்கினால், அதை பாஜக எப்படி சமாளிக்கும் என்பதைப் பார்ப்பது சுவாரசியமானது. இன்னும் ஓராண்டில் பாஜக எதிர்கொள்ளப் போகும் சட்டமன்றத் தேர்தலும் இதைப் போலவே சுவாரசியமாக இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்