You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு மசோதா: மாணவர்களை குழப்புகிறதா மு.க. ஸ்டாலினின் திமுக அரசு? சட்டப்படி சாத்தியமா?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தாக்கல் செய்ய உள்ளது. ` சட்ட சிக்கல்களை களையும் வகையில் மசோதா அமையுமா என்பதைப் பொறுத்தே இது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவரும்' என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவால் என்ன நடக்கும்?
தலைமுடிக்கும் சோதனை
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்கள் எழுதினர். காலை 11 மணியளவில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்களில் சோதனை என்ற பெயரில் தலை முதல் கால் வரையில் மெட்டல் டிடெக்டரை வைத்து சோதித்தனர். மாணவிகளின் தலைமுடியை பரிசோதித்த பிறகே தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி கிடைத்தது. இதனால் பெற்றோர் தரப்பில் கடும் அதிருப்தி கிளம்பியது.
அதேநேரம், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவகுமாரின் மகன் தனுஷ், நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தோல்வியடைந்த தனுஷ், இந்தமுறையும் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், ` நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.கவின் சட்டப் போராட்டம் தொடரும்' என்றார்.
ரகசியம் எப்போது செயலுக்கு வரும்?
தொடர்ந்து மாணவர் தனுஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ` அச்சத்தை விலக்கி, நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவர் தனுஷை மரணக்குழியில் தி.மு.க அரசு தள்ளிவிட்டது. நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவானது? ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?' எனக் கேள்வியெழுப்பினார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ` மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை தி.மு.க நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் தி.மு.க அரசுதான், சேலம் மாணவர் தனுஷின் மரணத்திற்கு முழுப் பொறுப்பு' எனப் பதிவிட்டுள்ளார்.
சேலம் மாணவர் மரணம் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ` இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும் பிடிவாதமும் மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.
மு.க.ஸ்டாலினின் நம்பிக்கை
"நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ, மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடையவைக்கிறது. இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது."
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஆய்வு நடத்தி 34 நாள்களுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
மொத்தம் 165 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், நீட் தேர்வால் ஆசிரியர், மாணவர் தரப்பில் உள்ள பிரச்னைகள் உள்பட பலவற்றை ஆராய்ந்து அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா, திங்கள்கிழமையன்று தாக்கல் செய்யப்பட உள்ளதை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இது முதல்கட்டப் பணி
`` கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. நீட் தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசு சட்டம் இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துவிட்டால் செல்லுபடியாகும். நீட் தேர்வுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. மாநிலத்தில் சட்டம் இயற்றிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது என்பது அடுத்தகட்டமான நடவடிக்கையாக இருக்கும்" என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` சட்டம் இயற்றப்பட்டு ஒப்புதல் பெற்றுவிட்டால் நீட் தேர்வு நடப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே, மாநில சட்டசபையில் சட்டம் இயற்றுவது என்பது முதல் கட்டம். அதற்கான நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியுள்ளது. இதுபோன்று வேறு எந்த மாநிலங்களும் செய்யவில்லை. மாநில உரிமைகள் தொடர்பான எந்தக் குரலும் பிற மாநிலங்களில் இருந்து வருவதில்லை.
வேளாண் சட்டங்களை எதிர்த்து பிற மாநிலங்கள் குரல் கொடுக்கின்றன. வேளாண் சட்டம் என்பது மாநிலப் பட்டியல் சம்பந்தப்பட்டது. மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றினால் அதனை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை மாநிலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசைப் பின்பற்றி பிற மாநிலங்களும் முன்வரலாம்" என்கிறார்.
சட்டரீதியாக சாத்தியமா?
``தி.மு.க அரசின் நீட் விலக்கு நிரந்தர மசோதாவால் என்ன நடக்கும்?" என மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நீட் விவகாரத்தில் சட்டமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்த பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வரையில் நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிவுரையின்படி, என்ன மாதிரியான சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது வரும் என ஆலோசித்து அதனை எதிர்கொள்ளும் வகையில் மசோதாவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். அதன்பிறகு சட்டரீதியாக இது எந்தளவுக்கு நிற்கும் என்பதைப் பார்க்கலாம்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய ஜெயப்பிரகாஷ் காந்தி, `` நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அடுத்த வருடத்தில் எதாவது நடப்பதற்கான வாய்ப்புகள் வரலாம். அதற்கான முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை கல்வியாளர்களாகிய நாங்கள் வரவேற்கிறோம். காரணம், நீட் தேர்வு என்பது அதற்கான நோக்கத்தை அடையவில்லை. தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில், தகுதியான மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்கின்றனர்.
114 மார்க் என்பது தகுதியான மதிப்பெண் என்றால் அதற்குக் குறைவாக இருந்தாலும் மாணவர்களை அனுமதிக்கின்றனர். இதன்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேலைகளைச் செய்கின்றனர். இதனை மையமாக வைத்து மாநில அரசு வாதாட வேண்டும். `தேசிய தேர்வு முகமை தரத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கக் கூடாது' என மருத்துவர்களே ஒப்புக் கொள்கின்றனர். பிற மாநிலங்களில் நுழைவுத்தேர்வு நடைமுறை உள்ளது. நமது மாநிலத்தில் அது இல்லாமல் இருந்தது. அதுபோன்ற ஒரு தேர்வுக்கு நமது மாணவர்கள் தயாராக இருந்ததில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நுழைவுத் தேர்வினை எழுத வேண்டிய மனநிலைக்கு வந்த மாணவர்கள், சற்று யூ-டர்ன் அடிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது 99.9 சதவிகிதம் பயிற்சி மையங்களின் உதவியில்லாமல் நீட் தேர்வில் யாராலும் தேர்ச்சி பெற முடியாது. அரசு முயற்சி எடுத்தாலும் பணம் உள்ள மாணவர்களால் மட்டும் பயிற்சி எடுக்கும் நிலை உள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்கிறார்.
குழப்பத்தை விதைக்கிறதா தி.மு.க?
``மாநில அரசின் நீட் நிரந்தர விலக்கு மசோதாவை பா.ஜ.க எப்படிப் பார்க்கிறது?" என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் சி.டி.நிர்மல்குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டம் ஆகியவற்றை சட்டமன்றம் மீறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மாநில சட்டசபையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பலாம். ஆனால், மத்திய அரசு இதனை ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பில்லை.
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்பட அனைத்தும் முடிந்துவிட்டது. நீட் தேர்வை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் ஆஜரானார். இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது என அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் பல்வேறு சலுகைகளை வேண்டுமானால் மாநில அரசு முன்வைக்கலாம். குறிப்பாக, கேள்விகளை தமிழில் தயாரிப்பது, மாநில அரசின் பாடத்திட்டத்தில் கேள்விகள், ஆண்டுக்கு 2 முறை தேர்வுகள் என மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைக்கலாம். அதைவிடுத்து இதுபோன்ற முயற்சிகள் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்" என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், `` சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினாலும் தேர்வு எப்போதும் போலத்தான் நடக்கும். அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதில் மாநில அரசால் தலையிட முடியாது. இதனை மேலும் மேலும் சிக்கலை உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க அரசின் இந்த அறிவிப்பைப் பார்க்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு அடுத்த வருடம் இருக்காதா என்ற மனநிலைதான் வரும். அவர்களைப் பொறுத்தவரையில், பள்ளி விடுமுறை என்ற மனநிலையில்தான் இதைப் பார்ப்பார்கள். இதனைத் தாண்டி அவர்கள் யோசிக்கப் போவதில்லை.
நன்கொடை வசூல் 400 கோடி ரூபாய்
மேலும், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதமும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கியுள்ளனர். இதனை அதிகப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்கலாம். இதன்மூலம் அதிகப்படியான மாணவர்களை சேர்க்கலாம். கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களில் கட்டணம் செலுத்த முடியாமல் 100 பேராவது வெளியேறியிருப்பார்கள். அவர்களைப் போல இந்த ஆண்டு கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு மாநில அரசு உதவ முன்வரலாம்" என்கிறார்.
``நீட் தேர்வின் நோக்கம் நிறைவேறவில்லை என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துகிறார்களே?" என்றோம். `` உண்மைதான். முன்பெல்லாம் சாதாரண மருத்துவக் கல்லூரிகள்கூட 300 முதல் 400 கோடி ரூபாய் வரையில் நன்கொடைகளைப் பெற்று வந்தனர். அந்தக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பு, பாரா மெடிக்கல், உயர் படிப்புகள் போன்றவற்றைக் கணக்கிட்டால் இந்தளவுக்கு வருவாய் வந்து கொண்டிருந்தது. இப்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை வெளிப்படையாக இணையத்தளத்தில் வெளியிட்டு வசூல் செய்கின்றனர். இது பெரிய விஷயம். அவர்கள் வசூல் செய்வதை அனுமதித்திருந்தால் தமிழ்நாட்டில் மேலும் 20 மருத்துவக் கல்லூரிகள் முளைத்திருக்கும்.
சென்னையை அடுத்துள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டு மாணவர்கள் 5 சதவிகிதம் பேர்தான் படிக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் வட இந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். அந்தக் கல்லூரியில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென தனி பிளாக் உள்ளது. அவர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்து படிக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவராவது இதுபோன்ற தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியுமா? இவைகளை எல்லாம் மாநில அரசால் கட்டுப்படுத்த முடியுமா. தனியார் பள்ளிகளையே இவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு என்ற பெயரில் மாணவர்களை குழப்பத்துக்கு ஆட்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்