தலைமுடியை பிடுங்குவது, நகம் கடிப்பது மனநலம் சார்ந்த பிரச்னையா? உளவியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

தலைமுடியை பிடுங்குவது, நகம் கடிப்பது மனநலம் சார்ந்த பிரச்னையா?

பட மூலாதாரம், gawrav / getty images

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மனநலம் சார்ந்த பிரச்னை பல விதத்தில் ஏற்படக்கூடும். அதில் ஒரு வகைதான் தலைமுடியை பிடுங்குவதும் அதை அவர்களே திண்பதும். அண்மையில் இந்த நோயால் தமிழ்நாட்டை சேர்த்த 15 வயது மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டார்.

இந்நோய் பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது? பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்த்த 15 வயது மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பு மூலம் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பெற்றோர் இருவரும் பணிக்கு சென்று விடுவதால் மாணவி, தனது பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில், மாணவிக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.

உடனே அந்த மாணவியை அவரது பெற்றோர், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவரது வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த கட்டி தலை முடியாலானது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர் அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றினர்.

மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜமகேந்திரன் பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசினார்.

மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜமகேந்திரன்
படக்குறிப்பு, மருத்துவர் ராஜமகேந்திரன்

"கடந்த ஓராண்டாக மாணவி கொஞ்சம் கொஞ்சமாக அவரது தலைமுடியை பிய்த்து சாப்பிட்டுள்ளார். மன நலம் பாதிப்பு காரணமாக சிலர் இதுபோன்று சாப்பிடுவதுண்டு, அப்படி சாப்பிடுவதால் வயிற்றில் தலைமுடி கட்டியாக உருவாகும். இதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாமல் வாந்தி வரக்கூடும். அதேபோல் அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டு, வாந்தி வந்த பிறகே மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். முதலில் வேறு எதோ கட்டி இருக்கிறது என்றுதான் நினைத்தோம். மேற்கொண்டு சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் முடி கட்டி என்பது தெரிய வந்தது.

அதையடுத்து மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை முழுவதுமாக நீக்கிவிட்டோம். இந்த கட்டி வயிற்றின் சிறுகுடல் வரை சென்றுள்ளது. இதை ராபன்ஸல் நோய்க்குறி (rapunzel syndrome) என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டியை நீக்கிய பிறகு மாணவி நலமாக இருக்கிறார். தற்போது மாணவிக்கு மனநல நிபுணர் ஆலோசனை அளித்து வருகிறார். மேலும், இந்த நோயால் உலக அளவில் சுமார் 60 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது அரிதான நோய். உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என்பதால் கவனிக்கப்பட வேண்டியது.

ஆன்லைன் வகுப்புகளால் பல்வேறு குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதால் குழந்தைகளை பெற்றோர்கள் தனிமையில் விடாமல் விளையாட்டுகள் மூலம் உற்சாகப்படுத்த வேண்டும். வேலையைத் தவிர்த்து குழந்தை நலனில் பெற்றோர் அக்கறை கொள்ள வேண்டும். பெற்றோர்கள் அடிக்கடி பிள்ளைகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டால் கண்காணிக்க வேண்டும்," என மருத்துவர் ராஜமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கடந்த ஜனவரி மாதம் கோவையில், 13 வயது மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரது வயிற்றில் இருந்து அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகள் போன்ற நெகிழி குப்பைகளை மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநல மருத்துவர் கூறுவது என்ன?

எதனால் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். இதை எப்படி கண்டறிந்து, இந்த பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து மருத்துவ உளவியலாளர் வி.சுனில் குமார் பிபிசி தமிழிடம் பேசினார்.

"இந்த நோய் ட்ரிக்கோடில்லோமேனியா (trichotillomania) என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் இந்த நோய் 2 முதல் 4 சதவீதத்தினருக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த பாதிப்பு ஒருவரது வாழ்வியலை இடையூறு செய்யாத அளவிற்கு 20ல் ஒருவருக்கு இப்பிரச்னை இருக்கிறது என்று ஒருசில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நரைத்த முடி தலையில் காணப்படும்போது அதை பிடுங்க வேண்டும் என்ற தூண்டுதலின் (impulse) அடிப்படையில் நரை முடியைப் பிடுங்குகிறோம். இவ்வாறு நரை முடியைப் பிடுங்குவதை நம்மால் நிறுத்த முடியும். ஆனால் இந்த மாணவி போன்று தலைமுடியை பிடுங்குவதை இம்பல்ஸ் கண்ட்ரோல் டிஸ்ஆர்டர் (impulse control disorder) என்று கூறுகின்றனர். இந்த வகையான தூண்டுதல் என்பது ஆழ்மனதில் தானாக ஏற்படும். இதை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது," என தெரிவித்தார்.

மருத்துவ உளவியலாளர் வி.சுனில் குமார்
படக்குறிப்பு, மருத்துவ உளவியலாளர் வி.சுனில் குமார்

அரிதான மனநல பிரச்னையா?

"இந்த பாதிப்பு உள்ளவர்கள் அவர்களுடைய தலைமுடியை அவர்களே பிடுங்கி விடுவார்கள். பொதுவாக தலை, புருவம் அல்லது உடலில் உள்ள மற்ற பாகங்களில் இருந்து கூட முடியை பிய்த்து எடுப்பார்கள். ஆனால், இதுபோன்று முடியை பிய்த்து எடுப்பதினால் சம்பந்தப்பட்ட நபருக்கு தனிப்பட்ட முறையிலோ, சமூகம் சார்ந்தோ அல்லது மருத்துவ ரீதியாகவோ பெரிய பாதிப்பு ஏற்படலாம். அந்த அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அதிகமாக இருந்தால், இந்த பாதிப்பை கோளாறாகப் பார்க்க வேண்டும்.

அதிலும் இந்த பாதிப்பு குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு குறிப்பாக பருவமடையும் நேரங்களில் ஏற்படுகிறது. ஆண் குழந்தைகளை காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிகமாக தென்படுகிறது. இதே வகைகளில் வருவதுதான் நகம் கடிப்பது, சருமத்தை பிய்ப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

தொடக்கத்தில் இதுபோன்று முடியை பிய்க்கும்போது அதை தூக்கி எறிவது, கட்டிலுக்கு அடியில் போடுவது உள்ளிட்டவற்றைத்தான் செய்வார்கள்.

ஆனால் ட்ரிக்கோடில்லோமேனியா பாதிப்பு உள்ள 100 பேரில், 20 பேர் மட்டுமே பிய்த்து எடுக்கும் முடியை சாப்பிடுகின்றனர். இதனால் முடி பிய்த்து எடுத்த இடத்தில் புண் ஆவது, அடிக்கடி தலைக்கு கையை கொண்டு செல்வதால் கைகளில் வலி ஏற்படுவது வழக்கமானது. ஆனால் முடியை சாப்பிட்டு அது குடலில் அடைப்பு ஏற்படும் அளவிற்கு மாறுவது என்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது," என்கிறார்.

ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?

"பொதுவாக ட்ரிக்கோடில்லோமேனியா பாதிப்பு உள்ள குழந்தைகளை ஆராய்ந்து பார்க்கும்போது வேறு சில மனநல பிரச்னைகள் இருக்கும். அதாவது மனசோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட மனநலம் தொடர்பாக பிரச்னைகள் இருக்கும். மற்ற சில ஆராய்ச்சியாளர்கள் இது மன அழுத்தத்தை சமாளிக்கும் (stress coping) முறை என்று கூறுகிறார்கள். அதிகப்படியான அழுத்தத்திற்கு உட்படும்போது, முடியை பிடுங்குவது அந்த அழுத்தத்தை சமாளிக்கும் உத்தியாகப் பார்க்கின்றனர். அப்படிச் செய்வதன் மூலமாக அவர்களுக்கு அழுத்தம் வெளியாகி விடுகிறது. அழுத்தம் நீங்குவதால் அதை தொடர்ந்து செய்ய முற்படுகிறார்கள்.

தலைமுடியை பிடுங்குவது, நகம் கடிப்பது மனநலம் சார்ந்த பிரச்னையா?

ட்ரிக்கோடில்லோமேனியா பாதிப்பு உள்ள குழந்தைகளின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால், பயந்த சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு பள்ளிகளில் படிப்பது தொடர்பாக பிரச்னைகள் இருக்கும், சமூக ரீதியாக மற்றவர்களிடம் பழகுவதில் பிச்சனைகள் இருக்கும். ஆகவே இதில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது, மனநலம் சார்ந்த சிக்கல் இப்படிப்பட்ட பிரச்னையாக வெளிப்படுகிறது என்பதுதான்," என்று கூறுகிறார் மருத்துவ உளவியலாளர் சுனில்குமார்.

மாணவிக்கு இந்த பாதிப்பு எப்படி ஏற்பட்டிக்கும்?

"இந்த பெருந்தொற்று சூழலும் உளவியல் ரீதியாக பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நேரங்களில், குழந்தைகளால் வெளியே சென்று விளையாட முடியாது. மற்றவர்களிடம் நேருக்கு நேர் சகஜமாக பேச முடியாமல் இருப்பது, இந்த தொற்று பாதிப்பால் ஏற்படும் தொடர் மரண செய்திகள், அவர்களை சுற்றி நடக்கக்கூடிய நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவைகள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். பிறகு ஆன்லைன் வகுப்பு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களாகவும் இருக்கலாம்.

மேலும் பெற்றோர் இவருமே வேலைக்கு செல்வதால் குழந்தைக்கு தேவையான அரவணைப்பு இல்லாமல் இருப்பதும் கூட பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம். மேலே குறிப்பிட்ட அனைத்துமே ஒரு கூட்டான காரணங்கள். ஆகவேதான் இதை உளவியல் மற்றும் சமூக ரீதியான பிரச்னையாகப் பார்க்க வேண்டும். சமூகம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகள் கூட நமக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதன் வெளிப்பாடே இந்த மனநலம் சார்ந்த பிரச்னை ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளது," என்கிறார் மருத்துவர்.

எப்படி சிகிச்சை மேற்கொள்வது?

"முடியை பிடுங்குவதெல்லாம் ஒரு மனநலம் சார்ந்த பிரச்னையா? இதற்காக மனநல மருத்துவரை அணுக வேண்டுமா? என்றெல்லாம் யோசிக்கிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள்.

mental health

மனநலம் சார்ந்த பிரச்னை பல வடிவத்தில் வரக்கூடும். குறிப்பாக நடத்தையில் உள்ள கோளாறு காரணமாக வெளிப்படும், உணர்ச்சிகளில் இருக்கக்கூடிய கோளாறு காரணமாக கூட வெளிப்படும், சில நேரங்களில் உடலில் ஏற்படும் நோய்களால் கூட மனநலம் பாதிக்கப்படும். அதில் ஒருவகைதான் இந்த ட்ரிக்கோடில்லோமேனியா பாதிப்பாகும். ஆகவே மனநலம் சார்ந்த பிரச்னைகளை இப்படியும் வெளிப்படும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த பாதிப்பு உள்ள குழந்தைகள் ஏளனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாவார்கள். முடியைப் பிடுங்கிய இடத்தை மறைப்பதற்கு போராடுவார்கள். இதனால் பாதிப்பை சந்தித்தாலும் அவர்களால் இந்த பழக்கத்தை தடுக்க முடியாது என்பது தெரிந்து கொள்ள வேண்டியது. இதற்கு மனநல சிகிச்சை அளித்தால் மட்டுமே அதிலிருந்து வெளியே வர முடியும்.

குறிப்பாக இந்த பாதிப்பு உள்ளவர்கள் அவர்களுடைய மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது, அவர்கள் ஆழ்மனதில் ஏற்படும் தூண்டுதலை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது, இப்படி மன அழுத்தம், மனச்சோர்வு ஏற்படும் அளவிற்கு அவர்களுடைய வாழ்வியல் சூழலில் என்ன கோளாறுகள் உள்ளன? அந்த சூழலில் உள்ள தாக்கத்தை எப்படி குறைப்பது? என்பது உள்ளிட்ட கோணங்களில் அணுக வேண்டும்.

இதை மருத்துவப் பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இதை ஓர் உளவியல் - சமூக பிரச்னையாக (psycho social problem) பார்க்க வேண்டும். அவ்வாறு அணுகி தகுந்த உளவியல் ஆலோசனை வழங்கி வழி நடந்தினால், இதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்க முடியும்," என மருத்துவ உளவியலாளர் வி.சுனில் குமார் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :