சீனாவின் விண்வெளி நிலைய வசிப்பிட தொகுப்புடன் விண்ணுக்குப் பறந்த மார்ச் 5பி ராக்கெட்

சீனா விண்வெளி

பட மூலாதாரம், Getty Images

சீனா தனது லட்சியமிகு விண்வெளி நிலைய திட்டத்தின் அங்கமாக நிறுவப்படும் புதிய வசிப்பிட தொகுப்பின் முதலாவது அமைப்பை விண்ணுக்கு அனுப்பியிருக்கிறது.

டியென்குங் என்ற தனது புதிய விண்வெளி நிலையத்தை 2022ஆம் ஆண்டில் முழுமையாக நிறுவ முடியும என்று சீனா நம்புகிறது. தற்போது புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரே சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா இடம்பெறவில்லை.

விண்வெளி ஆராய்ச்சி என வரும்போது சீனாவின் வரவு தாமதமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2003ஆம் ஆண்டில்தான் தனது முதலாவது விண்வெளி வீரரை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. அதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய மூன்றாவது நாடாக சீனா உள்ளது.

இதுவரை விண்வெளிக்கு இரண்டு முறை டிடென்குங் 1, டியென்குங் 2 ஆகிய பரிசோதனை நிலையிலான விண்வெளி நிலையங்களை நிறுவ சாதாரண வடிவிலான தொகுப்பை விண்ணுக்கு சீனா அனுப்பியிருக்கிறது. அவை விண்வெளி வீரர்கள் குறுகிய காலம் தங்குவதற்கானவையாக வடிவமைக்கப்பட்டன.

ஆனால், இப்போது புதிதாக அனுப்பப்பட்டுள்ள பல்நோக்கு வசதிகள் கொண்ட டியென்குங் விண்வெளி நிலையம் 66 டன் எடை கொண்டது. அதன் நீளம் 16.6 மீட்டர், அகலம் 4.2 மீட்டர். இங்கு வரும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான வாழ்விட வசதி, உயிர்காக்கும் தொழில்நுட்ப வசதி, மின்சார வசதி போன்றவை இந்த விண்வெளி கலனில் இருக்கும்.

தற்போது அனுப்பியதை போல 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு அனுப்பி வைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்த விண்வெளி நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும் 340 முதல் 450 கி.மீ உயரத்தில் அது பூமியை சுற்றி வரும்.

தற்போது விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான கூட்டு ஒத்துழைப்பை ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. 2024ஆம் ஆண்டில் அந்த விண்வெளி நிலையம் காலாவதியாகும் நிலையில், அதற்கு முன்பாக 2022ஆம் ஆண்டில் டியென்குங் விண்வெளி நிலையம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டால், அதுவே பூமியை வலம் வரும் ஒரே சர்வதேச விண்வெளி நிலையமாக திகழும்.

சீனாவின் விண்வெளி திட்டம்

சீனா விண்வெளி

பட மூலாதாரம், Reuters

புதிய விண்வெளி பயண திட்டத்துக்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, சீனாவும் ரஷ்யாவும் நிலவின் மேற்பரப்பில் ஒரு விண்வெளி மையத்தை கட்டுவதாக அறிவித்தன.

சீனாவின் விண்வெளித் திட்டங்களை அறிந்த சென் லேன், செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி-யிடம், ரஷ்யாவுடன் இணைந்து சீனா மேற்கொள்ளும் இந்த திட்டம் விண்வெளி துறையில் 'மிகப்பெரிய விஷயம்' என்றும் கூறினார்.

"இது முக்கியமானது, ஏனெனில் இது சீனாவுக்கான மிகப்பெரிய சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பு திட்டமாக இருக்கும்" என்று அவர் கூறியிருந்தார்.

சீனா மற்றும் அமெரிக்கா, இதுநாள்வரை விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியாக விளங்கி வரும் ரஷ்யாவை விஞ்சும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

சீனா விண்வெளி

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய பிறகு, அந்த நடவடிக்கையில் ஏகபோகமாக விளங்கிய ரஷ்யா அதன் அந்தஸ்தை இழந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், விண்வெளித் திட்டங்கள் குறித்து சீனா தனது லட்சியங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறது. மேலும், தனது விண்வெளித் திட்டங்களுக்கு அதிக பணத்தையும் அந்நாடு ஒதுக்கி வருகிறது.

அதிபர் ஷி ஜின்பிங்கும், விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளை பகிரங்கமாகவே ஆதரிக்கிறார். அதை ஆமோதிக்கும் வகையில், சீனாவின் 'விண்வெளி கனவுத் திட்டம், நாட்டின் அடித்தளத்தை முற்றிலுமாக மாற்றும் என்று அந்நாட்டு ஊடகங்களும் அழைக்கின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :