கொரோனா வைரஸ் இடோலிசுமாப்: சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்தை பயன்படுத்த அனுமதி

தடிப்புத் தோல் அழற்சியை / சொறி சிரங்கை குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் என்ற மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 'கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால தேவைக்காக' பயன்படுத்த இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியானது இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சொறி சிரங்கு என்று அறியப்படும் தடிப்புத்தோல் அழற்சியை (சொரியாசிஸ்) குணப்படுத்த ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மருந்தான இடோலிசுமாப்பை மிதமான மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான சுவாசப் பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தை அவர்களின் ஒப்புதலுடன் பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் வி.ஜி. சோமானி அனுமதியளித்துள்ளதாக பிடிஐ முகமையின் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த மருந்தானது இந்தியாவில் உள்ள கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு மருத்துவ ரீதியிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நுரையீரல், மருந்தியல் வல்லுநர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் இந்த சோதனை முடிவை ஏற்றுக்கொண்ட பிறகே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் பிடிஐ முகமையிடம் தெரிவித்துள்ளார்.

"பயோகான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த மருந்து ஏற்கனவே பல ஆண்டுகளாக சொறி சிரங்குக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது."

இந்த மருந்து கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதித்த நோயாளிகள் இறப்பதற்கான காரணிகளில் ஒன்றான, நோயை எதிர்த்துப் போராடும் சைட்டோகைன் புரதங்களை அதிக அளவில் ரத்தத்துக்குள் உடல் செலுத்துவதைக் (சைட்டோகைன் ஸ்ட்ராம்) கட்டுப்படுத்தும், என்பதன் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும், இந்த மருந்தை கொண்டு கொரோனா பாதித்த நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன் அவர்களிடமிருந்து கைப்பட எழுதப்பட்ட ஒப்புதலை அவசியம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :