You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் சிகிச்சை: தமிழகத்தில் இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிளாஸ்மா தெரப்பி மூலம் சிகிச்சை அளிக்க, சென்னையில் இரண்டு கோடி ரூபாயில் பிளாஸ்மா வங்கியை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தெரபி (ஊநீர் சிகிச்சை) தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
'பிளாஸ்மா தெரபி' அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன?
ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.
இந்த அடிப்படையில் கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.
"கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் கேரள மருத்துவ நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரும், கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையின் அவசர சிகிச்சை சிறப்பு மருத்துவருமான டாக்டர் அனூப்குமார்.
நோயில் இருந்து மீண்டவர்கள் உடலில் எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க எலிசா சோதனை நடத்தப்படும்.
பிளாஸ்மா தெரபி - சோதனை முறையில் சிகிச்சை
பிளாஸ்மா சிகிச்சை குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு இதுவரை 18 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து ரத்தத்தின் கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் 500மி.லி பிளாஸ்மா பெறப்பட்டு நோயின் தன்மை மிதமாக உள்ள கோவிட் - 19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிளாஸ்மா தானம் யார் செய்யலாம்?
பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 - 65 வயது வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் அவர்கள் உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்.
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்னும் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு பெறப்பட்டு நாளிலிருந்து 14-வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
உயர் ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது, என அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ''பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்புசக்தி அளவிடப்பட்டு தகுதியான நபர்களிடம் இருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை தானம் அளிக்கலாம். ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டுமுறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும்,'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தானமாக பெறப்பட்டு பிளாஸ்மா மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோவிட்-19 நோய் தொற்று உள்ளவர்களுக்கு ஸ்டெராய்டு மற்றும் இதர மருந்துகள் பலனளிக்காத போதும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் பொழுது, பிளாஸ்மா தெரபி அளிப்பதன் மூலம் நோயிலிருந்து குணமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தலா 200 மி.லி வீதம் பிளாஸ்மா செலுத்தப்படவேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் பிளாஸ்மா நோயாளிகளின் உடலில் இருக்கும் கொரோனா வைரஸின் செயல்பாட்டை நிறுத்தி கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கையும் குறைத்து கோவிட்-19 நோயாளிகள் செயற்கை சுவாசத் தேவையை குறைக்க உதவுகிறது, என்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கி
இவ்வாறு அமையவிருக்கும் பிளாஸ்மா வங்கியானது, டெல்லிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கியாக அமையும். இதே போல ஐ.சி.எம்.ஆர் ஒப்புதலுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்துள்ளார். மேலும், திருநெல்வேலியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அபரேசிஸ் (Aphaeresis) கருவியின் உரிமம் பெற்ற ரத்த வங்கிகள் பிளாஸ்மா தானம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
இதன் மூலம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்குளிலும் விரைவில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: