கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு கையாளும் புதிய தொழில்நுட்பம் பயனளிக்குமா?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், ANDREW HUANG

    • எழுதியவர், சைரா அஷெர்
    • பதவி, பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர்

திறன்பேசி தேவையில்லை, செயலியை தனியே நிறுவ வேண்டியதில்லை, கைக்கடிகாரம் அளவுக்கு மட்டுமே இருக்கும் 'ட்ரேஸ்டுகெதர் டோக்கென்ஸ்' என்ற இந்த தொழில்நுட்ப சாதனத்தை உடன் வைத்திருந்தால் மட்டுமே போதும்; கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று புதிய நம்பிக்கையை அளிக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் ஏற்கெனவே அந்த நாட்டில் திறன்பேசி செயலி ஒன்று பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

நீங்கள் எங்கு வெளியில் சென்றாலும் எளிதாக உங்கள் கைகளிலோ, சட்டைப் பையிலோ எடுத்து செல்லக்கூடிய இந்த சாதனத்தை ஒருமுறை மின்னேற்றம் செய்தால் அதிகபட்சமாக ஒன்பது மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்.

இந்த சாதனம் கொரோனா வைரஸுக்கு எதிராக 'சிறந்த தொழில்நுட்பம்' என்று உறுதிபட சொல்ல முடியாது என்கிறது இதை உருவாக்கிய சிங்கப்பூர் அரசு முகமை. ஆனால், இது கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் மற்றுமொரு முயற்சியாக அது கருதுகிறது.

முதல் கட்டமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய அபாயத்தில் உள்ள திறன்பேசி வசதி அல்லாத முதியவர்களுக்கு இந்த சாதனம் வழங்கப்படுகிறது.

இந்த சாதனத்தை பெறுபவர்கள் கொரோனா பரவல் தடுப்பு செயலியை பயன்படுத்துபவர்களை போன்றே தங்களது தேசிய அடையாள அட்டை எண் மற்றும் அலைபேசி எண்ணை வழங்க வேண்டும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஒருவேளை இந்த சாதனத்தை வைத்திருக்கும் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவர் தனது சாதனத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஏனெனில், திறன்பேசி செயலிகளை போன்று இந்த சாதனத்தில் உள்ள தரவை இணைய வழியே பரிமாற்றம் செய்யவியலாது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள இந்த சாதனத்தை பெறும் அரசு அதிகாரிகள் அதிலுள்ள தரவை அடிப்படையாக கொண்டு மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

திறன்பேசி செயலி

உலக நாடுகளிலேயே சிங்கப்பூர் தான் முதன் முதலில் நாடு தழுவிய அளவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் கண்காணிப்பு செயலியை அறிமுகப்படுத்தியது.

இதுவரை சுமார் 21 லட்சம் மக்கள் அதாவது சிங்கப்பூரின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக உள்ளூர் அரசு நிர்வாகம் கூறுகிறது.

விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை தவிர்த்து மற்ற அனைவரும் தங்களுக்கு விருப்பம் இருப்பின் இந்த செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சிங்கப்பூரில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களே.

கொரோனா வைரஸ்

இந்த செயலியின் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்த முடிந்ததாகவும், இது வேறெந்த வழிகளிலும் சாத்தியமில்லை என்றும் சிங்கப்பூர் அரசு கூறுகிறது.

எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தாங்கள் நினைத்த அளவுக்கு இந்த செயலி திறம்பட செயல்படவில்லை என்று அந்த நாட்டு அரசே ஒப்புக்கொள்கிறது.

இந்த செயலியை பயன்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதாக ஐபோன் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த செயலி இயங்கும்போது ஃபுளூடூத் பயன்படுத்தப்படுவதாகவும் அப்போது தங்களது திறன்பேசியில் வேறெந்த செயல்பாட்டையும் மேற்கொள்ள முடியவில்லை என்றும், அதிவேகமாக திறன்பேசியின் பேட்டரி தீர்ந்துவிடுகிறது என்றும் புகார்கள் எழுந்தன. ஆனால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட பயன்பட்டாளர்கள் இதுபோன்ற எவ்வித பிரச்சனையையும் சந்திக்கவில்லை.

தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவலை கண்காணிப்பது மிகப் பெரிய பலனை தரக்கூடியதாக கருதப்பட்டாலும் அதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றால் மட்டுமே அது சாத்தியமாகும்.

தனியுரிமை பாதுகாப்பு சார்ந்த கவலைகள்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்த சாதனம் குறித்த அறிவிப்பு ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டபோது அரசுக்கு எதிராக பொது மக்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர், சிங்கப்பூரை பொறுத்தவரை இது அசாதாரணமான ஒன்று.

இந்த சாதனத்தை வழங்கும் திட்டத்தை கைவிடக்கோரி இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் 54,000 பேர் பங்கேற்றனர்.

"இதுபோன்ற சாதனங்களை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தினால் அது சிங்கப்பூரை அரசு பொது மக்களை வேவு பார்க்கும் நிலைக்கு இட்டுச் செல்லும். இதற்கடுத்து சாதனத்தை கண்டிப்பாக அணைக்க கூடாது என்றும் மீறினால் தண்டனை அளிக்கப்படும் என்றும் சட்டங்கள் உருவாக்கப்படலாம்" என்று அந்த கையெழுத்து இயக்கம் கூறுகியது.

இந்த நிலையில், இந்த சாதனமானது பயன்பாட்டாளர்களின் ஜிபிஎஸ் இருப்பிட தகவல்களை சேகரிக்கவோ அல்லது இணையத்துடன் இணைக்கப்படவோ இல்லை என்பதால் இதை பயன்படுத்தி ஒருவரது நடமாட்டத்தை கண்காணிக்க முடியாது என்று சிங்கப்பூர் அரசின் அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளும் வல்லுநர்கள் மற்றொரு கேள்வியை முன்வைக்கின்றனர்.

"உலகின் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கூகுள் - ஆப்பிளின் திறன்பேசியை அடிப்படையாக கொண்ட கொரோனா பரவல் கண்காணிப்பு திட்டத்தை விட சிங்கப்பூரின் இந்த சாதனத்தை அடிப்படையாக கொண்ட திட்டத்தில் பயன்பாட்டாளர்களின் தனியுரிமை பாதுகாப்பு சார்ந்த கவலைகள் அதிகம் உள்ளன" என்று கூறுகிறார் தொழில்நுட்ப வல்லுநரான சீன் கிராஸ்.

"இந்த சாதனத்தின் தனித்துவமான கடவுச்சொல் சிங்கப்பூர் அரசுக்கு மட்டுமே தெரியும், எனவே அவர்கள் நினைத்தால் அதிலுள்ள விவரங்களை எளிதில் பெற முடியும்."

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், SILVER GENERATION OFFICE (SGO)

ஆனால், கூகுள் - ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள முறையின்படி, நோய்த்தொற்று பாதிப்பு குறித்த எச்சரிக்கை பயன்பாட்டாளருக்கு மட்டுமே விடுக்கப்படுமே தவிர, அரசு அதிகாரிகளிடம் அதுகுறித்த குறித்த விவரம் பகிரப்பட்டாது.

மறுபுறம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அரசுகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

"ஃபுளூடூத் உணரிகளை (சென்சார்) பொது இடங்களில் பொருத்துவதன் மூலம், வெளியே இருக்கும் சாதனங்களின் பயன்பாட்டாளர்களை அடையாளம் காணவும், அவர்கள் எப்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கணிக்க முடியும்" என்று கூறுகிறார் லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான மைக்கேல் வீல்.

"ஃபுளூடூத் உணரிகளை அமைப்பதன் மூலம் பெறப்படும் தகவல்களை சிங்கப்பூர் தேசிய அடையாள அட்டை தரவுகளுடன் ஒப்பிட்டு குறிப்பிட்ட ஒருவரின் விவரத்தை பெற முடியும்."

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

ஆனால், இந்த சாதனத்தை உருவாக்கியுள்ள சிங்கப்பூர் அரசு முகமையை சேர்ந்தவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.

"அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே அதிக நம்பிக்கை கொண்ட உறவு உள்ளது. மேலும் இதில் தரவு பாதுகாப்பும் உள்ளது" என்கிறார் கோவ்டெக்கின் தலைமை நிர்வாகியான கோக் பிங் சூன்.

பயன்பாட்டாளர்களையும் அவர்களின் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க சுகாதார அதிகாரிகளுக்கு இந்த தரவு தேவை என்பதை பொதுமக்கள் அங்கீகரிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த சாதனத்தின் மூலம் தொற்றுநோயியல் வல்லுநர்களுக்கு நோய்த்தொற்று பரவலைப் பற்றிய அதிக நுண்ணறிவை வழங்க முடியும் என்பதே ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்களை விட சிங்கப்பூர் தனது சொந்த திட்டத்தை விரும்புவதற்கான மற்றொரு காரணம் என்று அவர் கூறுகிறார்.

சிங்கப்பூரின் இந்த சாதனம் நினைத்தபடி பயனளித்தால் உலகின் மற்ற நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடும் என்று கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :