கொரோனா வைரஸ் ஊரடங்கு: வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் தூக்கமில்லையா? என்ன செய்ய வேண்டும்?

coronavirus sleep

பட மூலாதாரம், getty images

    • எழுதியவர், மனிஷ் பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"நிறைய தண்ணீர் குடித்துவிட்டேன், கடந்த சில மணி நேரங்களாக மொபைலைக் கூட பார்க்கவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று என அறுநூறு வரை எண்ணிவிட்டேன். ஆனாலும் தூக்கம் வரவில்லை."

சமீபத்தில் பலர் இவ்வாறு கூறுகின்றனர். ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் ?

கொரோனா பரவுவதால் ஊரடங்கு நிலை அறிவித்த பிறகு தூங்க முடியவில்லை என பலர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவிற்கு முன் சரியான நேரத்தில் தூங்கியவர்கள் கூட இப்போது தூக்கமின்மை பிரச்சனையால் தவித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் தூங்குவதற்கு என்ன செய்யவேண்டும்?

அன்றாட வேலைகள் அவசியம்

பொதுவாக அதிகாலை எழுந்து உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு அலுவலகம் சென்று விட்டு, வீடு திரும்பியவுடன் மற்றொரு முறை உடற்பயிற்சி, பிறகு உறக்கம் என ஒருவரின் அன்றாட வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இப்போது வீட்டை விட்டு வெளியில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் நிலை இல்லை.

எனவே பலரின் அன்றாடப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான அன்றாடப் பழக்க வழக்கங்களே நல்ல தூக்கம் வருவதற்கு முக்கிய அம்சமாக உள்ளது என லாபோர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கெவின் மார்கன் கூறுகிறார்.

வீட்டிலேயே முடங்கி இருப்பதால் தூக்கம் வரவில்லையா ? என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

பட மூலாதாரம், Getty Images

தூக்கம் குறித்து பல ஆண்டுகளாக கெவின் மார்கன் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு பலரின் நடைமுறை வாழ்க்கையை மாற்றியுள்ளதே தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் என கெவின் கூறுகிறார்.

"உங்களின் தினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் எப்போதும் போல காலை சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி மற்றும் அன்றாட வேலைகளை செய்ய துவங்கினால் இரவு சரியான நேரத்தில் தூங்க முடியும். குறிப்பாக தற்போது பலர் பகலில் தூங்குகின்றனர், இந்த சூழலில் அந்த பழக்கத்தை முற்றிலும் கைவிடுங்கள். அதுவே இரவு நேரத்தில் தூக்கமின்மையை ஏற்படுத்த முக்கிய காரணம். பகலைவிட இரவில் தூங்குவதுதான் மிகவும் அவசியம். அதுவே ஆரோக்கியமானதும் கூட," என்கிறார் கெவின் மார்கன்.

சூரிய ஒளி தேவை

இந்த முடக்க நாட்களில் நம்மால் வெளியில் செல்ல முடியவில்லை, அதுவும் நம் தூக்கத்தை பாதிக்கலாம். நமது கண்களுக்கு சூரிய ஒளி தேவை. மெலடோனின் ஹார்மோன்தான் நமது தூக்கத்தை சீராக வைத்திருக்க உதவும். உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்கவேண்டுமானால் நமக்கு சூரிய ஒளி தேவை.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

விட்டிற்குள்ளேயே இருப்பதால் நம் மேல் சூரிய ஒளி விழுவதில்லை. இதனால் தேவையான மெலடோனின் அளவு நம் உடலில் இல்லாமல் போகலாம்.

எனவே வீட்டில் இருந்தபடியோ அல்லது வீட்டிற்கு வெளியில் சென்றோ சூரிய ஒளி உங்கள் மேல் விழ நேரம் ஒதுக்குங்கள். உங்கள் கண்களை மூடாமல் அல்லது கண்ணாடி அணிந்து மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் கண்களுக்கு சூரிய ஒளி அவசியம்.

இதனால் சரியான நேரத்தில் தூங்கவும் முடியும்.

மண அழுத்தத்தை ஒதுக்கி வையுங்கள்

ஊரடங்கு நேரத்தில் பலர் பணியிடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அனைத்து விதமான பிரச்சனைகளையும் யோசித்து பதற்றமும் அதிகரிக்கிறது.

coronavirus sleep

பட மூலாதாரம், Getty Images

அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை. இவ்வாறான சூழ்நிலையில் முன்பு நாம் இருந்ததே இல்லை. இது அனைவருக்குமே புதிதுதான். எனவே இந்த சூழலை நினைத்து வருந்தாதீர்கள்.

தூங்குவதற்காக படுக்கைக்கு செல்லும்போது வருத்தமாக செல்லாதீர்கள் என்கிறார் பேராசிரியர் கெவின்.

இடத்தை தேர்வு செய்யுங்கள்

நீங்கள் வீட்டில் இருந்து அலுவலக பணிகளை மேற்கொள்கிறீர்கள் என்றால் படுக்கை அறையில் அலுவலக பணியை மேற்கொள்ளாதீர்கள். தூங்குவது தவிர வேறு எதற்காகவும் படுக்கை அறையை தேர்வு செய்யாதீர்கள்.

அப்படி வேறு வழியின்றி படுக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டால், அதன் உறையை மாற்றுங்கள்.

கொரோனா தொற்று

பணி மேற்கொள்ளும்போது இருந்த உறையை மாற்றுவதன் மூலம், உங்கள் பார்வையிலும் மாற்றம் ஏற்படும்.

தூங்கவேண்டும் என உங்கள் மனதிற்கு தோன்றும் அளவிற்கு அந்த இடத்தை மாற்றுங்கள்.

மதுப் பழக்கம்

வீட்டில் இருக்கும்போது திரைப்படம் , மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது பொழுதுபோக்கிற்காக மது அருந்த வேண்டும் என தோன்றலாம்.

மது அருந்தினால் சீக்கிரம் தூங்க முடியும் என்பது நீண்ட நாட்களுக்கு உள்ள நல்ல தீர்வு அல்ல.

மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் குடிக்கலாம். ஆனால் எப்போதும் எவ்வளவு குடிப்பீற்களோ அவ்வளவு மட்டுமே குடிக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் கெவின்.

ஆனால் மது அருந்தினால்தான் தூக்கம் வரும் என்ற நிலைக்கு சென்றுவிட கூடாது. அது ஆரோக்கியமானது அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :