இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த புதிய சவால்

sri lanka elections 2020 Mahinda Rajapaksa Gotabaya Rajapaksa

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI / getty images

படக்குறிப்பு, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (இடது) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (வலது)

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதனை உரிய முறையில் நடத்திக் கொள்ள முடியாத நிலைமைக்கு மத்தியில் தேர்தல் பிற்போடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட தருணத்திலேயே இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருந்தது.

முதலாவது நோயாளர் மார்ச் மாதம் 11ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவுவதற்கான அபாய நிலைமை ஏற்பட்டது.

வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை மார்ச் மாதம் 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மார்ச் 20ஆம் தேதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

நாட்டில் அச்சுறுத்தலுடனான நிலைமையொன்று தோன்றியுள்ள பின்னணியில், தேர்தலை பிற்போட வேண்டிய நிலைமை தோன்றியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

கொரோனா தொற்று
படக்குறிப்பு, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமானால் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

இதற்கமைய தேதி நிர்ணயிக்கப்படாது நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் இதற்கு முன்னர் பிற்போடப்பட்டிருந்தன.

ஊரடங்கு சட்டம் நேற்றைய தினம் நிறைவுக்கு கொண்டு வந்த பின்னணியில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று மாலை இடம்பெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர மற்றும் எஸ்.இரத்னஜீவன் ஹுல், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சுகாதார பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது அனைவரது இணக்கப்பாட்டுடன் தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் எட்டப்பட்டு, அதன் வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது பிற்போடும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டு, மூன்று மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மீறி மூன்று மாதங்களின் பின்னர் தேர்தல் நடத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இது அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு முரணானதா என பிபிசி தமிழ் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான எஸ்.இரத்னஜீவன் ஹுலிடம் வினவியது.

தேர்தலை நடத்துவதற்கான தேதியை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வசமே காணப்படுவதாக ஜனாதிபதி அறிவித்திருந்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 129ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு இதற்கு முன்னர் எதிர்கொள்ளாத நிலைமையொன்றை எதிர்கொள்ளும் பட்சத்தில், தேர்தல் தேதியை அறிவிக்கும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழு வசமே காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

sri lanka elections 2020

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் அதிக எண்ணைக்கையில் மக்களும், ஊழியர்களும் ஒரே இடத்தில கூடாமல் பார்த்துக்கொள்வது பெரும் சவாலாக இருக்கப்போகிறது.

நாட்டில் கொரோனா தொற்று தொடருமேயானால் தேர்தல் மீண்டும் பிற்போடப்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என பிபிசி தமிழ், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் எஸ்.ரத்னஜீவன் ஹுலிடம் வினவியது.

அவ்வாறான நிலைமையொன்றை நாடு எதிர்கொள்ளுமேயானால், தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான அதிகாரம் தங்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கும் தீர்மானமொன்றை எடுப்பதற்கான அதிகாரம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் நடத்தப்பட முடியாத நிலைமை தொடர்ந்து, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகுமானால் அந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான தீர்மானமொன்று எட்டப்படும் என ரத்னஜீவன் ஹுலிடம் வினவப்பட்டது.

அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று ஏற்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றத்தை நாடியே தீர்மானமொன்றை எட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கூட எவரேனும் உயர் நீதிமன்றத்தை நாடி தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரேயானால், அதனை தான் தனிப்பட்ட ரீதியில் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

ரத்னஜீவன் ஹுல்
படக்குறிப்பு, ரத்னஜீவன் ஹுல்

இந்த தேர்தலை நடத்துவதற்கு தாங்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று காரணமாக நிறுவனமொன்று அதிகூடியதாக 50 பணியாளர்களை மாத்திரமே கடமைகளுக்கு அழைக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதை அவர் நினைவூட்டினார்.

எனினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 50திற்கும் அதிகமான பணியாளர்கள் அவசியம் என கூறிய அவர், அதனை எவ்வாறு செய்ய போகின்றோம் என்பதே சவாலாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தேர்தலொன்றை நடத்தும் போது அவ்வாறான நடைமுறைகளை கையாள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பல சவால்களை எதிர்கொண்டே இந்த தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹுல் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :