கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்க காற்று மாசும் காரணமா? WHO என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
காற்று மாசு அளவு அதிகமாக இருந்தால் கோவிட்-19 உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.
சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளில், காற்று மாசு அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
காற்று மாசு அதிகம் உள்ள நாடுகள், கோவிட்-19க்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் திட்டத்தில், மாசு அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் பொது சுகாதார நிபுணர் டாக்டர் மரியா நெய்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.
லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை தனது ஆய்வில் அந்தப் பெண்மணி முதன்மைப்படுத்திக் காட்டியுள்ளார்.
``இந்தப் பிராந்தியங்களில் உள்ள நாடுகளின் அரசுகளுக்கு உதவும் வகையில், எங்களிடம் உள்ள தகவல் தொகுப்புகளின் அடிப்படையில், அதிக மாசு உள்ள பகுதிகளின் வரைபடங்களை நாங்கள் உருவாக்குவோம். எனவே அதற்கேற்ப மாசு அளவைக் குறைத்தல் மற்றும் கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த நாடுகள் திட்டமிடலாம்.''
கோவிட்-19 நோய்த் தாக்கம் மற்றும் அதிக அளவிலான காற்று மாசுபாட்டை நேரடியாக தொடர்படுத்த இது சரியான காலம் அல்ல, ரொம்பவும் ஆரம்பகட்டமாக இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில், அந்த மாசுபாடு பிரச்சினையால் ஏற்கெனவே அவதிப்படும் நோயாளிகளுக்கு கோவிட்-19ன் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது என்று சில நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
காற்று மாசுபாடு காரணமாக மரணங்கள்
காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுதோறும் 7 மில்லியன் மரணங்கள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. தெற்காசியா, மத்திய கிழக்கு, சகாரா சார்ந்த ஆப்பிரிக்கப் பகுதி மற்றும் வட ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள நாடுகள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசுபாடு குறித்த அதன் அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது. அதில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிலி, பிரேசில், மெக்சிகோ, பெரு போன்ற லத்தீன் அமெரிக்க நகரங்களிலும் காற்று மாசுபாடு அபாயகரமான அளவில் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் பல்வேறு அறிக்கைகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டுக்கு நீண்டகாலம் ஆட்பட்டிருப்பதன் பாதிப்பு பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நோய்த் தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளில் நுண்பொருட்களின் அளவு சற்று அதிகரித்தால், கோவிட்-19 காரணமான மரணங்களின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக அந்த ஆய்வு இருந்தது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், கொரோனா வைரஸ் சிகிச்சை வள மையத்தின் சி.எஸ்.எஸ்.இ. மையத்தில் நிகழ்ந்த கோவிட்-19 மரணங்கள் குறித்த தகவல்கள் மற்றும் தேசிய காற்று மாசுபாட்டு அளவு ஆகியவை இதற்குப் பயன்படுத்தப்பட்டன.

PM2.5 அளவிலான நுண்ணிய அளவுக்கு மாசு துகள்கள் அதிகமாக இருந்தால், மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துக்கான டி.எச். சான் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
``மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பது மற்றும் PM2.5 அளவு நுண்துகள் மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளுக்கும் கோவிட்-19 மரணங்களுக்கும் தொடர்பு இருக்கும் போக்கு கண்டறியப்பட்டது'' என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் தலைமுடியில் தடிமனில் 13ல் ஒரு பகுதி என்பது தான் PM2.5 அளவு ஆகும். அது சுவாசத்துடன் உள்ளே சென்றால், நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். சுவாசத் தொற்றுகள் மற்றும் நுரையீரல் புற்றுநோயுடன் முன்பு இவை தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டது.
அந்த ஆய்வு மறு பரிசீலனை செய்யப்படவில்லை. ஆனால் ஜெர்மனியில் லுட்விக் மேக்ஸிமிலியன்ஸ் பல்கலைக்கழக தொற்று நோயியல் துறை தலைவர் பேராசிரியர் அன்னெட்டே பீட்டர்ஸ், இந்த விஷயங்கள் போலியானவை என்று கூறியுள்ளார்.
``மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் மற்றும் நிமோனியாவில் ஏற்பட்ட மரணங்கள் பற்றி அறிக்கைகளைப் போலவே இவை இருக்கின்றன'' என்று அந்தப் பெண்மணி, பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
``காற்று மாசுபாட்டில் இருக்கும் துகள்கள் காரணமாக கோவிட்-19 நோய்த் தாக்குதலின் தீவிரம் மாறுபடக்கூடும் என்ற எங்களுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான முதலாவது ஆய்வுகளில் இதுவும் ஒன்றாக உள்ளது'' என்கிறார் அவர்.
காற்று மாசுபாடு அதிகமாக இருந்தால் கோவிட்-19 மரணங்கள் அதிகமாக இருப்பதற்கான தொடர்பு இருக்கலாம் என்று, வடக்கு இத்தாலியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இத்தாலியில் சியனா பல்கலைக்கழகமும், டென்மார்க்கின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஆய்வை நடத்தின.லம்பார்டி மற்றும் எமிலியா ரொமாக்னா பிராந்தியங்களில் மார்ச் 21 வரையில் பதிவான கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 12 சதவீதமாக இருந்தது, மற்ற பகுதிகளில் அது 4.5 சதவீதமாக இருந்தது என்று இத்தலியின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
``வடக்கு இத்தாலியில் நிலவும் அதிக அளவிலான மாசுபாடு காரணமாக, அந்தப் பிராந்தியத்தில் அதிக மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம்'' என்று Science Direct -ல் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை, வயது, மாறுபட்ட சுகாதார சிகிச்சை முறைகள், நோய்த் தடுப்புக்கு பல்வேறு பிராந்தியங்களில் கையாளும் நடைமுறைகள் போன்ற பிற காரணங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி காணும் உலகம்
வழிகாட்டுதல் வரம்புகளை மீறும் அளவுக்கு காற்று மாசுபாடு இருக்கும் பகுதிகளில் தான் உலக மக்கள் தொகையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அவர்களில் பெரும்பாலான மக்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
சீஸர் புகாவோய்சன் என்பவர் பிலிப்பைன்ஸில் சுவாச மண்டல சிகிச்சையாளர்கள் சங்கத்தில் சிகிச்சையாளராக இருக்கிறார்.
``நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் உயிரிழந்த எல்லோருக்கும், ஏற்கெனவே வேறு பாதிப்புகள் இருந்தன என்பது எங்களுடைய முதல்கட்ட தகவல்களில் தெரிய வந்துள்ளது. அவற்றில் பெரும் பகுதி, காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள்' என்று அவர் கூறியுள்ளார்.
உலக காற்றுத் தரம் குறித்த 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கை உள்ளிட்ட சமீபத்திய ஆய்வுகளில், காற்று மாசுபாடு அளவு அதிகம் உள்ள பெரும்பாலான நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்தியாவில் கோவிட்19 காரணமாக இதுவரை 521 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் தெரிவிக்கிறது.
காற்று மாசுபாடு தொடர்பான ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கும், தீவிர கோவிட்-19 பாதிப்புக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று இந்திய டாக்டர்கள் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
`வைரஸ் பரவுதலில் கணிசமான உயர்வை நாங்கள் அறிந்தால், காற்று மாசுபாடு காரணமான பிரச்சினைகளுக்கு ஆளானவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப் படுவார்கள்'' என்று டெல்லியில் உள்ள பிரைமஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் எஸ்.கே. சாப்ரா தெரிவித்துள்ளார்.
``காற்று மாசுபாட்டால் ஒருவருடைய சுவாசப் பாதைகள் மற்றும் நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வதற்கான சக்தி குறைவாகவே இருக்கும்'' என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இந்தத் தொடர்பை நிரூபிக்க இதுவரையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
``இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. நாங்களும் இதுபோன்ற எந்த ஆய்வையும் நடத்தவில்லை'' என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரஜினிகாந்த் சீனிவஸ்தவா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சார்ஸ் தகவல் தொகுப்பு
2002 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. அது கொரோனா வைரஸின் இன்னொரு பரிணாம நிலையிலானது. அது 26 நாடுகளில் பரவி 8,000க்கும் மேற்பட்டவர்களைத் தாக்கி, சுமார் 800 மரணங்களை ஏற்படுத்தியது.
உக்லா பொது சுகாதாரக் கல்லூரி சார்பில் 2003ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக காற்று மாசுபாடு உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால், மரணம் அடைவதற்கு இரட்டிப்பு வாய்ப்பு இருந்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்புக்குப் பிறகு மாசுபாடு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முடக்கநிலை நீக்கப்பட்டதும், அது அதிகரிக்கும் என்ற கவலை உள்ளது.
காற்று மாசுபாட்டின் தாக்கத்தை கருத்தில் கொள்வதற்கு ஆட்சியாளர்களிடம் தனது அறிக்கை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியை பிரான்செஸ்கா டோமினிசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
``காற்றின் தரம் மேலும் மோசமாகிவிடாமல் தடுக்க அது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக நோய்த் தொற்று முடிந்து விதிகள் தளர்த்தப்படும் சூழ்நிலையில் இது நடக்கும் என்று நம்புகிறோம்'' என்று அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












