You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: உயிரணுக்கள் ஆக்சிஜனை உணர்வது எப்படி என்ற கண்டுபிடிப்பு வென்றது
உடலின் உயிரணுக்கள் எப்படி ஆக்சிஜனை உணர்கின்றன, எப்படி மாறுபடும் ஆக்சிஜன் அளவுக்கேற்ப தங்களை பொருத்திக்கொள்கின்றன என்பதைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
வில்லியம் கேலின், சர் பீட்டர் ரேட்கிளிஃபீ, கிரெக் செமன்சா ஆகிய மூவரும் கூட்டாக இந்த நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனை உடற்கூறியலுக்கான நோபல் பரிசு என்றும் அழைக்கலாம்.
ஆக்சிஜன் ஆற்றும் பணியும், புதிய கண்டுபிடிப்பும்
உணவை பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றுவதற்கு நமது உடலின் உயிரணுக்களுக்கு (செல்கள்) ஆக்சிஜன் தேவைப்படுகிறது. சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்கு வரும் காற்றில் இருந்து உடல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும், எல்லா உயிரணுக்களுக்கும் ஒவ்வொரு கணமும் பம்ப் செய்தபடியே இருக்கிறது இதயம்.
உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் தூதுவராக செயல்படுகிறது ரத்தம். செல்கள் இயங்குவதற்கு ஒவ்வொரு கணமும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமி கேலின், ரேட்கிளிஃபீ, செமன்சா ஆகிய மூவருக்கும் கூட்டாக மருத்துவத்துக்கான நோபல் பரிசினை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில் இப்படிக் கூறியுள்ளது:
"ரத்த சோகை மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளுக்கு இந்த அழகான கண்டுபிடிப்பு வழி செய்துள்ளது.
ஆக்சிஜனின் அடிப்படை முக்கியத்துவம் பல நூற்றாண்டுகளாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஆக்சிஜன் அளவு மாறுபடும்போது உயிரணுக்கள் எப்படி தங்களை தகவமைத்துக்கொள்கின்றன என்பது நீண்டகாலம் தெரியாமல் இருந்துவந்தது".
உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் அளவு மாறுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது இந்த மாற்றம் நிகழ்கிறது.
எங்கே வேலை செய்கிறார்கள்?
பிரிட்டனின் ஃப்ரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்தவர் சர் பீட்டர் ரேட்கிளிஃபீ.
வில்லியம் கேலின் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்.
கிரெக் செமன்சா அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்