ஆர்க்டிக் பனிப்பொழிவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக்: அதிர வைக்கும் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் வானிலிருந்து விழும் பனிப்பொழிவிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகல்கள் இருப்பதாக கூறுகிறது ஓர் ஆய்வு முடிவு.
ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தப் பகுதியில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன.
இத்தனைக்கும் இந்தப் பகுதிதான் இந்தப் புவியின் அழகிய சூழல் இருக்கும் பகுதி என கருதப்படுகிறது.
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சயின்ஸ் அட்வான்சஸ் எனும் சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.
பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமல்ல பனிபொழிவில் ரப்பர் மற்றும் ஃபைபர் துகள்களும் இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
எப்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது?
ஸ்வால்பார்ட் தீவில் உள்ள பனியை சேகரித்து ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

பட மூலாதாரம், ALFRED-WEGENER-INSTITUT / MINE TEKMAN
ஜெர்மனி ஆல்ஃபர்ட் வெகனர் மையத்தில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவைவிட துகள்கள் அதிகளவில் இருந்துள்ளன.
துகள்கள் மிகவும் நுண்ணிய அளவில் உள்ளதால் இவை எங்கிருந்து வந்தன என்பதை ஆய்வாளர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
தாவர செல்லுலோஸ் மற்றும் விலங்கின் மெல்லிய முடி ஆகியவை இந்த பனிதுகள்களில் இருந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ரப்பர் டையர், வார்னிஷ், பெயிண்ட் ஆகியவற்றின் துகள்களும் இருந்துள்ளன.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆய்வாளர் பெர்க்மேன் பிபிசியிடம் பேசியபோது, "சூழலியல் மாசு இருக்குமென எதிர்பார்த்தோம். ஆனால், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கவில்லை" என்கிறார்.

பட மூலாதாரம், ALFRED-WEGENER-INSTITUT / MELANIE BERGMANN
மேலும் அவர், "இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் எந்த அளவுக்கு மனித உடலில் தாக்கம் செலுத்தும் என தெரியவில்லை. நாம் சூழலியலை காப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்," என்கிறார் அவர்.
ஆர்க்டிக் பெருங்கடலுக்கு பிளாஸ்டிக் மாசு சென்றது எப்படி?
இதற்கு முன்பே சீனா, இரான், பாரீஸ் பகுதியில் இதுபோல பிளாஸ்டிக் துகள்கள் விழுந்துள்ளன.
காற்றில் பறந்து வளிமண்டலத்தில் கலந்து ஆர்க்டிக் பகுதியை இந்த பிளாஸ்டிக் துகள்கள் அடைந்திருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












