மனிதர்களை கவர்வதற்காக நாயின் கண்கள் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாயின் கண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்வதை போன்றோ அல்லது உங்களது கவனத்தை பறிக்கும் வகையிலோ தோன்றினால், அது உங்கள் உணர்வுகளை கையாளும் பரிணாம வளர்ச்சியின் வழியாக இருக்கலாம்.
அதாவது, மனிதர்களின் கவனத்தை தங்கள் மீது செலுத்த வைக்கும் அளவுக்கு நாய்களின் கண்களை ஒட்டிய தசைப்பகுதி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சிறியளவிலான முக தசை நாயின் கண்களை ஒரு "குழந்தை போன்ற" வெளிப்பாட்டைப் பிரதிபலிக்க செய்வதால், அது மனிதர்களின் உணர்வுகளை தூண்டுகிறது என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய கூட்டு ஆராய்ச்சியின் ஊடாக தெரியவந்துள்ளது.

முகமத் மூர்சி நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மூர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67.
அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமியவாத இயக்கமான முஸ்லிம் பிரதர்ஹுட்டின் தலைவராக இருந்த மூர்சி, உளவுப் பார்த்த குற்றச்சாட்டுக்கான குற்றத்தில் விசாரணை கூண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்.
தி முஸ்லிம் பிரதர்ஹுட் இயக்கம் இது ஒரு "கொலை" என தெரிவித்துள்ளது.
செயற்பாட்டாளர்கள் மற்றும் மூர்சியின் குடும்பத்தினர், மூரிசிக்கு இருந்த தீவிர உடல்நல பிரச்சனைகளான உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க:நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்களின் குரல் - திரும்பும் வரலாறு

பட மூலாதாரம், Getty Images
பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை உயர்நிலை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை செய்ததற்கு தமிழர்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பிற மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் அரசு பள்ளிகளில் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை நினைவு கொள்ள வேண்டும்.
இது இரு நூற்றாண்டுக் கதை. 1833ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி கிறித்தவ மிஷினரிகளின் செயல்பாட்டை கட்டுபடுத்த தவறியது. கிறித்தவத்தை பரப்புவதற்கான மிஷினரிகள் படையெடுத்தன, குறிப்பாக தென் இந்தியாவை இலக்கு வைத்தன.

இலங்கை இராவணா செயற்கைக்கோள்

பட மூலாதாரம், BIRDS 3 SATELLITE PROJECT
இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பீகாரில் மூளை காய்ச்சலால் 93 குழந்தைகள் உயிரிழப்பு

பீகாரின் முசாபர்பூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை அங்கு நிலவும் கடும் வெயில் மட்டுமின்றி தங்களது குழந்தைகளை இழந்த 90க்கும் மேற்பட்ட தாய்மார்களின் சூடான கண்ணீரினாலும் வெப்பமுடன் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் அந்நகரத்தில் பரவிய மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நேற்று முன்தினம் இந்த மருத்துவமனையை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்ற சமயத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
அந்த மருத்துவமனையின் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை அறையின் வெளியே கேட்கும் அழுகுரலை கண்ணாடியால் தடுக்க முடியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












