வேகமாக அழிந்து வரும் தாவரங்கள் - எச்சரிப்பது என்ன?

பட மூலாதாரம், REBECCA CAIRN WICKS
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி
கடந்த 250 ஆண்டுகளில் காடுகளில் இருந்த சுமார் 600 தாவர இனங்கள் அழிந்து போயிருக்கின்றன என்று விரிவான ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த எண்ணிக்கை உண்மையிலேயே அழிந்து போன இனங்களின் எண்ணிக்கையே தவிர, உத்தேச மதிப்பீட்டு அடிப்படையிலானது அல்ல. பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர் நில வாழ் உயிரினங்களில் ஒட்டுமொத்தமாக அழிந்து போன எண்ணிக்கையைவிட இது இரு மடங்கு அதிகம்.
தாவர இனங்கள் அழிவது இயற்கையாக எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் 500 மடங்கு வேகமாக நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஒரு மில்லியன் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக மே மாதம் ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது.
உலகம் முழுக்க ஆவணப்படுத்தப்பட்ட தாவர இனங்களின் அழிவுகளை தாங்கள் ஆய்வு செய்ததில், எதிர்காலத்தில் தாவர இனங்கள் அழிவதைத் தடுப்பதற்கான பாடங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அண்மைக்கால நூற்றாண்டுகளில் அழிந்து போன பாலூட்டி அல்லது பறவை இனங்களின் பெயர்களை பலரால் கூற முடியும். ஆனால் அழிந்து போன தாவர இனங்களின் பெயர்களை சிலரால் மட்டுமே கூற முடியும் என்று சொல்கிறார் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆயெலிஸ் ஹம்ப்ரெய்ஸ்.
``இந்த ஆய்வில் தான் முதன்முறையாக எந்தத் தாவர இனங்கள் அழிந்துள்ளன, எங்கே அழிந்துள்ளன, அவை எப்படி வேகமாக அழிந்தன என்பதைப் பற்றி கண்டறிந்துள்ளோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அழிந்து போன தாவர இனங்களில் சிலி சந்தன மரமும் அடங்கும். அது அத்தியாவசிய எண்ணெய் தயாரிப்புக்காக அழிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கடியில் அதிக வளர்ச்சியைக் கொண்டிருக்கும் டிரினிட்டி தாவர இனம், இளஞ்சிவப்பு நிற பூக்களைக் கொண்ட செயின்ட் ஹெலினா ஆலிவ் மரம் ஆகியவையும் இதில் அடங்கும்.
அதிக மதிப்புமிக்க மூங்கில் மரங்களைக் கொண்டிருந்த தீவுகள் மற்றும் வெப்ப மண்டலங்களில் மிகப் பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாவர இனங்கள், தாவர வகைகளில் மதிப்புமிக்கவையாகக் கருதப்பட்டன.
ஆய்வில் தெரிய வந்தது என்ன?
கடந்த இரண்டரை நூற்றாண்டுகளில் 571 தாவர இனங்கள் அழிந்திருப்பதாக கீவ்-ல் உள்ள ராயல் தாவரவியல் கார்டன்ஸ் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பறவைகள், பாலூட்டிகள், நீர் நிலவாழ் உயிரினங்கள் அழிவைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகம் (இவற்றில் ஒட்டுமொத்தமாக அழிந்து போன இனங்களின் எண்ணிக்கை 217).
மனிதர்கள் இல்லாதிருந்தால், சாதாரணமாக நடைபெறும் தாவர இனங்களின் அழிவு வேகத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிக வேகத்தில் இது நடப்பதாக ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், MARTIN CHEEK, RBG KEW
இப்போது நிகழ்ந்து வரும் தாவர இனங்களின் அழிவின் உண்மை நிலையை ஒப்பிடும் போது இதுகூட குறைவான மதிப்பீடாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இருந்தபோதிலும், அழிந்துவிட்டதாக ஒரு காலத்தில் கருதப்பட்ட தாவர இனங்கள் மீண்டும் கண்டறியப் பட்டுள்ளன என்பது ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது. சிலியாவின் குரோக்கஸ் இனம் இவற்றில் ஒன்று.
தாவர இனங்கள் அழிவது ஏன் கவலைக்குரியது?
பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களும் தாவரங்களைச் சார்ந்தே உள்ளன. நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும், சாப்பிடுவதற்கான உணவையும் தாவரங்கள் தான் தருகின்றன.
தாவர இனங்கள் அழிவதால், அதைச் சார்ந்திருக்கும் மற்ற அனைத்து உயிரினங்களும் அழிந்து போகும் அளவுக்கு தொடர் பாதிப்புகள் ஏற்படும். உதாரணமாக உணவுக்கும், முட்டையிடவும் தாவரங்களைச் சார்ந்திருக்கும் சிறுபூச்சி இனங்கள் அழியும்.
தாவர இனங்கள் அழிவது, அனைத்து உயிரினங்களுக்கும் கெட்ட செய்தி என்று கூறுகிறார் கீவ்-ல் உள்ள ராயல் தாவரவியல் கார்டன்ஸ் வனப் பாதுகாப்பு விஞ்ஞானியும் சக-ஆராய்ச்சியாளருமான டாக்டர் எய்மியர் நிக் லுகாதா.
``பல லட்சம் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்குத் தாவர இனங்களைச் சார்ந்துள்ளன. அதில் மனிதர்களும் அடங்குவர். எனவே எந்தப் பகுதியில், எந்தத் தாவர இனங்களை நாம் இழந்து வருகிறோம் என்று அறிவது, மற்ற உயிரினங்களையும் காப்பதற்கான உயிரின பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கான தகவல்களைத் தருவதாக இருக்கும்'' என்று அவர் விளக்குகிறார்.

பட மூலாதாரம், RICHARD WILFORD
நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம்?
தாவர இனங்கள் அழிவதைத் தடுக்க நிறைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்:
- உலகம் முழுக்க உள்ள அனைத்துத் தாவரங்களையும் பதிவு செய்தல்
- உலர் தாவரத் தொகுப்புகள் தயாரிப்புக்கு ஆதரவு அளித்தல். தாவர இன சந்ததியை அறிய இது உதவும்.
- முக்கியமான ஆராய்ச்சி மேற்கொள்ளும் தாவரவியலாளர்களுக்கு ஆதரவு அளித்தல்
- உள்ளூர் தாவரங்களைப் பார்க்கவும், அறிந்து கொள்ளவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்
தாவர இனங்கள் எப்படி, எங்கே, ஏன் அழிகின்றன என்று புரிந்து கொள்வது, சூழலியல் அறிஞர்களுக்கு மட்டுமின்றி மனித சமுதாயத்துக்கே முக்கியமானதாக இருக்கும் என்று, இந்த ஆய்வில் பங்கு வகிக்காத, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராம் சல்குவேரோ-கோமஸ் கூறுகிறார்.
``உணவு, நிழல், கட்டுமானப் பொருள்களுக்கு நேரடியாக நாம் தாவரங்களைச் சார்ந்திருக்கிறோம். கார்பன் நிலைப்படுத்தல், ஆக்சிஜன் உற்பத்தி போன்ற `சூழலியல் சார்ந்த சேவைகளுக்கு' மறைமுகமாக தாவரங்களைச் சார்ந்திருக்கிறோம். பசுமை வெளிகளில் இருக்கும் போது மனிதர்களின் மன நலம் உயர்வதற்கும் கூட தாவரங்களைச் சார்ந்திருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை 'நேச்சர் எக்காலஜி அண்ட் எவலுசன்' (Nature Ecology and Evolution) என்ற சஞ்சிகையில் வெளியானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












