'ஸ்டடி' செயலி: பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பணம் தரும் ஃபேஸ்புக் - நம்பலாமா?

சும்மாவே பணம் கொடுக்கும் ஃபேஸ்புக் - நம்பலாமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

திறன்பேசி பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதற்காக ஃபேஸ்புக் புதிதாக வெளியிட்டுள்ள 'ஸ்டடி' எனும் செயலியை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது தொழில்நுட்ப உலகில் ஆச்சர்யத்துடன், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்ம் விண்டோஸ் என எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இயங்குதளங்களிலும் தயாரிப்பு நிறுவனங்களின் வாயிலாகவும், செயலிகள் வாயிலாகவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலேயே பெறப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது? அதன் நம்பகத்தன்மை என்ன? இதுபோன்ற செயலிகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த கட்டுரை.

பணம் கொடுப்பதற்கான காரணம் என்ன?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை அளிக்கும் பொருட்டு 'ஸ்டடி' எனும் இந்த செயலியை அறிமுகப்படுத்துவதாக கூறுகிறார் அந்நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவின் மேலாளர் சகீ பென்-செடிப்.

"சந்தை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு, பயன்பாட்டாளர்களுக்கு வெகுமதி கொடுக்கும் வகையிலான இந்த செயலியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. சந்தை ஆய்வு தொடர்புடைய செயலிகளிடமிருந்து பயன்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதை மனதில் கொண்டு இதை வடிவமைத்திருக்கிறோம். எங்களது சேவையில் வெளிப்படைத்தன்மை, அனைவருக்கும் வெகுமதி கொடுத்தல், தரவை பாதுகாப்பாக வைத்திருத்தல் போன்றவற்றை உறுதிசெய்திருக்கிறோம்" என்று சகீ மேலும் கூறுகிறார்.

சும்மாவே பணம் கொடுக்கும் ஃபேஸ்புக் - நம்பலாமா?

பட மூலாதாரம், Facebook

அதாவது, வெறும் 730 கேபி அளவுள்ள 'ஸ்டடி' எனும் இந்த ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்பவர்களின் திறன்பேசியிலுள்ள மற்றனைத்து செயலிகளின் விவரம், அதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், அவர்களின் நாடு, பயன்படுத்தும் திறன்பேசியின் தயாரிப்பு விவரங்கள், நெட்ஒர்க் விவரங்கள், பயன்படுத்தும் சிறப்பம்சங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தானாக சென்றுவிடும்.

அதாவது, இத்தனை நாட்களாக சட்டப்பூர்வமற்ற வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயனர்களின் தனிப்பட்ட தரவு திரட்டலை ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், இந்த செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் கணக்கு பெயர், கடவுச்சொல், தனிப்பட்ட புகைப்படங்கள் - காணொளிகள், குறுஞ்செய்திகள் போன்றவை குறித்த தரவுகள் திரட்டப்படமாட்டாது என்றும், தாங்கள் திரட்டும் தரவை மற்ற நிறுவனங்களுக்கு விற்கவோ அல்லது தக்க விளம்பரங்களை காண்பிக்கவோ பயன்படுத்தப்படாது என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் உறுதிமொழி அளித்துள்ளது.

யாரெல்லாம் பங்கெடுக்க முடியும்?

'ஸ்டடி' செயலி முதற்கட்டமாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் அறிமுகப்புடுத்தப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை
இலங்கை

"18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதான குறிப்பிட்ட ஃபேஸ்புக் பயனர்களுக்கு இந்த திட்டத்தில் சேர்ந்து, 'ஸ்டடி' செயலியை நிறுவுருவது தொடர்பான விளம்பரத்தை காண்பிப்போம். அந்த விளம்பரத்தை கிளிக் செய்தவுடன், இதுதொடர்பான அனைத்து விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டு முறை சார்ந்த தகவல்கள் விளக்கப்படும்; அதன் பிறகு, அந்த பயனர் அவற்றிற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், தன்னை இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்த பிறகு, அவற்றில் தகுதியான பயனர்கள் மட்டுமே 'ஸ்டடி' செயலியை நிறுவுருவதற்கான அழைப்பை பெறுவார்கள்" என்று ஃபேஸ்புக்கின் விளக்கப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

'ஸ்டடி' பயன்படுத்த தொடங்கும் ஒருவர், எப்போது வேண்டுமானாலும் இந்த திட்டத்திலிருந்து விலகி கொள்ளலாம் என்றும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த செயலியை பயன்படுத்துபவர்களுக்கு எவ்வளவு கால இடைவெளியில் எவ்வளவு பணம் எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்பது குறித்து ஃபேஸ்புக் அறிவிக்கவில்லை. இந்நிலையில், 'ஸ்டடி' செயலியை பயன்படுத்துபவர்களுக்கு பேபால் இணையதளத்தின் சேவையின் மூலம் பணம் வழங்கப்படும் என்று 'தி வர்ஜ்' எனும் செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதான் முதல் முறையா?

சும்மாவே பணம் கொடுக்கும் ஃபேஸ்புக் - நம்பலாமா?

பட மூலாதாரம், Getty Images

திறன்பேசி பயன்பாட்டாளர்களை மையாக கொண்டு சந்தை நிலவர மதிப்பீடு செயலி என்ற பெயரில் ஃபேஸ்புக் செயலியை அறிமுகப்படுத்துவது இது முதல் முறையல்ல.

ஆம், முந்தைய காலங்களில், 13 முதல் 35 வயதிற்குட்பட்ட திறன்பேசி பயன்பாட்டாளர்கள், 'ஃபேஸ்புக் ரிசர்ச் ஆஃப்' மற்றும் 'ஒனவோ விபிஎன்' ஆகிய செயலிகளை நிறுவினால் அதற்கு கைமாறாக இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தரப்பில் வழங்கப்பட்டதாகவும், மேலும், அதன் மூலம் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் பெறுவது கண்டறியப்பட்டவுடன் அவற்றை ஆப்பிள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிட்டதாகவும் 'டெக் கிரச்' செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, 2013ஆம் ஆண்டு ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய 'ஒனவோ விபின்' செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தங்களது விதிகளை மீறி திரட்டுவதாக ஆப்பிள் கூறியதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. அதேபோன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக, கடந்த ஆண்டு 'ஃபேஸ்புக் ரிசர்ச் ஆஃப்' எனும் மற்றொரு ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியும் ஐஓஎஸ் இயக்குதளத்திலிருந்து நீக்கப்பட்டது.

எந்த ஒரு நிறுவனம் அதிகப்படியான நபர்களின் தனிப்பட்ட தகவல்களை கொண்டுள்ளதோ அதுவே எதிர்காலத்தில் தொழில்நுட்ப துறையில் கோலோச்ச கூடும். எனவே, அதை முதலாக கொண்டு இதுபோன்ற செயலிகளில் நேரடியாக தங்களது தனிப்பட்ட தரவை பகிரலாமா, வேண்டாமா என்று ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :