ஆண்மைக்குறைவு ஆபத்தை விளைவிக்கும் பயிற்சியில்லா 'பாடி பில்டிங்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேம்ஸ் கல்லாஹெர்,
- பதவி, பிபிசி
விஞ்ஞானிகள் ஒரு பரிமாண முரண்பாட்டை கண்டறிந்துள்ளனர். அதாவது, தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்வதற்கு ஆண்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை பாதிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அழகான உடற்கட்டையோ அல்லது தலைமுடி இழப்பதை குறைப்பதற்காகவோ ஆண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், மாத்திரைகளும் அவர்களது ஆண்மையை பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் பெயரை அடிப்படையாக கொண்டு, இதற்கு மோஸ்மான்-பேசி பாரடாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தம்பதிகளிடையேயான உறவில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் இது, கருத்தரிப்பதை கடினமாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"தங்களது ஆண்மையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வரும் ஆண்களில் பலர் உடற்கட்டில் ஆர்வமிக்கவர்களாக இருப்பதை நான் பார்த்துள்ளேன்" என்று கூறுகிறார் அமெரிக்காவிலுள்ள பிரௌன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் மோஸ்மான்.

பட மூலாதாரம், Getty Images
"தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்ள நினைக்கும் ஆண்கள் அதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் அவர்களை மலட்டுத்தன்மை உடையவர்களாக ஆக்குகிறது."
உடற்கட்டை பெறுவதற்கு மருந்துகளை உட்கொண்டு ஹார்மோன்களை தூண்ட செய்து தசைகளின் வளர்ச்சியை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமென்று தெரியவந்துள்ளது.
இதுபோன்ற ஊக்க மருந்துகளை பெரும்பாலும் உடற்கட்டு வீரர்களே பயன்படுத்துகின்றனர்.
"பெரும்பாலும் பெண்களை கவருவதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும் ஆண்களின் தோற்றம் கவர்ச்சிகரமாவதோடு, அவர்களது ஆண்மையும் பாதிக்கப்படுவது முரண்பாடாக உள்ளது" என்று கூறுகிறார் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆலன் பேசி எனும் மற்றொரு ஆராய்ச்சியாளர்.
பரிசோதனையின் முடிவுகள் பிரமாதமாக இருக்கப்போகிறது என்று மூளையின் பிட்யூட்டரி சுரப்பியை அனபோலிக் ஸ்டெராய்டுகள் போலியாக நினைக்க வைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இவ்வாறு ஊக்க மருந்துகள் பிட்யூட்டரி சுரப்பியை ஏமாற்றுவது, விந்தணு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் எஃப்.எஸ்.எச் மற்றும் எல்.எச் ஆகிய இரண்டு ஹார்மோன்களின் செயல்பாட்டை நிறுத்துகிறது.
வழுக்கை ஏற்படுவதை தடுக்க ஆண்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளினாலும் இதையொத்த பிரச்சனையே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஃபாஸ்ட்ரோஸ்டைட் எனும் ஒரு வகை மருந்து டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதை நிறுத்துகிறது. இதன் காரணமாக முடி கொட்டுவது குறைகிறது. ஆனால், அத்தோடு ஆணுறுப்பு விறைப்பு குறைபாடு மற்றும் கருவுருதலுக்கான வாய்ப்பும் குறையக் கூடும்.
"அனபோலிக் ஸ்டீராய்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு 90 சதவீதம் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது" என்று ஆலன் மேலும் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












