You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்?
மரபணு மாற்றம் மூலம், மூட்டு வலி மற்றும் சில வகை புற்றுநோய்க்கு மருந்து தரும் முட்டைகளை இடும் கோழிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இந்த மருந்துகளை முட்டையாக இடும்போது பல மடங்கு விலை மலிவானதாக உள்ளது.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை போன்று இந்தக் கோழிகள் துன்புறுத்தப்படமாட்டாது. மேலும் அவை அன்பாக கவனித்துக் கொள்ளப்படும்.
பெரிய பண்ணைகளில் வாழும், அதிக பயிற்சிபெற்ற தொழில்நுட்பவியலாளர்களால் இவைகளுக்கு உணவும், நீரும் வழங்கப்பட்டு தினமும் நன்றாக கவனித்துக் கொள்ளப்படும். அவை ஒரு வசதியான வாழ்க்கையை வாழும்.
இந்த கோழிகளை பொறுத்தவரை அவை எப்போதும் போல் முட்டைகளை இடுகின்றன எனவே அவற்றின் ஆரோக்கியத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
முன்னதாக மரபணு மாற்றப்பட்ட ஆடுகள், முயல்கள் மற்றும் கோழிகள், முட்டை மற்றும் பால் மூலம் மனிதர்களுக்கு தேவையான புரதத்தை வழங்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்த புதிய முயற்சி பழைய வழிமுறைகளை காட்டிலும் அதிக திறன் கொண்டது என்றும், குறைவான செலவில் நல்ல பலனை தரும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இம்மாதிரியான முட்டைகள், மருந்து தயாரிக்கும் செலவைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கும் எனவே ஒட்டு மொத்தமாக தயாரிப்பு செலவுகள் குறையும் என எதிர்ப்பார்ப்பதாக என எடின்பரோவில் உள்ள ரோஸ்லின் டெக்னாலஜிஸை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெரோன் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளில் மருந்துகளை தயாரிக்க சுத்தமான அறைகளை உருவாக்கும் செலவுகளைக் காட்டிலும் கோழிப் பண்ணைகள் உருவாக்குவது விலை குறைவே.
பல நோய்களுக்கு காரணம் நமது உடல் தானாகவே சில ரசாயனங்களையும், புரதங்களையும் உற்பத்தி செய்யாததே. அம்மாதிரியான நோய்கள், புரதங்களை கொண்ட மருந்துகளை கொண்டு சரி செய்யப்படும். அந்த மருந்துகள், மருந்து நிறுவனங்களால் செயற்கையாக தயாரிக்கப்படுகின்றன.
ஹெரோன் மற்றும் அவரது குழுவினர் மனித உடலில் புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுவை, கோழி முட்டையில் வெள்ளை கருவை உற்பத்தி செய்யும் டிஎன்ஏவில் செலுத்தினர்.
முட்டை கருவில்
கோழி முட்டையில் வெள்ளை கருவை பிரித்து பார்த்ததில், கோழியில் அதிகப்படியான புரதம் இருப்பதை ஹெரோன் கண்டறிந்தார்.
அதில் மனித நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான இரண்டு வகையான புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று வைரஸ் கிருமிகள் மற்றும் புற்றுநோயுக்கு எதிரானதாக செயல்படும் IFNalpha2a. மற்றொன்று சேதமடைந்த திசுக்களை தானாக சரி செய்து கொள்ள உதவும் மேக்ரோஃபேஜ் - சிஎஸ்எஃப்
ஒரு கோழி ஒரு வருடத்துக்கு 300 முட்டைகளை இடும். எனவே கோழிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தால் இதை வணீக ரீதியாக செயல்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
மனித உடலுக்கு தேவையான மருந்துகளை உருவாக்குவது மற்றும் அதற்கான நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கு 10-20 வருடங்கள் ஆகும். இந்த கோழிகளை, மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கான மருந்துகளை தயார்படுத்தவும் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டிபயோட்டிக்குகளுக்கு பதிலாக இந்த மருந்துகள் விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
விலங்குகளின் பாதிக்கப்பட்ட நுரையீரல் மற்றும் சிறுநீரக பாகங்களை சரி செய்ய இந்த மருந்து பயன்படும். தற்போது அந்த மருந்துகளின் விலை அதிகமானவை. எனவே இந்த மருந்துகளை உருவாக்குவது மிகவும் பயனளிக்கும்.
"தற்போது நாங்கள் மனிதர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கவில்லை ஆனால் இந்த மருந்து கண்டுபிடிப்புக்கு தேவையான புரதங்களை கோழிகள் எளிதில் வழங்க முடியும்" என்று இந்த ஆய்வில் தெரிகிறது என்கிறார் பேராசிரியர் ஹெலன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :