You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் அறிமுகம்
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.
மணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் தயாரிப்பு
மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப்டிடி (Hyperloop Transportation Technologies) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைப்பர்லூப்டிடி என்ற நிறுவனம் தனது முதலாவது ஹைப்பர்லூப் வாகனத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. 32 மீட்டர்கள் நீளமும், 5 டன்கள் எடையும் கொண்ட இந்த வாகனத்தில் ஒரே சமயத்தில் 28 முதல் 40 பேர் பயணிக்க முடியும். மிகவும் முக்கியமாக இந்த வாகனம் மணிக்கு 1,223 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனம் பிரான்சிலுள்ள இந்நிறுவனத்தின் சோதனை கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும், வரும் ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவரும், இணை நிறுவனருமான பிபோப் க்ரேஸ்ட்டா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது இந்தியா, இந்தோனீசியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளிலும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் மேலும் கூறுகிறது.
கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் வாகனத்தை முன்பதிவு செய்யலாம்!
பிரபல குரல்வழி சேவையான கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் இனி வாடகைக் கார்களை முன்பதிவு செய்யலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு, ஐபோன், கூகுள் ஹோம் அல்லது கூகுள் அசிஸ்டண்ட் சேவையை அளிக்கும் திறன்பேசி/ ஸ்மார்ட் ஸ்பீக்கரை கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய இடத்தை கூறினால் உபேர், ஓலா போன்ற சில நிறுவனங்களின் கார்களின் வகை, காத்திருக்க வேண்டிய நேரம், செலவுத்தொகை போன்ற விவரங்கள் உடனுக்குடன் கிடைக்குமென்றும், அதில் உங்களுக்கு வேண்டியதை வாய்மொழியாகவே கூறி பயணத்தை இறுதிசெய்யலாம் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுமென்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கூகுள் அசிஸ்டண்ட் ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த செயலியின் ஒட்டுமொத்த வடிவத்தையும் மாற்றி மறுகட்டமைப்பு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பர்சனல் அசிஸ்டண்ட் பிரிவில் முதன்மையான இடத்தை பெறுவதற்கு கூகுள் அசிஸ்டெண்ட், அமேசான் அலெக்சா, மைக்ரோசாப்ட்டின் கொர்டானா, ஆப்பிள் நிறுவனத்தின் சிறி ஆகியவற்றிற்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கூகுள் மேப்ஸின் புதிய சிறப்பம்சங்கள் அறிமுகம்
தெரிந்த இடங்களுக்கு விரைவாகவும், தெரியாத இடங்களுக்கு தெரிந்த இடத்தை போன்று செல்வதற்கும் பயன்படும் கூகுள் மேப்ஸில் மூன்று புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனி பழைய தரவை பகுப்பாய்வு செய்து கொடுக்கப்படும் பயண நேர கணக்கீட்டுக்கு பதிலாக நிகழ்கால போக்குவரத்து நெரிசலை உங்களது பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே அறிந்துகொள்வதற்கென 'கம்யூட் டேப்' என்னும் புதிய வசதியை சேர்ந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நீங்கள் குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணிக்கும்போது வரப்போகும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் தனியே தகவல் தெரிவிக்கும் (Separate Notification) வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
கூகுள் மேப்பை பயன்படுத்திக்கொண்டே அதே செயலியில் பாடல் கேட்டும் வசதியையும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்