ஹோமோபோபியா: இந்த அச்சத்தை போக்குவது சாத்தியமா?

    • எழுதியவர், பப்லோ உகோவா
    • பதவி, பிபிசி

ஒருவரது பாலீர்ப்பை மாற்றும் முயற்சிகளை அறிவியல் உலகம் எப்போதோ கைவிட்டுவிட்டது.

ஒருவரின் இயல்பு நோயே இல்லை எனும்போது அதை குணப்படுத்தவே முடியாது. 1973இல் அமெரிக்காவில் ஒருபாலுறவு நோய்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. 1990இல் உலக சுகாதார நிறுவனமும் அதையே செய்தது.

அதன்பின் 'ஹோமோபோபியா' அதிக கவனத்தை பெற்றது. அந்தப் பதத்தை 1960இல் அமெரிக்க உளவியல் நிபுணர் ஜார்ஜ் வெய்ன்பர்க், ஹோமோபோபியா என்பது ஒருபாலுறவில் ஈடுபடுவோரிடம் நெருக்கமாகப் பழகப் பயப்படுவது என்று விளக்கம் அளித்தார்.

ரோம் தோர் வெர்க்கடா பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்மானுவேல் ஜன்னினி, 2015இல் ஜர்னல் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் சஞ்சிகையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஹோமோபோபியாவை வன்முறை எண்ணங்களுடன் கூடிய நடத்தை உடைய மன நோய் என்று கூறினார்.

இவரது இந்த ஆய்வை ஒருபாலுறவினருக்கு ஆதரவான குப்பை என்று பழமைவாதிகள் விமர்சனம் செய்தனர். ஆனால், பிபிசியிடம் பேசிய ஜன்னினி ஹோமோபோபியா மனநிலை என்பது ஒரு நோய் தன்மைதான் என்று உறுதியாகக் கூறுகிறார்.

ஹோமோபோபியா மனநிலை எந்த அளவு உள்ளது என்பதை அளவிட 551 இத்தாலிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இவர் ஆய்வு நடத்தி அவர்களின் உளவியல் தன்மைகளை அறிய முற்பட்டார்.

அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒருபாலுறவுக்கு எதிரான மனநிலை அதிகம் உள்ள ஹோமோபோபியா கொண்டிருந்தவர்கள் வன்முறை எண்ணங்கள் மற்றும் முதிர்ச்சியற்ற தற்காப்பு எண்ணங்கள் ஆகியவற்றை அதிகம் கொண்டிருந்தார்கள் என்றும் ஹோமோபோபியா மதிப்பு குறைவாகக் கொண்டிருந்தவர்கள் தங்கள் பெற்றோருடன் அதிகம் நெருக்கம் கொண்டவர்களாக இருந்தனர் என்றும் ஜன்னினி கூறுகிறார்.

உளவியல் சிகிச்சை மூலம் இதை சரி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

"ஒரு வேளை நீங்கள் ஒருபாலுறவில் நாட்டம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், நான் ஒருபாலுறவில் ஈடுபடுவதில்லை; எனக்கு ஒருபாலுறவினரைப் பிடிக்காது என்றெல்லாம் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை," என்கிறார் ஜன்னினி.

பல நூற்றாண்டுகளாக ஒருபாலுறவில் ஈடுபடுவது ஒரு நோய் என்று கருதப்பட்டது. ஆனால், அதில் ஈடுபடுவோர் மீது வெறுப்பை காட்டுவதுதான் நோய் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு தனிமனிதரின் சிந்தனைகள் எவ்வாறு அவர்கள் வளரும் சூழல், கலாசாரம் ஆகியவற்றினால் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் ஜன்னினி மற்றும் அவரது குழுவினர் ஆராய்ந்தனர்.

2017இல் பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் இத்தாலி, அதிக முஸ்லிம்கள் மக்கள்தொகை கொண்ட அல்பேனியா மற்றும் பழமைவாதம் அதிகம் உள்ள உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1048 மாணவர்களிடம் ஆய்வு செய்தனர்.

"எந்த மதங்களை அவர்கள் பின்பற்றுகிறார்களோ அது அவர்களின் ஹோமோபோபியா சிந்தனையை முடிவு செய்யவில்லை. ஆனால், மத அடிப்படைவாதத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களுக்கு அதிகமான ஹோமோபோபியா எண்ணங்கள் இருந்தன," என்கிறார் ஜன்னினி.

மிதமான மதவாத சிந்தனை உள்ளவர்கள் தங்கள் மதம் ஹோமோபோபியாவை ஆதரிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

"நாங்கள் குற்றங்களைத்தான் வெறுக்கிறோம், குற்றவாளிகளையல்ல," என்று ரஷ்ய கிறிஸ்தவ பழமைவாத திருச்சபையின் வாதங் கிப்ஸிட்ஷே பிபிசி இடம் தெரிவித்தார்.

"ஒருபாலுறவினரை பாதிக்கப்பட்டவர்களாகவே நாங்கள் பார்க்கிறோம்," என்கிறார் அவர்.

திருச்சபையை சேர்ந்த சில தலைவர்கள் பயன்படுத்தும் பதங்கள் எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது அச்சம் மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் உள்ளது என்று அயர்லாந்தில் உள்ள திருச்சபைகளில் உள்ள எல்.ஜி.பி.டி குழுக்களுக்காக ஆதரவாக செயல்படும் டியர்னா பிராடி கூறுகிறார்.

ஹோமோபோபியா எண்ணங்கள் பிறரிடம் இருந்துதான் ஒருவருக்கு வருகிறது. யாரும் பிறக்கும்போதே ஒருபாலுறவினர் மீதான வெறுப்புடன் பிறப்பதில்லை என்கிறார் அவர்.

எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதான எதிர்மறையான எண்ணம் உலகம் முழுவதும் மாறி வருகிறது. ஆனால், பல நூற்றாண்டுகளாக நிலவிய அந்த எண்ணங்கள் அனைத்தும் ஒரே இரவில் மாறப்போவதில்லை என்று பிராடி கூறுகிறார்.

ஹோமோபோபியா அதிகமாக நிலவும் நாடுகளில்தான் ஒருபாலுறவினர் அதிகமாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் வாழ்கின்றனர். பழமைவாத கலாசாரங்கள் உடைய நாடுகளில் இது அதிகம் எனவும் அவர் வாதிடுகிறார்.

2016இல் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் 645 பேரிடம் ஹோமோபோபியா மனநிலையை அளவிடும் சோதனை ஒன்று நடத்தப்பட்டது.

அதில் பாலியல் சிறுபான்மையினர் அதே இயல்புடன்தான் பிறந்தார்கள், அவர்கள் அனைவரும் ஒன்று போலவே இருப்பார்கள், ஒரு நபர் ஒரு பாலின குழுவில்தான் இருக்க முடியும், அவர்களில் ஒருவரை அறிவதன்மூலம் பாலியல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அனைவரையும் அறிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் அந்த மாணவர்கள் இருந்தார்கள்.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாலியல் சிறுபான்மை சமூகத்தினரை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அதிகமாக இருந்தது.

கல்வியால் விழிப்புணர்வு உண்டாக்குவதன் மூலம் ஹோமோபோபியா குறித்த சிந்தனைகளை நீக்க முடியுமென அந்த ஆய்வை நடத்திய மருத்துவர் கிரான்ஸ்கா கூறுகிறார்.

பொது பிரசாரம், கொள்கை மாற்றங்கள், ஆகியன ஹோமோபோபியா எண்ணத்தை மாற்றும் என அவர் நம்புகிறார்.

ஒருபாலுறுவினர் குறித்து அதிகமாக பிறரை அறிய வைப்பதன்மூலம், எல்.ஜி.பி.டி சமூகத்தினர் அதிகமான உரிமைகளை அடைய முடியும் எனக் கூறுகிறார் கிரான்ஸ்கா.

1999இல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் ஒருபால் திருமணங்களை எதிர்த்தனர்.

ஆனால், தற்போது சுமார் 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஒருபால் திருமணங்களை ஆதரிக்கும் அமெரிக்கர்களின் விகிதம் மூன்றில் இரண்டு பங்காகியுள்ளது.

எல்.ஜி.பி.டி சமூகத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 10% பேர் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்கள் சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பதாக பிறர் அறியவரும் சமயத்தில் ஹோமோபோபியா மனநிலை மாறும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :