You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்ருதாவுக்கு கௌசல்யா எழுதுவது... சந்திப்பும் கடிதமும்
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
தெலங்கானாவில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்யப்பட்ட பிரனாயின் காதல் மனைவி அம்ருதாவை, தமிழகத்தை சேர்ந்த கௌசல்யா நேரில் சென்று சந்தித்தார்.
உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவியான கௌசல்யாவும், அம்ருதாவும் சாதி மாற்றித் திருமணம் செய்து கொண்டு, தற்போது இருவரும் தங்கள் கணவரை இழந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கர் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், தன்னைப்போலவே பாதிக்கப்பட்ட அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடிவெடுத்தார் கௌசல்யா.
தெலங்கானாவுக்கு நேரில் சென்று அம்ருதாவிடம் என்ன பேசினார், இருவரும் என்ன விவாதித்துக் கொண்டார்கள், அவரின் மனநிலை எப்படி இருந்தது என்பதை பிபிசி தமிழிடம் விளக்குகிறார் கௌசல்யா.
கௌசல்யா - அம்ருதா சந்திப்பு
செப்டம்பர் 21ஆம் தேதி காலை சுமார் 10:30 மணியளவில் அம்ருதாவை, அவரது கணவர் பிரனாயின் இல்லத்தில் சந்தித்தேன். அவரை பார்த்தவுடன், நான் யார், எங்கிருந்து வருகிறேன், என் சூழ்நிலை என்ன, எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்று என்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
எனக்கு என்ன நடந்தது என்பதை கூறி, நானும் சங்கரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் அம்ருதாவிற்கு காண்பித்தேன்.
எதனால் நானும் சங்கரும் பிரிந்தோம், என்ன நடந்தது என்பதை அம்ருதா என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். முக்கியமாக இதற்கு என்ன காரணம் என்று கேட்டார். பொருளாதாரம் போன்ற விஷயங்கள் சங்கர் கொலைக்கு காரணமாக இருந்ததா என்று கேட்டார். இல்லை. இதற்கு முழுக்க முழுக்க சாதி மட்டுமே காரணம் என்றேன்.
பிரனாய்க்கும் நீதி வேண்டும்
பின்பு, சங்கர் கொலை வழக்கில் என் தந்தை உள்ளிட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததை குறித்தும் அம்ருதாவுடன் பகிர்ந்து கொண்டேன். அதற்கு அம்ருதா, பிரனாய்க்கும் இவ்வாறு நீதி வாங்கித்தர வேண்டும் என்று கூறினார். இதில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறிய அம்ருதா, தன் அப்பாவோ மாமாவோ வெளியில் வந்தால் தன் உயிருக்கு ஆபத்துள்ளதாக தெரிவித்தார்.
எப்படி இந்த வலியில் இருந்து வெளியே வந்தேன் என்று அம்ருதா என்னிடம் கேட்டார். தமிழகத்தில் ஒவ்வொருவரும் என்னை அவர்கள் வீட்டுப் பெண்ணாக பார்த்துக் கொண்டதை நான் பகிர்ந்து கொண்டேன். நான் இதிலிருந்து வெளியே வர பலரின் பங்களிப்பு இருந்ததாகவும் கூறினேன்.
சங்கருக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், நான் இவ்வாறு நிற்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றும் அவருக்கு தெரிவித்தேன்.
தானும் வலிமையாக இருந்ததாக கூறிய அம்ருதா, அதையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது இல்லையா என்று கேட்டார். அது எனக்கு நன்றாக புரிந்தது.
தன் கருவில் இருக்கும் குழந்தையை சிலர் அழிக்க நினைப்பதாக கூறிய அம்ருதா, தான் நிச்சயம் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். மேலும், சாதியை எதிர்த்து நிற்பதில் அம்ருதா உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், பிரனாய் கொலை செய்யப்பட்ட இரண்டே நாட்களில் ஹைதராபாத்தில் மாதவி என்ற பெண் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது தெரியுமா, நான் சென்று அவர்களை சந்தித்தேனா என்று என்னிடம் கேட்டார். நான் இன்னும் இல்லை என்று கூறினேன்.
இந்தியாவில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக வலுவான சட்டம் வேண்டும் என்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
இவ்வாறு கௌசல்யா தெரிவித்தார்.
மேலும் அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், அம்ருதாவுக்கு தமிழகத்தில் இருக்கும் ஆதரவு கூட தெலங்கானாவில் பார்க்க முடியவில்லை என்று கூறுகிறார். ஒரு சில அமைப்புகள் தவிர இதற்கு எதிரான போராட்டங்களையோ குரல்களையோ யாரும் முன்னெடுக்கவில்லை என்று கௌசல்யா தெரிவிக்கிறார்.
அம்ருதாவை பிரனாயின் இல்லத்தில் சந்தித்துவிட்டு வந்த கௌசல்யா, தனது மனதில் இருந்ததை ஒரு கடிதமாக எழுதி அவரிடம் வழங்கியுள்ளார்.
அம்ருதாவிற்கு கௌசல்யா எழுதிய கடிதம்
இதயத்தில் இருந்த காதலுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அதற்கு சமூகம் ஒரு தடையாகவே இருக்கும்.
அதற்கு ஒரே காரணம்தான். சாதி கட்டமைப்பு உருவாக்கிய வெறுப்பு.
நாம் நம் மனதிற்கு பிடித்த ஒரு நபருடன் வாழவேண்டும் என்பதே ஆசை. ஆனால், அந்த உணர்ச்சியை நம் பெற்றோர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது அம்ருதா. நம் பெற்றோர் நம் மீது அதிக அன்பு வைத்திருக்கலாம். ஆனால், சாதியின் பெருமை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு அதைவிட அதிகம்.
உங்கள் கணவர் பிரனாயை நீங்கள் புரிந்து கொண்டது போல, குடும்பத்தினரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று யோசித்திருப்பீர்கள். சாதி அவர்கள் கண்களை மறைத்ததில் பெற்ற மகளான உங்களையே அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்படி பிரனாயை புரிந்து கொள்ள முடியும். இதில் வியப்பேதும் இல்லை.
பெற்றோர்களால் உங்களுக்கு இப்படி ஒரு காரியத்தை செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டீர்கள். அவர்களின் சாதி மேலாதிக்கத்துக்கு முன்னதாக 'காதல்' என்பது ஒன்றுமில்லை.
பிரனாய் உங்களை ஒரு தாய்ப்போல் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த காதல்தான் நீங்கள் போராட உங்களுக்கு சக்தி கொடுக்கப் போகிறது என்று எனக்கு தெரியும்.
பிரனாயின் குழந்தை உங்கள் வயிற்றில் வளர்வதை எதிர்ந்து நிற்பவர்களை நீங்கள் எதிர்த்து நிற்கப் போகிறீர்கள். உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைதான், அவர்களின் சாதிக்கு எதிராக நீங்கள் பயன்படுத்தப்போகும் சவுக்கடி.
நீதிக்கான இந்தப் போராட்டத்தின்போது, உங்களை போன்ற எண்ணம் கொண்ட நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். சமூக சிந்தனையும் உறுதியும் கொண்ட மக்களை நீங்கள் சந்திக்கும்போது, நீங்கள் நினைத்துப் பாரத்ததைவிட, அர்த்தமுள்ள உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் வலியை தங்கள் வலியாக எடுத்துக்கொள்ளும் மக்கள் இங்கிருக்கிறார்கள். நீங்கள் தனிமையாக உணர வேண்டிய அவசியம் இனி இருக்காது. பிரனாய் உங்களுக்கு ஒரு குழந்தையை விட்டுச்சென்றுள்ளார். ஒரு புதிய சமூக இறக்கத்தை அவர் கொடுத்து சென்றிருக்கிறார்.
பிரனாய் அருகில் இல்லாமல் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். சில காலங்களுக்கு முன், நானும் உங்கள் இடத்தில்தான் இருந்தேன். என் வாழ்க்கை முழுவதும் இருண்டு போனது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
முன்னொரு காலத்தில் நான் பயந்து போயிருந்தேன். என் சங்கர் இல்லாமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடிந்ததில்லை. இரண்டரை ஆண்டுகளாக அவர் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன். பிரனாயை கொன்றவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து நீதியை நீங்கள் வென்றெடுப்பது மிகவும் முக்கியம்.
நாம் இன்னும் நிறைய போராட வேண்டி இருக்கிறது அம்ருதா. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் பெற நாம் வலியுறுத்த வேண்டும். நாம் வாழும்வரை சமூக நீதயின் வீரர்களாக மாறி, சாதி கட்டமைப்பை ஒழிக்க வேண்டும். இதுவே பிரனாய்க்கு நீங்கள் வாங்கித்தரும் நீதி.
சாதியை ஒழிக்க தமிழகத்தில் பலரும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஒவ்வொருக்கும் நீங்கள் குழந்தைதான்.
இக்கடிதம் மூலம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சாதி எதிர்ப்புக்கு போராடும் சக்தியாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவது முதல் அனைத்திலும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நான் என்றென்றும் துணை நிற்பேன் என்று கூறி விடைபெறுகிறேன் அம்ருதா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்