You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு - டிவிட்டர் நிறுவனம்
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் கசிவு - டிவிட்டர் நிறுவனம்
கடந்த ஓராண்டிற்கு மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் (messages) மூன்றாம் தரப்பினருக்கு கசிந்திருக்கலாம் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மென்பொருள் பிழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிவிட்டரினுள் நுழைந்தவுடன் அதில் குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையானது 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீடித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப்பிழையினால் மொத்தம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை வெளியிடாத அந்நிறுவனம், மொத்த பயன்பாட்டாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானோருக்கு மட்டுமே இது பிரச்சனையாக இருப்பதாக கூறியுள்ளது.
டான்சானியா: படகு விபத்தில் 136 பேர் பலி
டான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் பல நூற்றுக்கணக்கானோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில் குறைந்தது 136 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
புகோரோராவிற்கு சென்று கொண்டிருந்த எம் வி நெய்ரே படகு, உகாரா தீவிற்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகாமானோரை அப்படகு ஏற்றிச் சென்றதாகவும், அதில் இருந்தவர்கள் படகின் ஒரு பக்கத்தில் அதிகமாக சென்றதில் அது கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆஃப்ரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் நடந்து வரும் இந்த மீட்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர்கள், ராணுவ முக்குளிப்போர், சிறு தனியார் படகுகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தூதரான பாப் பாடகர் ரிஹானா
பிரபல பாப் பாடகர் மற்றும் நடிகையான ரிஹானா, பார்பேடோஸின் அரசாங்கத்தால் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி, சுற்றுலா மற்றும் மூதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இவர் செயல்படுவார்.
பார்பேடோஸில் செயின்ட் மைக்கெல் என்ற இடத்தில் பிறந்த ரிஹானா, தன் பதின்ம வயது வரை அங்கிருந்தார். பின்பு அமெரிக்கா இசை தயாரிப்பாளர் ஒருவரால் அவரின் திறமை வெளிப்பட்டது.
"தன் நாட்டின் மீது ரிஹானாவிற்கு மிகுந்த காதலும் பற்றும் இருக்கிறது. அவர் ஈடுபட்டு வரும் மனித நேய நடவடிக்கைகள், முக்கியமாக கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் அவர் கவனம் செலுத்துவது மூலம் அது தெரிய வருகிறது" என அந்நாட்டின் பிரதமர் மியா அமோர் மொட்லி குறிப்பிட்டுள்ளார்.
வாய்விட்டு மாட்டிக் கொண்ட அரசியல் தலைவர்
கனடாவில் 75 டாலர்களில் ஒரு குடும்பம், ஒரு வாரத்திற்கு உணவு உண்ணலாம் என்று அந்நாட்டின் அரசியல் தலைவரான பிலிப் கூயர் ரேடியோ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மளிகை பொருட்களின் விலை அவருக்கு தெரியவில்லை என்றும் சாதாரண நிலை குடும்பங்களுடன் அவர் தொடர்பில் இல்லை என்றும் பிலிப் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆண்டு ஒன்றிற்கு உணவுக்கு மட்டும் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 12,000 டாலர்கள் செலவாகிறது. ஒரு வாரத்திற்கு குறைந்தது 140 முதல் 230 டாலர்கள் வரை உணவுக்கு செலவாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்