You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விமானத்தில் காற்றழுத்தம் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?
வியாழக்கிழயைன்று 9 டபிள்யூ 697 ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்து அவர்களுக்கு சிகிகிச்சையும் அளிக்கப்பட்டது.
மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற இந்த விமானம் மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில், திரும்பி வந்து மீண்டும் மும்பையில் தரையிறங்கியது.
விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.
விமானத்தின் கேபினிலுள்ள காற்றழுத்தம் குறையும் வேளையில், பணிகள் என்ன செய்ய வேண்டும்?
விமானம் மேலெழுந்து பறப்பதற்கு முன்னால் சுருக்கமாக சொல்லப்படும் அறிவுறுத்தல்களை பலரும் கேட்டிருக்கலாம்.
அடிக்கடி விமானத்தில் செல்வோர் இதனை அப்படியே சொல்ல முடியும்.
"ஆக்ஸிஜன் முகமூடி கீழே விழும். அதனை எடுத்து உங்களை நோக்கி இழுத்து குழந்தைக்கு உதவுவதற்கு முன்னால் உங்கள் முகத்தில் பொருத்தி கொள்ளுங்கள்....."
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நிகழ்ந்துள்ளதை பார்த்தால், இந்த சுருக்கமான விமானப் பயணக் குறிப்புகள் எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வரும்.
விமானம் பறக்கும் உயரம்
பயணியர் விமானம் வழக்கமாக 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இந்த உயரத்தில் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.
நீங்கள் சாதாரணமாக மூச்சுவிட முடியவில்லை என்றால், தன்னிலையிழத்தல், சுயநினைவிழைத்தல், இறுதியில் மரணம் என பாதிப்புக்கள் தொடங்கும்.
இந்த பாதிப்புகள் தொடங்குவதற்கு முன்னர் உங்களுக்கு இருக்கின்ற அவகாசம் சுமார் 12 வினாடிகள் மட்டுமே.
விமானங்கள் மேலேழும்போதும், கீழிறங்கும்போதும், அதன் கேபினில் இருக்கும் காற்றழுத்தம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாகதான் பயணிகளின் காது அடைக்கும்.
பயணியர் புகார்கள்
விமான கேபினில் காற்று அழுத்தம் குறையும்போது, நன்கு ஒத்திகை செய்யப்பட்ட செயல்முறை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அப்போது சாதாரணமாக சுவாசிக்கக்கூடிய காற்று கிடைக்கின்ற சுமார் 8,000 அடி உயரத்திற்கு விமானத்தை விரைவாக இறக்கிவிட வேண்டும்.
கீழுள்ள வான்பரப்பு போக்குவரத்து பாதையில் சிக்கல் இல்லாததை உறுதிசெய்து கொள்வதற்கு அவசரமாக நடைமுறைகளை ஆலோசித்தல், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தோடு தொடர்பு கொள்ளுதல் வேண்டும்.
வேறு ஏதாவது அமைப்புகள் பழுதடைந்துள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும்.
விமானத்திலுள்ள ஆக்ஸிஜன் அமைப்புகள் 12 நிமிடங்களுக்கு மட்டுமே ஆக்ஸிஜனை சேமித்து வைத்திருக்கும் என்பதால், அவசர நேரத்தில் ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியமானவை.
விமான கேபினில் காற்றழுத்தம் குறையும் நேரத்தில் பயணிகள் இரண்டு புகார்களை தெரிவிப்பதாக அனுபவம் வாய்ந்த விமான கேபின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
1.ஆக்ஸிஜன் முகமூடிகள் வேலை செய்யவில்லை.
2.விமான ஊழியர்கள் எதுவும் சொல்லவில்லை.
பொதுவாக, விமானத்தில் விழுந்து தொங்குகின்ற முகமூடிகள் வழியாக ஆக்ஸிஜன் மெதுவாக வரும். இதனால், அதில் ஏதோ கோளாறு உள்ளது என்று பயணிகள் குழப்பமடைய வாய்ப்புள்ளது.
சிலவேளைகளில் பயணியர் அதிக கவலையடைந்து, ஆக்ஸிஜன் முகமூடியை மேலிருந்து வலிந்திழுக்க தொடங்கிவிடுவர்.
இத்தகைய அவசர நிலையில், விரைவாக விமானத்தை கீழிறக்குவது ஏன், என்ன நடக்கப்போகிறது என்று விளக்காவிட்டால் பயணிகள் பெரும் அச்சம் அடைவர்.
விமான ஊழியர்களுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால், அந்த நிலைமையை கையாளுவதில் அவர்கள் முழுமூச்சோடு பணியாற்றி கொண்டிருப்பதால், பொதுவாக இதனை விளக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
தீப்பொறிகள் மற்றும் புகையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பயணிகளை விட இறுக்கமாக விமான ஊழியர்களும் ஆக்ஸிஜன் முகமூடியை அணிந்திருப்பார்கள்.
பயணிகளுக்கு ஆக்ஸிஜன் முகமூடி விரைவாக கிடைப்பதுபோல விமான ஊழியர்களுக்கும் அவை கிடைக்கின்றன. அவர்களுக்கு அருகில் எந்த முகமூடி இருக்கிறதோ, அதனை மாட்டிக் கொண்டு அமர்ந்துவிட வேண்டும் என்று அவசரகால வழிகாட்டு முறை கூறுகிறது.
சில வேளைகளில் இதுவொரு பயணியின் ஆக்ஸிஜன் முகமூடியாகவும் இருக்கலாம். இருக்கை எண்ணிக்கையைவிட ஒரு ஆக்ஸிஜன் முகமூடி ஒவ்வொரு இருக்கை வரிசையிலும் அதிகமாக இருக்கும். குழந்தைகளோடு பயணிப்போருக்கு இந்த ஆக்ஸிஜன் முகமூடி கிடைக்கும்.
இந்த சிக்கல்களின் மத்தியில் பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பது எல்லாவற்றையும் மிகவும் கடினமாக்குகிறது.
காற்றழுத்தம் குறைவதால் ஏற்படும் அவசர நிலை, விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவில் ஒரு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தும்.
ஆனால், ஜெட் ஏர்வேஸ் விமான சம்பவத்தில் கேபின் காற்று அழுத்தம் குறைந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் சரியாக வேலை செய்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
47 நொடிகளில் இலக்கை அடையும் விமானம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்