You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாப் ஆயர் கைது
2014 முதல் 2016 வரை 13 முறை கன்னியாஸ்திரீ ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிரான்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல முறை முறையிட்டும் கத்தோலிக்க திருச்சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்திய 44 வயதான கன்னியாஸ்திரீ ஒருவர் கடந்த ஜூன் மாதம் இது பற்றி காவல்துறையில் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீக்கு ஆதரவு தெரிவித்த பிற கன்னியாஸ்திரீகள் சேர்ந்து இதுவரை இல்லாதவகையில் போராட்டங்களை நடத்த இந்த விவகாரம் வழிகோலியது.
இந்தியாவின் மிகவும் பழமையான கிறிஸ்தவ சமூகங்களில் ஒன்றுக்கு இந்த வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தேசிய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த 54 வயதான ஆயர் பிரான்கோ மூலக்கல் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆயர் மூலக்கல் சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளார்.
ஆயர் பிரான்கோ மூலக்கல்லை அவரது பணியில் இருந்து கத்தோலிக்க தலைமைப்பீடமான வத்திக்கான் வியாழக்கிழமை தற்காலிகமாக விடுவித்தது.
அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ள கன்னியாஸ்திரீ, ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற 'மிசினெரிஸ் ஆப் ஜீசஸ்' கன்னியாஸ்திரீகள் சபையை சேர்ந்த, கேரளா மாநிலத்திலுள்ள கன்னியர் இல்லத்தை சேர்ந்தவர் ஆவார்.
கேரளாவிலுள்ள கோட்டயம் நகரிலுள்ள கன்னியர் இல்லத்துக்கு ஆயர் மூலக்கல் சென்றிருந்தபோது இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட இந்த கன்னியாஸ்திரீ குற்றஞ்சாட்டுகிறார்.
பாதிக்கப்பட்டவர் ஊடகங்களிடம் இதுவரை பேசவில்லை. ஆனால், வத்திக்கானுக்கும், இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள போப்பின் பிரதிநிதிக்கும் வெளிப்படையான கடிதம் ஒன்றை இந்த மாதத்தின் தொடக்கத்தில் அவர் எழுதியுள்ளார். இது வத்திக்கானுக்கு எழுதுகின்ற 4வது கடிதம் என்று அவர் கூறியுள்ளார்.
"எல்லா பக்கங்களிலும் புறக்கணிப்பை நாங்கள் அனுபவிக்கிறோம். ஆயர்களை, பாதிரியார்களை மட்டுமே கத்தோலிக்க திருச்சபை கவனத்தில் கொண்டுள்ளதாக உணர்கிறோம். திருச்சபையின் சட்டத்தில் கன்னியாஸ்திரீகளுக்கும், பெண்களுக்கும் நீதி வழங்கும் சரத்து ஏதாவது உள்ளதா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்" என்று அவர் எழுதியுள்ளார்.
இரண்டு வாரங்களாக இந்த ஆயரை கைது செய்ய வேண்டும் என்று போராடிய கன்னியாஸ்திரீகள் இந்த ஆயர் கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளனர்.
"எங்களது முதல் சுற்றுப் போராட்டத்தில் நாங்கள் வென்றுள்ளோம்" என்று கேரளா உயர் நீதிமன்றத்திற்கு அருகில் இந்தப் போராட்டங்களை தலைமையேற்று நடத்திய கன்னியாஸ்திரீ அனுபமா பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
"அமைதியாக துன்பப்படும் இது போன்ற கன்னியாஸ்திரீகள் பலருக்கானதுதான் இந்தப் போராட்டம். எமது கன்னியாஸ்திரீகள் எல்லாரும் நீதி பெறும் வரை எமது போராட்டம் தொடரும்" என்று அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்