You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க இந்துகள் குடியரசுக் கட்சி மீது கோபத்தில் இருப்பது ஏன்?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அதிபர் டிரம்பின் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், இந்திய வாக்காளர்களையும் இந்துக்களையும் கவரும் வகையில் வெளியிட்ட பத்திரிகை விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஃபோர்ட் பெண்ட் கவுண்டியை சேர்ந்த ஆளும் குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உள்ளூர் நாளிதழில் ஒரு பக்கத்திற்கு நான்கு கைகளை கொண்ட விநாயகரின் படத்தை வெளியிட்டிருந்தனர்.
அந்த விளம்பரத்தில், விநாயகரின் தலை முதல் கால் அருகே இருக்கும் எலி வரை ஒவ்வொரு பகுதிக்கும் விளக்கம் வேறு கொடுத்திருந்தனர். மேலும், படத்திற்கு கீழே, அமெரிக்காவிலுள்ள இந்துக்களை கேள்வி கேட்கும் வகையில், நீங்கள் ஒரு கழுதையை வணங்குவீர்களா? அல்லது யானையை வணங்குவீர்களா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகம்தான் கடும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
சரி, குடியரசு கட்சியினர் இந்திய கடவுளை எதற்காக விளம்பரமாக கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு பின்னால் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.
உடலில் மூன்று நட்சத்திரங்களை கொண்ட யானைதான் குடியரசு கட்சியின் சின்னம். அதுமட்டுமின்றி, 2010 சென்சஸ் புள்ளிவிபரங்கள்படி, டெக்சாஸில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் பேர். அமெரிக்காவில் உள்ள இந்துக்களை குறிவைத்தே டிரம்ப் ஆதரவாளர்கள் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், குடியரசு கட்சியினரின் இந்த யோசனை இப்படி சொதப்பலில் முடிந்துவிட்டது.
ஜனநாயக கட்சியினரும், பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அமெரிக்க வாழ் இந்தியரும், நாடாளுமன்ற வேட்பாளருமான ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மதம் சார்ந்த உருவத்தை அரசியல் கட்சியுடன் ஒப்பிடுவதென்பது பொருத்தமற்றது. ஃபோர்ட் பெண்ட் கவுன்டி குடியரசு கட்சி இந்த விளம்பரத்தை திரும்பப்பெற வேண்டும் என்று கண்டித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரான இல்ஹான் ஒமர், குடியரசு கட்சியினரின் இந்த விளம்பரம் வெறுக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஃபோர்ட் பெண்ட் கவுண்டி குடியரசு கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளனர். விநாயகர் சதூர்த்தியை கொண்டாடும் வகையிலே இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும் ஃபோர்ட் பெண்ட் கவுண்டி குடியரசு கட்சியின் கட்சியின் தலைவர் ஜேசி ஜேட்டன் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்