தெலங்கானாவில் மேலும் ஒரு கலப்புத் திருமண தம்பதி மீது கொலைவெறி தாக்குதல்

ஹைதராபாத்தில் சாதி மறுத்து காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி மீது புதன்கிழமை கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இணையரிலும் கணவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் சாதி மறுத்து காதல் திருமணம் செய்துகொண்ட தலித் ஆண் ஒருவர் தன் மனைவி கண்ணெதிரே கொல்லப்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த சாதி மறுப்புக் காதல் தம்பதி தாக்கப்பட்டுள்ளனர்.

2013 முதல் காதலித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப் டிட்லா-வும் வேறொரு சாதியைச் சேர்ந்த மாதவியும் ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.

இந்த திருமணத்தை விரும்பாத மாதவியின் தந்தைதான் இந்த தம்பதி மீது அரிவாளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புதன்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் நெரிசலான எஸ்.ஆர்.நகர் சந்திப்பில் நிகழந்துள்ள இந்த தாக்குதல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தாடை மற்றும் காது பகுதியில் படுகாயம் அடைந்துள்ள மாதவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த மேற்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் ஏ.ஆர் ஸ்ரீநிவாஸ், "19 வயதான மாதவியும், 22 வயதான சந்தீப்பும் மாதவியின் தந்தை மனோகர் ஆச்சாரியால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்திலுள்ள எஸ்ஆர் நகரில் பிற்பகல் சுமார் 4 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது. குடும்பங்களிடம் தெரிவிக்காமல் செப்டம்பர் 12ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக தனது மகள் திருமணம் செய்து கொண்டதால் மாதவியின் தந்தை கோபம் கொண்டதாக தோன்றுகிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இருவரும் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளனர்" என்று கூறியுள்ளார்,

மாதவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இப்போது தந்தையை கைது செய்திருப்பதாகவும், அவர் மது போதையால் இருப்பதாவும் கூறியுள்ளார். தனது அனுமதியின்றி திருமணம் செய்த மகள் மீது கோபமாக இருந்ததாகவும், தன்னை சந்திக்க வருமாறு மகளை தான் அழைத்ததாகவும் தொடக்க விசாரணையில் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தந்தையின் ரத்தத்தில் 375 என்ற அளவில் மது அளவு இருந்ததாகவும் ஏ.ஆர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.

"கார் ஷோரூமுக்கு வெளியே நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்த ஷோரூமுக்கு வெளியே ஜோடி ஒன்று பைக்கை நிறுத்துவதை பார்த்தோம்". அந்த சமயம் இன்னொரு நபர் பைக்கில் வந்தார். அவர் அரிவாள் கொண்டு அந்த நபரை தாக்க தொடங்கினார். அந்த பையன் ஓடிவிட்டான். அப்பெண் தரையில் விழுந்தாள். அவளை அரிவாளால் மீண்டும் மீண்டும் தாக்கினார். தடுக்க முயன்ற எங்களை நோக்கியும் வெட்டுவதாக அவர் அரிவாளை காட்டினார்.

சம்பவத்தின் சிசிடிவி விடியோ பதிவு:

தாக்கிய மனிதர் சாலையை தாண்டி ஓடி தப்பித்துவிட்டார். அங்கு நின்றவர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திரும்பி வந்த அந்த இளைஞரிடம் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்தோம். அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் அவருடைய மாமனார் என்று அந்த இளைஞர் கூறினார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ரமேஷ் கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான சந்தீபின் உறவினர் ராம் கூறுகையில், "இந்த ஜோடி சில நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டது. எங்கள் குடும்பத்திற்குரிய ஹோட்டலில்தான் இவர் வேலை செய்கிறார். அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே அறிமுகமானவர்கள். மணமகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சோந்தவர். அந்த பெண் விஸ்வகர்மா சாதியைச் சேர்ந்தவர்.

இந்த ஜோடி காதலித்து ஆரிய சமாஜ் மந்தரில் திருமணம் செய்து கொண்டது. திருமணத்திற்கு பின்னர் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில், இந்த இளைஞர் மாதவியை நன்றாக கவனித்து கொள்வார் என்று மணமகன் குடும்பத்தார் வாக்குறுதி அளித்தனர். இருந்தாலும், பெண் வீட்டாரை இது சமாதானப்படுத்தவில்லை. இந்த தாக்குதல் இன்று ஏன் நடைபெற்றது என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. சாதி வேறுபாடுகள் இருப்பதால் பெண்ணின் தந்தை இவ்வாறு செய்திருக்கலாம் என்று எண்ணுகிறேன் என கூறியுள்ளார்.

சந்தீபின் இன்னொரு உறவினரான சதீஷ், "எனது சகோதரனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரால் பேச முடியவில்லை. தன்னை தாக்கிவிட்டதாக கூறிய அவர் என்னை உடனடியாக வரச்சொன்னார். 10 நிமிடத்தில் சம்பவ இடத்தை அடைந்தேன். அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்தேன். அவரது கன்னத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் வந்த பெண் வீட்டார் இனி அந்தப் பெண் தங்களுடையவர் அல்ல என்று கூறிவிட்டு சென்றனர். நல்கொண்டா மாவட்டத்தின் மிர்யலகுடாவில் நிகழ்ந்த பிரனாய் மற்றும் அம்ருதா சம்பவத்தால் இந்த பெண்ணின் தந்தை தூண்டப்பட்டிருக்கலாமென தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :