You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரியனை ஆய்வு செய்யும் விண்கலனை விண்ணில் செலுத்தியது நாசா
இதுவரை எந்த விண்கலனும் செல்லமுடியாத சூரியனின் கொரோனா என்னும் பகுதிக்கு நாசா தனது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
'பார்க்கர் சோலார் ப்ரோப்' என்னும் அந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து வானத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது.
முன்னதாக, நேற்று (சனிக்கிழமை) விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த விண்கலம், கடைசி நேரத்தில் ஏற்பட்ட வானிலை மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலன் வழங்கும் என்று நாசா கூறியுள்ளது.
இந்த விண்கலம் என்ன செய்யப்போகிறது?
இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியப் புயல் (Solar Wind) எப்படி உருவாகிறது என்பதை கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியப் புயல்கள் பூமியை தாக்கும்போது ஏற்படும் வெப்பக்காற்று ரேடியோ அலைகள் மற்றும் செயற்கைக்கோள்கள் செயற்பாட்டை பாதிக்கக்கூடும்.
பூமியிலிருந்து சுமார் 91 மில்லியன் மைல்கள் தொலைவிலுள்ள சூரியனின் வளிமண்டல மேலடுக்கை இந்த விண்கலம் படிப்படிப்பாக நெருங்கி 2024 ஆண்டுக்குள் சென்றடையும்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் அப்லைட் பிசிக்ஸ் லபோர்டோரியை சேர்ந்த விஞ்ஞானியான நிக்கி பாக்ஸ் பேசுகையில், "சூரியனின் கொரோனா பகுதியை சென்றடைந்தவுடன் சுமார் ஏழு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றிவரவுள்ள இந்த விண்கலம்தான், மனிதன் படைத்த விண்கலங்களிலேயே மிகவும் வேகமானது" என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்