You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் போன்றும் ருசித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த ரொட்டிகளுக்குள் வறுத்த மாமிசத்தை வைத்து முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும். இதுவே பழமையான சேன்விச்சாகவும் இருக்கிறது.
ஜோர்டன் நாட்டின் பாலைவனத்தில் இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பார்லி மற்றும் கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவில், தாவரங்களின் பொடியாக்கப்பட்ட வேர்கள் மற்றும் தண்ணீர் சேர்க்கப்பட்டு, கற்காலத்தில் ரொட்டிகள் சுடப்பட்டன.
ஜோர்டனில் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ரொட்டி செய்யப்பட்டது எப்படி?
கோதுமை மற்றும் பார்லியிலிருந்து மாவு எடுக்கப்பட்டது.
நீரில் வளரும் காட்டு தாவரங்களின் கிழுங்குகள் (வேர்கள்) உலர வைக்கப்பட்டு தூளாக்கப்பட்டன.
இவற்றில் தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு போல பிசையப்பட்டது.
சுற்றி நெருப்பு வைக்கப்பட்ட சூடான கற்களில் ரொட்டி சுடப்பட்டது.
"கலப்பு உணவு தயாரிக்கப்பட்டு, சமையல் செய்ததற்கான பழமையான ஆதாரம் இது" என்று பிபிசியிடம் பேசிய, லன்டன் கல்கலைக்கழக பேராசிரியர் டொரியன் ஃபுல்லர் கூறினார்.
தட்டையான ரொட்டிகளுடன், வறுத்த மான் போன்றவற்றை அவர்கள் சாப்பாட்டாக உண்டுள்ளனர்.
உலகில் உள்ள பல நாடுகளில் ரொட்டிகள் பிரதான உணவாக இருக்கின்றன. ஆனால், இது எப்போது தோன்றியது என்ற தகவல் தெளிவாக இல்லை.
தற்போது வரை, துருக்கியில் ரொட்டி தயாரிக்கப்பட்டதற்கான பழமையான ஆதாரங்கள் உள்ளன. இந்த கண்டுபிடிப்புகள் 9000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை.
இது தொடர்பாக இரண்டு கட்டடங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை, பெரிய வட்டமான நெருப்புத் தகடுகளும், அவற்றில் ரொட்டி துகள்களும் இருந்தது தெரிய வந்தது.
"கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்தில் இருக்கும் உணவு கலாசாரத்தின் இணைப்பாக ரொட்டி திகழ்வதாக" கோபன்ஹேகன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் அமையா கூறுகிறார்.
அக்காலத்தில் மக்கள் வேட்டைகாரர்களாக இருந்தார்கள். மான் வகைகளை வேட்டையாடி, முயல்கள் மற்றும் பறவைகள் போன்றவற்றை பிடித்து வைத்திருப்பார்கள்.
மேலும், உணவுகளுக்காக பழங்கள் மற்றும் தானியங்களையும் அவர்கள் நம்பியிருந்தனர்.
ஏதாவது கொண்டாட்டம் அல்லது விருந்து காலங்களில் மக்கள் கூடும்போது ரொட்டிகள் செய்யப்பட்டன என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.
இவையெல்லாம் விவசாயத்தின் வருகைக்கு முன் நடந்தவை. விவசாயத்திற்கு முன்பாக தானிய பயிர்களை அவர்கள் வளர்க்க ஆரம்பித்தனர்.
அப்போது இருந்த ரொட்டிகள், பீட்டா பிரட் அல்லது சப்பாத்தி போல இருந்திருக்கக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்