ஆல்கஹால் தவிர்ப்பதால் உங்களுக்கு என்ன நன்மை?

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு மக்களில் நிறைய பேர் ஜனவரி மாதம் முழுவதும் மது அருந்துவதை தவிர்க்க முடிவு செய்கிறார்கள். இது அவர்களுக்கு நன்மை பயக்கும் என நம்புகிறார்கள்.

ஆல்கஹால் விஷயத்தை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு மதுவற்ற ஜனவரி திட்டத்தில் பிரிட்டனில் 50 லட்சம் மக்கள் பங்கு பெற்றனர்.ஆகவே இது போன்ற திட்டங்களால் என்ன நன்மை கிடைக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்?

உடல் எடை குறைப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை காலகட்டத்தின்போது கூடிய எடையில் சில கிலோ கிராம்களை குறைக்க முடிவது முக்கிய பலன்களில் ஒன்று.

ஆல்கஹால் வெற்று கலோரிகளால் நிரம்பியுள்ளது. இதில் கிட்டதட்ட ஊட்டச்சத்துக்களே இல்லை ஆனால் உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.

600 மி.லி கொண்ட ஒரு பீர் பாட்டிலில் 200கி கலோரி வரை இருக்கிறது.இது ஒரு பாக்கெட் மொறு மொறு வகை நொறுக்குத்தீனியில் இருக்கும் கலோரிகளுக்கு சமம்.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் ஆல்கஹால் கால்குலேட்டரின்படி, நீங்கள் தினமும் ஒரு பெரிய கோப்பை அளவுக்கு மது அருந்துபவராக இருப்பின் இந்த மாதம் முழுவதும் அதனை தவிர்த்தால் பத்தாயிரம் கலோரி வரை உங்கள் உடலில் சேர்வதை தவிர்க்க முடியும்.

நன்றாக தூங்குங்கள் குறைவான குறட்டையுடன் !

ஆல்கஹால் அருந்தும்போது நீங்கள் நன்றாக தூக்கம் வருவது போல உணரலாம் ஆனால் அடிக்கடி அருந்துவது உங்களது தூக்கத்தின் பாங்கை மாற்றி உங்களை சோர்வுக்குள்ளாக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு, சசெக்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவர் ரிச்சர்ட் டி விஸ்ஸர் பருவ வயதை தாண்டிய 857 பேரிடம் ஜனவரி மாதம் ஒரு ஆய்வை நடத்தினார். ஆல்கஹால் அருந்தாமல் ஒரு மாதம் தூங்கச் சென்றவர்களில் 62% பேர் நல்ல உறக்கத்தை பெற்றதாக கூறியுள்ளனர்.

ஆல்கஹால் குடிப்பது உங்களது தொண்டையிலுள்ள திசுக்களை தளர்த்துவதால் குறட்டை விட வைக்கும்.

அதிக சக்தி

நீங்கள் மது அருந்துவதை நிறுத்திவிட்டால் ஹேங்ஓவர் என சொல்லப்படும் மனது சொல்வதை உடல் செய்யத் திணறும் நிலையை தவிர்க்க முடியும். மேலும் நீங்கள் நல்ல தூக்கத்தை பெறுவதன் மூலம் புத்துணர்ச்சியுடன் ஆற்றல் மிக்கவராக உணர முடியும்.

மருத்துவர் டி விஸ்ஸர் ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் இருவர் ஆல்கஹால் அருந்துவதை விடுத்த பின்னர் அதிக ஆற்றல் இருந்ததாக கூறியுள்ளனர்.

நல்ல தோல்

ஆல்கஹால் உங்கள் உடலில் நீர் சத்தை குறைத்துவிடும். அதற்கு தோலின் பொழிவை விலையாக கொடுக்க நேரிடலாம் என்கின்றனர் சிலர்.

சிலர் ஆல்கஹால் அருந்துவது முகத்தில் திட்டுகளை தந்துள்ளதாக கூறியுள்ளனர். ஆல்கஹாலை தவிர்த்து தண்ணீரை அருந்துவது உங்கள் முகத்தை மேலும் பொலிவாக்க உதவும் என அறிவுறுத்தப்படுகிறது.

பணத்தைச் சேமியுங்கள்

எளிதாக மதிப்பிடக்கூடிய ஒரு விஷயம் உங்களின் வங்கி இருப்பு நன்றாக இருப்பதே. நீங்கள் மதுவுக்காக அதிகம் செலவிடக்கூடிய நபராக இருந்தால் மதுவை தவிர்ப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு பணத்தைச் சேமிக்க முடியும்.

ஒரு பெரிய கோப்பை மது அருந்துவதை ஒவ்வொரு இரவும் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் சுமார் 124 பவுண்டு அளவுக்கு ஜனவரி இறுதியில் சேமித்துவிட முடியும். பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி மையமானது டிரையத்லான் எனச் சொல்லப்படும் மது அருந்துவதை ஒரு மாதம் கைவிடும் போட்டிக்கு கையெழுத்திடுவதன் மூலம் மக்கள் மதுவை தவிர்த்து அதன் மூலம் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதிஉதவி அளிக்க வேண்டுகோள் விடுக்கிறது.

சாதனை உணர்வு

இலக்கை அடைவதன் மூலம் மன உறுதியை தக்கவைத்திருப்பது உங்களுக்கு மன நிறைவான உணர்வைத் தரும்.

மருத்துவர் டி விஸ்ஸரின் ஆய்வான 'மதுவற்ற ஜனவரி' பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட நான்கில் மூவர், ஆறு மாதங்களுக்கு பின்னர் குறைந்த அளவிலான தீங்கு விளைவிக்கும் குடிப்பழக்கத்தை பராமரித்துவருகின்றனர்.

மது அருந்துபவரின் விறைப்புத்தன்மை

ஆல்கஹால் மக்களை மோகம் கொள்ள வைக்கலாம். ஆனால் அது ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாட்டுடன் தொடர்புடையது. ஆல்கஹாலை தவிர்ப்பது சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்மை குறைபாட்டை மீட்டெடுக்க உதவும்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :