You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: கோவை ஆர்.எஸ்.புரம் - நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி:
நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். இந்த ஆண்டு குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், போலீஸ் சமுதாய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் 10 காவல் நிலையங்கள். சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்வு செய்யப்பட்டன என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர்:
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வகையில் 40 ஆயிரம் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை இன்று முதல் களம் இறக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. பணிக்கு வராத 52 ஆயிரம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓடாத அரசு பேருந்துகளுக்கும், ஓட்டாக ஓட்டுநர்களுக்குச் சம்பளம் எழுதி ஊழல் செய்யும் அபாயம் உள்ளது என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டுக்குழு அறிவித்துள்ளது எனவும் தினமலர் செய்தி கூறுகிறது.
தினமணி:
தமிழகத்தில் ஆளுநர் நடத்தும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகில் உள்ள டி.டிவி தினகரனின் பண்ணை வீட்டில் சீல் வைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்து வருமான வரித்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர் என்ற செய்தியும், திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என அக்கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற செய்தியும் தினமணியில் வந்துள்ளது.
தி இந்து (தமிழ்)
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால்தான் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தான் ஓர் இந்து என்பது தெரிகிறது. ஆனால், மாட்டிறைச்சி உண்பதை ஊக்குவித்துக் கொண்டே தான் ஓர் இந்து என்று சித்தராமையாவால் கூறிக்கொள்ள முடியாது என பெங்களூருவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார் என தி ஹிந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில், சசிகலா ஆஜராக வேண்டுமா என்பதை விசாரணை ஆணையம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், இது வரை 15க்கும் மேற்பட்டவர்களை விசாரணை ஆணையம் விசாரித்துள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்