ட்விட்டர் பதிவில் எழுத்துக்களின் வரம்பு உயர்கிறது: சோதனை முயற்சி தொடக்கம்!

டுவிட்டர்

பட மூலாதாரம், Reuters

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், அதன் பயன்பாட்டாளர்கள் தங்களது "கருத்துகளை எளிதாக வெளிப்படுத்தும்" வகையில் ஏற்கனவே ஒரு பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கி சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது.

ட்விட்டரில் ஏற்கெனவே கருத்து பதிவிடும் எழுத்துக்களின் உச்ச வரம்பான 140ஐ, இரண்டு மடங்காக, அதாவது 280 எழுத்துக்களாக அதிகரித்து சில பயனாளர்களிடையே சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

தற்போது ட்விட்டர் அளித்து வரும் உச்ச வரம்பு, சில பயனாளர்களுக்கு "அதிகபட்ச ஏமாற்றத்தை" அளிப்பதாக தனது சமீபத்திய வலைப் பதிவொன்றில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதத்தில் தொய்வைக் கண்டு வரும் ட்விட்டர் நிறுவனம், இந்த சமீபத்திய மாற்றத்தின் மூலம் பரவலை அதிகப்படுத்தவும் மற்றும் புதிய பயனாளர்களை கவரவும் உதவும் என்று எதிர்பார்க்கிறது.

டுவிட்டர்

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images

"உங்கள் சிந்தனைகளை ஒரு ட்வீட்டில் நெருக்க முயற்சி செய்கிறோம் - நாம் அனைவரும் அதை உணர்கிறோம், அது ஒரு வலி," என்று ட்விட்டரின் தயாரிப்பு மேலாளர் அலிசா ரோசன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய, கொரிய மற்றும் சீன மொழிகளில் குறைந்த எழுத்துக்களிலேயே அதிபட்ச தகவலை வெளிப்படுத்த முடியும் என்பதால், அந்த மொழிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து மொழிகளிலும் இந்த சோதனை முயற்சி நடந்து வருவதாக ரோசன் கூறியுள்ளார்.

"ட்விட்டரை பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு 140 எழுத்துக்களுடன் உணர்ச்சி பிணைப்பு இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் - எங்களாலும் அதை உணர முடிகிறது."

"ஆனால் நாங்கள் இதை முயற்சித்தோம், அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் பார்த்தோம் மற்றும் இந்த புதிய, இன்னும் சுருக்கமான, கட்டுப்பாட்டுடன் கூடிய மாற்றத்தை விரும்பினோம்," என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :