You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கலர் தெரபி': இயற்கை மருத்துவத்தில் புதிய யுக்தி
நெய்வேலியைச் சேர்ந்த 22 வயது சதீஷ்குமாருக்கு குடலில் புண் ஏற்பட்டு, அல்சராக மாறியது. சதீஷ்குமார் பரிசோதித்த மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகள், மருந்துகள் கொடுத்த பின்னர், அவருக்கு மாத்திரைகள் மட்டுமே வழங்கமுடியும், அவரை குணப்படுத்தமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள்.
''மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் பல வண்ணங்களில் மாத்திரைகள் கொடுத்தார்கள். இறுதியில், எனக்கு ஏற்பட்டுள்ள சீர்கேட்டை சரிசெய்ய முடியாது, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஆனால், நான் பலம் இழந்துவருவதை உணர்ந்தேன்,'' என்றார் சதீஷ்.
இறுதி வாய்ப்பாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையை தேடி வந்தார் சதீஷ்.
துக்கமின்மையை போக்கிய சிகிச்சை
சதீஷ் உடல்நலத்தில் கடந்த இருபது நாட்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி அவருக்கு சிகிச்சை அளித்த இயற்கை மருத்துவர் விகேன்ஷ்வரன் ,''சதீஷ்குமாரின் உடலில் ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்த மஞ்சள் நிற கண்ணாடி வழியாக சூரிய ஒளியை வயிற்றுப் பகுதியில் செலுத்தினோம். மஞ்சள் நிறம், கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. அதோடு யோகா, உணவு முறையில் மாற்றம் போன்றவற்றை அவர் பின்பற்றியதால், தற்போது சதிஷ் குமாருக்கு மலம் கழிப்பதில் சிக்கல் குறைந்து, ரத்தம் வருவதும் வெகுவாக குறைந்துவிட்டது,'' என்றார்.
நிறசிகிச்சையின் போது உடல்நலமாகிவிடும் என்ற நம்பிக்கை வந்ததாக கூறும் சதீஷ்குமார். ''சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட நீல நிற கண்ணாடி பாட்டிலில் உள்ள தண்ணீரை பருகச்சொன்னர்கள்'' என்றார்.
''ஒரு துணியில் களிமண்ணை வைத்து அதனை ஈரப்பதமாக கண்கள், வயிற்றுப் பகுதியில் வைத்தார்கள். உடல் சூடு குறைந்து, நன்றாகத் தூங்கினேன், நல்ல தூக்கத்தால் மன அமைதியும் ஏற்பட்டது. உடல் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது,'' என்று மேலும் தெரிவித்தார் சதீஷ்குமார்.
எண்ணங்களை மேம்படுத்தும் வண்ணங்கள்
சதீஷ்குமாரைப் போன்ற பலர் மலச்சிக்கல், மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மையால் பலர் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தொடக்க காலத்தில் அரசு யோகா இயற்கை மருத்துவமனையில் நிறசிகிச்சை தரப்படுகிறது என்கிறார் இயற்கை மருத்துவர் மற்றும் துணை பேராசிரியர் தீபா சரவணன்.
பிபிசியின் பிற செய்திகள்:
''இயற்கை மருத்துவத்தில் வெறும் உடலுக்கு மட்டுமே சிகிச்சை தரமுடியாது. உடல், உள்ளம், மூளை என அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். வண்ணங்களுக்கு நம் எண்ணங்களை மேன்மைப்படுத்தும் குணம் உள்ளது என்பதால் நிறச்சிகிச்சையை தருகிறோம். நிறசிகிச்சையை முதல் நிலையாகக் கொண்டு பின்னர் உணவு முறையை மாற்றுவது, யோகா பயிற்சிகள் போன்றவை அளிக்கப்படும் என்கிறார் மருத்துவர் தீபா.
ஒவ்வொரு நிறத்திற்கும் இருக்கும் குணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு உணவில் எடுத்துக்கொள்வது என அவர் விளக்குகிறார்.
உடல் நலம் என்பதில் மன நலம் மற்றும் உணவு எடுத்துக்கொள்ளும் முறை, நம் அன்றாட வாழ்க்கையில் உடல்நலத்தில் எடுத்துக்கொள்ளும் அக்கறை ஆகியவையும் அடங்கும் என்கிறார் தீபா.
''பயத்தைப் போக்க நிறசிகிச்சை''
இயற்கை மருத்துவத்துடன், நிறசிகிச்சை மேற்கொண்ட திருவள்ளூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், ஒரு மாத காலத்திற்கு பின்னர் அரை கிலோமீட்டர் தூரம் நடக்க யாருடைய உதவியையும் நாடுவதில்லை என்கிறார் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எஸ். எட்மின் ஜெனிட்டா.
56 வயதில், தனது பெற்றோர்களை பார்த்துக்கொள்வது, தனது மகன் மற்றும் மகளின் எதிர்கால வாழ்க்கை, தனது சம்பாத்தியம் என பல கவலைகள் ஹரிகிருஷ்ணனை ஆட்கொள்ள, அதனால் அவர் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார்.
''அவரது உடல்நலன் பற்றிய பயம், அதைப் பற்றியே பேசுவது, பிறரிடம் விசாரிப்பது என நோய் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தார். நோயில் இருந்து விடுபட மனதில் தெளிவு வேண்டும், குணம் பெற வேண்டிய செயல்களை செய்யவேண்டும்,'' என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
ஹரிகிருஷ்ணனுக்கு வாழை இலை குளியல் மூலம் உடலின் இறுக்கம் குறைக்கப்பட்டது, அதே போல வண்ணத்தை மனதில் வைத்து தியானிக்கும் பயிற்சி, மன அமைதியை அதிகப்படுத்தச் சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட நீல வண்ண பாட்டிலில் வைக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்பட்டது என்கிறார் மருத்துவர் எஸ். எட்மின் ஜெனிட்டா.
ஹரிகிருஷ்ணனின் பிரச்சினையில் நோய் குறித்த பயத்தைப் போக்க நிறசிகிச்சை பயன்தந்தது என்றார் ஜெனிட்டா.
அறிவியல் பூர்வமானதா நிறசிகிச்சை?
நிற சிகிச்சையின் பயன்கள் குறித்து அறிவியல் ரீதியாக எவ்வாறு புரிந்துகொள்வது என்று ஸ்டானலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உளவியல் துறையின் தலைவர் அலெக்சாண்டர் ஞானதுரையிடம் கேட்டபோது, ''மேற்குலக நாடுகளில்தான் நிறசிகிச்சை குறித்த ஆய்வுகள் பெருமளவு நடந்துள்ளது. இந்தியாவில் தொடக்க நிலையில்தான் நிறசிகிச்சை உள்ளது'' என்றார்.
ஆரம்பகட்ட சிகிச்சையாக நிறசிகிச்சை இருக்கும் என்று கூறிய அவர், ''ஒவ்வொரு வண்ணமும் நம் மூளையைத் தூண்டும் ஆற்றல் கொண்டவை. வெள்ளை நிறத்திற்கு அமைதிப்படுத்தும் குணம் உண்டு. ஒருசில உணவுகளின் வண்ணத்தைவைத்தே நாம் சாப்பிட முடிவுசெய்கிறோம். அதுபோல வண்ணங்கள் நமது சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன'' என்றார் அலெக்சாண்டர் ஞானதுரை.
''தற்போது வீடுகளுக்கு வண்ணம் பூசுவதில் பலர் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு அறைக்கும் விதவிதமான வண்ணங்களைப் பூசுவது இதற்குசாட்சி. நிறசிகிச்சையை கூட்டுசிகிச்சையாக எடுத்துக்கொள்ளலாம் (allied therapy). எல்லா நோய்களுக்கும் இதில் மட்டுமே தீர்வை கொடுக்கமுடியும் என்ற சொல்லமுடியாது '' என்றார்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்